ஆர் வத்ஸலா
உனது மூன்று முகங்களை
கண்டு உன் பால்
ஈர்புற்றவள்
நான்
ஒரு மகனின் ஆதூரத்துடன்
அணுகி
எனக்கு தேவையானதை
நான் கேட்காமலேயே
தந்தாய்
ஒரு நண்பனாக என்னுடன்
விவாதித்தாய்
பல்வேறு விஷயங்களை
வியக்கத்தக்க வகையில்
நாம் கருத்தொருமித்தோம்
ஒரு கண்டிப்பான ஆசானாக
எனக்கு சிலதை
மிக நன்றாக கற்றுக் கொடுத்தாய்
பிறகு வந்தது ஒரு நீள்மௌனம்
குதறிப் போட்டுக்
கொண்டு
பல்லாண்டு
என்னை
காயங்கள் ஆறி
நான் மீளும் நேரமிது
இப்போது புதிதாகக் காட்டுகிறாய்
நான்காம் முகத்தை
முன்பின் தெரியாத
ஒரு நான்காவது மனிதனைப் போல்
எனது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்தெழும்
அன்பொழுகும் வாழ்த்துக்களுக்கு
உதட்டளவில் நன்றியும்
பதில் வாழ்த்துகளும்
கூறிப் போகிறாய்
கருணை காட்டு –
மீண்டும் மௌனி,
தயவு செய்து,
எனது தீர்மானங்களை
கண நேரம் மறந்து
நான் உன்னை
வாழ்த்தித் தொலைத்தாலும்