ரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

author
0 minutes, 3 seconds Read
This entry is part 3 of 6 in the series 30 ஜூலை 2023

சுலோச்சனா அருண்

சென்ற சனிக்கிழமை 22-7-2023 கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழில் எழுதப்பட்ட வெளிநாட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டன. கலை, இலக்கிய ஆர்வலர்கள் பலர் மண்டபம் நிறைந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஐ. எம். எச். ஓ தலைவரும், வைத்திய கலாநிதியுமான  வரகுணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். முதலில் மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசியகீதம், அகவணக்கம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலரும், மாணவ தன்னார்வத் தொண்டர் சிலரும் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வின் போது செல்வி திவாணி நாராயணமூர்த்தி அவர்களால் நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. வெளிநாட்டுச் சிறுகதைகள் முதற்பிரதியைப் பட்டயக்கணக்காளர் திரு. ஆனந்தராசா அவர்களும் ‘பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பின் முதற்பிரதியைப் பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி வரகுணனும் பெற்றுக் கொன்டனர். சிறப்புப் பிரதிகளை வைத்திய கலாநிதி மோகன், வைத்திய கலாநிதி பிரசாந்தன், திருமதி சத்தியவான், தனுசா இராஜதுரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து எழுத்தாளர் குரு அரவிந்தன் ஏற்புரை வழங்கினார்.

24 சிறுகதைகளைக் கொண்ட வெளிநாட்டுக் கதைகள் தொகுப்பிற்குக் கலாபூஷணம் கோகிலா மகேந்திரன் அணிந்துரை எழுதியிருந்தார், எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருந்தார். மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பிற்கு கலாநிதி மைதிலி தயாநிதி அணிந்துரை எழுதியிருந்தார், கலாபூஷணம் திருமதி ஞானம் ஞானசேகரன் வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

கனடாவில் பிறந்து வளர்ந்த சுமார் நாற்பது இளைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் போது, தமிழில் உரையாடிச் சிறுவர் நாட்டிய நாடகம் ஒன்றை நடித்துக் காட்டி, நடனமாடி அனைவரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டனர். இதைவிட வீணை இசை, நடனம், பாடல்கள், பயனுள்ள உரைகள் போன்ற கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. மன்றத்தலைவர் யாழினி விஜயகுமாரின் உரையைத் தொடர்ந்து பிரதமவிருந்தினர் உரை இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் போது குரு அரவிந்தன் அவர்களின் நூல்கள் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினால்’ விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.  இந்த விற்பனையில் சேகரித்த பணம் முழுவதும் இலங்கையில் உள்ள தமிழ் உறவுகளின் சுகாதார, வைத்திய தேவைகளுக்காக ஐ.எம்.எச்.ஓ (International Medical Health Organization) நிறுவனத்தினரிடம் சொப்கா குடும்பமன்றத்தால் அன்பளிப்பாகக் கையளிக்கப்பட்டது.  செயலாளரின் நன்றி உரையைத் தொடர்ந்து இரவு உணவு வழங்கப்பட்டு, நிகழ்வு சிறப்பாக முடிவுற்றது.

Series Navigationகனடாவில் புதிதாக $4800 மெகா வாட் ஆற்றல் உடைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்புநாவல்  தினை              அத்தியாயம் இருபத்தைந்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *