இந்த நேரத்தில் ஏமப் பெருந்துயில் மண்டபத்தின் எட்டாவது படுக்கையில், என்றால் விருந்தினர் பேழையில் மிக்க மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஒருவர் வந்திருக்கிறார். தேளரசு செய்யும் உன்னதமான 50வது நூற்றாண்டில்லை. அதற்கு மிகப் பிந்தைய, மூன்றாம் நூற்றாண்டு மனிதர்.
கவிஞர் அவர். மருத்துவர். மருத்துவர் நீலனார் என்னும் கவிஞர். ஆயுள் நீடிக்க அவர் காலத்துக்கும் முற்பட்ட ஓலைச்சுவடியில் பதிந்து வைத்த அறிவைக் கெல்லி எடுத்துக் கொண்டு வந்தவர். சுவடி சொற்படி மூலிகைகளைத் தேடித் தெளிவுற்று இனம் கண்டு சேகரித்தவர்.
எனினும் மருந்து உருவாக்கும்போது சிறு தவறு ஏற்பட சோதனை எலிகள் பறந்துவிட்டதால் பழிக்கப்பட்டவர்.
அவரை அவர் ஒளிந்திருந்த வழுக்குப்பாறை குகைத் தொடரில் கண்டு பிடித்து காலத்தினூடே நாற்பத்தெட்டு நூற்றாண்டு பயணமாக்கினர். பயணம் இந்த மையத்தில் முடிய, உடலும் உள்ளமும் சீரடைய அவர் ஆழ்நிலை உறக்க ஓய்வில் உள்ளார்.
மருத்துவர் விழித்தெழும்போது உடனே மருந்து உண்டாக்க முடியும் என்று தேளரசு நம்புகிறது. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து அழைத்து வரப்பட்ட விருந்தாளி இவர்.
வரும்போது சற்றே பேசவும் நடக்கவும் உண்ணவும் சிந்திக்கவும் செய்தார் என்றாலும் தற்போது ஒத்துழைப்பு குறைவுதான். அவரது நியூரான் தொகுதியை அப்படியே இன்னொருவருக்குள் பகர்ந்து பார்க்க ஒத்துழைக்க அவர் விரும்பவில்லை. அதி விரைவில் பணிந்து விடும் சூசனைகள் உள. இரண்டு வாரம் முன் நடந்தது இது –
அவசரமாக அடுத்த மண்டபத்தில் குடியேற்ற யாரையோ கொண்டு வந்திருக்கிறார்கள். பாதி மனிதனும் மீதி தேளனுமாக உருவானவன். இப்போது மனிதத் தலை தனி, மனித உடல் தனி என இரண்டு பகுதிகளும் தனித்தனியாக இயங்கக் கூடியவனாம். குழலன் நான் குழலன் என்று அரற்றிக் கொண்டிருக்கிறான்.
மருத்துவரை அழைத்து வரும்போது குகைக்குள் இருந்த பிரகிருதி என்றும் முதல் ஆய்வில் உருவான தேள் மனிதனின் குறைப் பிறவி அவன் என்றும் செவிலியர் நின்று பார்த்துத் தகவல் பகர்கிறார்கள்.
அவர்களில் ஒன்பது பேரை மானுடச் சேரிகளில் விட்டுவிட்டு வந்திட, அங்கே அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. வழுக்குப் பாறை குகைக்குள் மிகப்பெரும் தலையாக இவர் சீவித்திருக்க, இவருக்கும் மருந்து புகட்டியிருப்பார் மருத்துவர் நீலர் என ஐயமுண்டு. இது நிற்க.
இந்தப் பேழைக்கு உள்ளிருந்து திறக்கப் பூட்டு இல்லை. உள்ளே இருப்பவர்கள் பிரக்ஞை தவறியிருப்பர் என்பதால் உள்ளிருந்து பேழையைத் திறக்கும் பேச்சே இல்லை.
இன்று காலையில் குழலன் என்ற தலை மட்டுமான பிறவி எப்படியோ பேழைக்கு வெளியே வந்திருந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்தத் தலை குரலுயர்த்தி அகவியது இந்த அளவில் இருந்தது –
நியாயம் என்பது மொத்தக் கொள்ளை அடித்துக் கக்கத்தில் வியர்வை நாற்றத்தோடு சுருட்டி வைத்தீரே, எனக்கு, இந்தப் புனைவு போன்ற பிறவி குழலனுக்கு நியாயம் தருவீர்.
என்னை ஏன் பிறப்பித்தீர் என் உடல் சொன்னபடி நான் தேளனா அல்லது இந்தச் சிரம் மறுத்துக் கூறியபடி மானுடத் தலையா? இரண்டு வகை வாழ்வும் எனக்கு மறுக்கப்படுவது என்ன வகை நியாயம்?
அரற்றியபடி இருந்த தலையைக் கண்டஞ்சினர் அங்கிருந்தோர். காவலாளிகள் கனமான பசைபோல் சோப்பு நுரையைத் தரையில் வெளிவரவைத்துத் தலையை நுரை சூழ வைத்தது. மெல்ல அழுத்தம் அதிகமாகி நுரைமாலை தலையை நெருக்கிப் பேழைக்குள் அதைக் கொண்டு செலுத்த முயன்றது.
குழலனின் தேள் உடல் அசையாமல் பேழைக்குள் இருந்தாலும் தேள் கொடுக்கு தனியாக அந்த உடலை ஒட்டி இறுகப் பற்றி, தாயை அணைத்த சேய் போல் தழுவிக் கிடந்தது. தலை பேசப் பேசக் கொடுக்கு விதிர்த்து அதிர்ந்து தன் ஒப்புதலைத் தலைக்கு அளித்தது.
எனக்கும் தனி உயிர்ப்பு வேண்டும் என்று சன்னமான குரலில் வீறிட்டது அது. மரப் பல்லி வால் நீக்கிக் கால் பற்றிச் சுவரேறும்போது தனித்த உயிராக வால் மட்டும் உயிர் கொண்டு துடிக்க, மனிதனுக்கு அடுத்த தோளாக வந்த கொடுக்கு எதற்கு அற்று வீழணும்?
தலை தனியாகத் துடிக்கும் கொடுக்கைப் பார்த்துச் சிரித்தது. என் குறிக்கும் தனி உயிர் கேட்க வேண்டும் போலிருக்கிறதே எனப் பறைந்தபடி மெல்ல வெளியேறியது.
அட மடையா, மானுடத் தலையும், தேள்க்குறியுமாக என்ன குப்பை கொட்டப் போகிறாய்? மனுஷியைத் தேளுறுப்பு கொண்டு புணர்வதோ அல்லது தேள்பெண்டை நூறு மடங்கு பெரிய தலையோடு கலப்பதும் நடக்கக் கூடியதா எனக் கேட்டுக் கொடுக்கு அதிர்ந்தது.
தேள் கடுப்பன்ன நாட்படு தேறல் என்று நீண்ட காலம் பழையதாக்க வைத்திருந்த கள் சுவைத்ததும் தேள் கொடுக்கால் கொட்டியது போல் வலி ஏற்படுமென்று இலக்கியம் சொல்கிறதாமே. தேள் கள் உண்ணாததால் அவை அறியாத சுவை அது.
தேளைத் தேளே கொட்டினால் ஒரு வேளை அந்தச் சுவை ஓரளவு அறிய வைக்கலாம். தலைக்கு எதற்கு இலக்கியம்? கொடுக்குக்கு எதற்கு மாதுவும், மதுவும்?
குழலன் சொல்லாமல் தவிர்த்தது இற்றைப் படுத்தப்பட்ட செய்தி – இப்போது தலை, உடல் இரண்டும் தனித்தனியாக இயங்கக் கூடியவை என்பதோடு இரண்டும் மனிதத் தலை, மனித உடல் என்றுமாக இயலும்.
துயிலரங்கில் விளக்குகள் மங்கலான ஒளி ஒழுக சுற்றும் கனமாக உயர்ந்த் நின்ற குளிர்மை கூடுதலானது. வாசல் கதவு மெல்ல சத்தமெழாமல் திறக்கப்பட ட்ராலி ஒன்றில் பட்டுடுத்த பெருந்தேளர்.
அப்படித்தான் தெரிந்தது ஆனால் அவர் ஏன் அறுவை சிகிச்சைக்குப் போகிறதுபோல் ட்ராலியில் கிடத்தப்பட்டு வருவார்?
இது பெருந்தேளர் இல்லை. அவரது உயரத்திலும் கனத்திலும் உருவத்திலும் நிறையக் கடன்வாங்கிச் சமைத்த இன்னொரு யாராக இருக்கும் அது?
குழலன் வந்தவரை இனம் கண்டுகொண்டான். உற்சாகம் பொங்கக் கூவினான் –
பெரும் இளைய தேளரே, நீரும் இங்கே முடித்துக்கொள்ளப் போகிறீரா, வருக வருக. பெருந்தேளருக்கு இளவலாகப் பிறந்த குற்றத்துக்காக உம்மை இத்தனை நாள் உயிர் நீக்காமல் இருந்தது எப்படி என்பதே ஆச்சரியம். உமக்கும் இன்று துயிலரங்கேற சந்தர்ப்பம் கிட்டியதோ வருக.
யார் அது இருட்டில் என்னோடு பேசுவது? யாராக இருந்தாலும் நான் உன்னோடு பேசப்போவதில்லை. அண்ணரே பெருந்தேளர் அண்ணரே. நான் ஒரு தவறும் செய்யவில்லை. இருந்தால் என்னை மன்னித்து விடும். இங்கே துயிலக் கிடத்த வேண்டாம். தயவு செய்தருள்க. என்னை விடுதலை செய்தருள்க. நான் உயிர்ப்பிச்சை கேட்கிறேன். பிழைத்தால் உம் கண் காணாத தூரத்தில் மண்ணில் வளை தோண்டியிருந்து கிடப்பேன். உம் எச்சிலை, உம் நரகலை தினம் மூன்று முறை வணங்கி உண்பேன். மன்னியுங்கள் என்னை மன்னியுங்கள்.
கொண்டு வரப்பட்டவன் விசும்பத் தொடங்கி ஓவெனக் குரலெடுத்து அழுதான். ட்ராலி பேழைகளுக்கு நெருக்கமாக நகர்ந்தது
கடைசிப் பேழைக்கு அருகே நின்றது அது. பெருந்தேளரின் தம்பி பாதி மானுட உடலோடு வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க வலுக்கட்டாயமாகக் கிடத்தப்பட்டான். மூச்சை யாரோ நிறுத்துவதுபோல் அவன் குரல் விட்டு விட்டு ஒலித்தது.
பேழை இறுக அடைத்துக் கொண்டது.