ஆர் வத்ஸலா
அடுத்த முறை
யாரிடமாவது
அன்பு செலுத்தினால்
வெளிக்காட்டாதே
இப்படி அதை
அடுத்தமுறை
காண்பிக்காதே
கண்களில்
இத்தனை கரிசனத்தை
யாரிடமும்
அடுத்தமுறை
வெளிப்படுத்தாதே
இவ்வளவு அழகான சொற்களில்
உன் மதிப்பை
யாரிடமும்
அடுத்த முறை
பிரதிபலிக்காதே
உன் கண்களில்
யார் வலியையும்
இவ்வாறு
அடுத்த முறை
உன் சொந்த ஊரின் பெயரை சொல்லாதே
உனதன்பு நிரந்தரம்
என நம்புபவரிடம்
நீ விலகிய பின்
தைத்து நிற்கக் கூடும்
முட்களாக
இவற்றின் நினைவுகள்
அவர் மனதாழத்தில்
நாள்காட்டியில்
தேதி கிழித்ததும்
உனது ஊர் கோவிலில்
திருவிழா அன்றென்றறிந்து
எழலாமவை
சுரீரென
எனக்கு ஒன்றுத் தோன்றுகிறது
இதெயெல்லாம் விட
அடுத்த முறை
நீ அன்பு செலுத்தாதையேன்
யாரிடமும்
இந்த அளவு