தேசிய புத்தகநாள் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

This entry is part 2 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

சுலோச்சனா அருண்

ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 2023 தேசிய புத்தகவிரும்பிகள் தினத்தை ((National Book Lover’s Day)முன்னிட்டுக் கனடாவில் உள்ள ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ சர்வதேச ரீதியாகப் புத்தகம் வாசிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். புத்தகம் வாசிக்கும் தினத்தை முன்னிட்டு நிகழ்வில் பங்குபற்றிய அதன் அங்கத்தவர்கள் புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். தமிழ்நாடு, இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற இடங்களில் உள்ள வாசகர் வட்டத்தினரிடம் இந்த வாசிப்பு நிகழ்வு பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்கள் பற்றிய சர்வதேச எழுத்தாளர்கள் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூலைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான மு.முருகேஷ் அவர்கள் ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருந்தார். சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், ஒலிப்புத்தகங்கள், பயணக்கட்டுரைகள், மேடைநாடகம், திரைக்கதை வசனம் போன்ற குரு அரவிந்தனின் ஆக்கங்கள் பற்றிய திறனாய்வுகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

இளம் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டு போவதால் அதை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி சர்வதேச ரீதியாக வாசகர் வட்டத்தினரிடம் முன்னெடுக்கப்பட்டது. தொலைக்காட்சியிலும், செல்போனிலும், முகநூலிலும் முழுநேரமும் மூழ்கிப் போய் இருப்பவர்களைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு இந்த நிகழ்வு அறிமுகமானது.

பல அங்கத்தவர்கள் விருப்போடு இந்த நிகழ்வில் பங்கு பற்றியிருந்தார்கள். வாசகர் வட்டத்தினருக்கு இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்காகக் கனடாவில் இருந்து எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

‘தமிழ் ஆரம்’ சிறுவர் நூலில் சிறுவர் பாடல்களைப் படித்துப் பார்த்தது மட்டுமல்ல, ஆர்வமிகுதியல் சில பாடல்களைப் பாடமாக்கியும் வைத்திருக்கின்றேன். ‘குவாகுவா வாத்து எங்கு போனாய் நேற்று’ என்ற பாட்டையும், ‘எங்க வீட்டுத் தோட்டத்தில் சின்னச் சின்னச் செடிகளில்’ என்ற பாடலையும் உடனே பாடமாக்கிவிட்டேன் என்று சிந்துஜா என்ற சிறுமி மகிழ்ச்சியோடு சொன்னார்.

இன்னுமொரு வாசகர் வட்ட அங்கத்தவரான சிவசுதன் புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடும் போது, ‘புத்தகங்கள் நல்ல நண்பன் போலப் பொதுஅறிவைப் பெற்றிட உதவியாக இருப்பது மட்டுமல்ல, என்னை எழுதவும் தூண்டுகின்றன’ என்று குறிப்பிட்டார்.

‘குரு அரவிந்தன் அவர்களின் பயணக் கட்டுரைகளை வாசிக்கும் போது வரலாறு சார்ந்த பல விடயங்களை அறிந்து கொண்டதுடன், நானும் அவருடன் பயணம் செய்தது போன்ற உணர்வையும் பெற்றேன்’ என்று கனடிய வாசகரான கந்தவேள் என்பவர் குறிப்பிட்டார்.

இம்முறை பரீட்சார்த்த நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியதால், இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, அடுத்த வருடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வமுள்ள சில பாடசாலைகளிலும், நூலகங்களிலும் இதுபோன்ற நிகழ்வை முன்னெடுக்க குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர்.

Series Navigation780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்ததுரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்தது
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *