வளவ. துரையன்
என் அம்மா அதிகமாகச்
சிரிக்கமாட்டாள்.
அவர் சிரித்து
நான் பார்த்தது இல்லை.
தொலைக்காட்சி நகைச்சுவைகள்
அவருக்குத் துளிக்கூடச்
சிரிப்பை வரவழைக்காது.
என் அப்பா மிகவும்
சத்தம் போட்டுச் சிரிப்பார்.
என் அண்ணனோ
எப்பொழுதும் புன்சிரிப்புதான்.
அக்காவோ
ஆடிக்கொண்டே சிரிப்பாள்.
தாங்க இயலாமல்
ஒருமுறை கேட்டதற்கு
அம்மாசொன்னார்
“நான்தான் சிரிப்பா
சிரிக்கறேனே போதாதா?”