ஆர் வத்ஸலா
நான்கு வயதில்
முதல் சுதந்திர நாள் அன்று
நடுநிசியில்
அப்பாவின் தோள் மேல் அமர்ந்து
தெரு நிறைந்த கூட்டத்தோடு
குட்டிக் குரலில்
‘ஜெய்ஹிந்த்’ சொன்னது
நினைவிருக்கிறது
ஆறு வயதில்
பள்ளியிலிருந்து திரும்புகையில்
வாத்தியார் எழுதிய ‘குட்’
மழையில் அழியாமலிருக்க
‘சிலேட்’ பலகையை
நெஞ்சோடணைத்து
வீட்டிற்கு நடந்தது
நினைவிருக்கிறது
பதினாறில்
கல்லூரி கும்பலோடு
மெரினாவில் கும்மாளம் போட்டது
மறக்கவில்லை
பிரசவித்தவுடன்
முகமெல்லாம் வாயாக
அழுத மகளின் முதல் தரிசனம்
மறக்கவில்லை
பின்னர் வந்து சென்ற பல கசப்புகள்
கசப்பை துறந்து
நிலை கொண்டிருக்கின்றன மனதில்
வெறும் விவரங்களாய்
மூன்றாம் தலைமுறையின்
கூத்துகள்
ஒன்றுவிடாமல் மனதிலமர்ந்து
இனிக்கின்றன
ஆனால்
சற்று முன் கையிலிருந்த
சூடான காபி கோப்பையை
தேடுகிறேன்
வீடு முழுவதும்
அரை மணியாய்