`கற்பகதரு – சுவைத்தேன்’ – சுவையுரை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 6 in the series 16 ஜூன் 2024


திரு ஜெயராமசர்மா அவர்களின் கற்பகதரு’ நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், எனக்கு சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்லித் தந்தநட்டாயிரம்,
பட்டாயிரம்’ என்ற சொற்பதம் ஞாபகத்திற்கு வந்தது. பனை இருந்தாலும் நீண்ட
காலம் பயன் கொடுக்கும், வெட்டியபின்னும் பல்வேறு பொருட்களாக நீண்ட
காலம் பயன் கொடுக்கும் என்பதை நட்டாயிரம் வருடம் நானிலத்தில் காய்த்து நிற்கும் பட்டாயிரம் வருடம் பாழ்போகா’ என்பார்கள். பனையைப் பற்றிப் பலரும் எழுதிய புத்தகங்கள் - தரவுகள் சார்ந்ததாகவும், ஆராய்ச்சி நிமிர்த்தமும், பிரச்சார நோக்கிலும் அமைந்தவை. திரு.ஜெயராமசர்மா அவர்கள் எழுதியகற்பகதரு’ என்ற
இந்தப் புத்தகம் பனை பற்றிய முழுமையான தகவல்கள் கொண்ட ஒரு
பெட்டகமாகத் திகழ்கின்றது.
இலக்கியத்தில் ஆரம்பித்து இனிக்கும் பனையுடன் நிறைவு பெறும் இந்நூல்,
பனையைப்பற்றி இனிச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று சொல்லும்
வகையில் இருக்கின்றது. பனையின் வரலாறு, அதன் பயன்பாடு, அதன்
முக்கியத்துவம் எனப் பத்து அத்தியாயங்களில், நாற்பது சுவைகளில் கடுகைத்
துளைத்து ஏழ்கடலைப் புகட்டியதைப் போல எழுதியிருக்கின்றார் ஆசிரியர்.
இலங்கையின் வடக்குக் கிழக்கில் பிறந்தவர்கள் பனையைக் காணாமல்
இருந்திருக்க மாட்டார்கள். பாடசாலைகள், வாசகசாலைகள், சங்கங்கள் போன்ற
பலவற்றின் இலச்சினைகளில் – தபால் முத்திரைகளில் என இடம்பெறும்
அளவிற்கு நமது வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றது பனை.
அத்தியாயத்திற்கு அத்தியாயம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நமது
பால்யகாலம் வந்து போவதைத் தவிர்க்க முடியாமல் இருந்தது. மனம்
ஒருதடவை அங்கே குதித்து, பின் மீள்வதாகவே இருந்தது. எமது வளவின்
மேற்குப்புற ஓரமாக ஒற்றைப்பனைமரம் ஒன்று நின்றது. வடக்குப்புற வேலிக்கு
அப்பால் பனந்தோப்பு. சிறுவயதில் குழப்படிகள் செய்து, அடிக்குப் பயந்து
பனந்தோப்பில் ஓடி ஒழிந்ததுமுண்டு. அப்போது வீட்டில் உறங்குவதற்கு
ஒவ்வொருவருக்கும் பாய் இருந்தது. நித்திரை விட்டு எழுந்ததும் அவற்றைச்
சுருட்டி ஒரு ஓரமாக வைத்து விடுவோம். பனை நாரினால் பின்னப்பட்ட
கதிரைகள், கட்டில், கடகம், சுளகு அத்தோடு மண்பானைகள் சட்டிகள்
அடுப்பிலிருந்து இறக்கியதும் அவற்றை வைப்பதற்கு திருகணிகள் எல்லாம் எமது
வீட்டில் இருந்தன. ஆரம்பகாலங்களில் வளவின் நாற்புற வேலிகளும் பனை
ஓலையினால் வேயப்பட்டிருந்த போதிலும், காலத்துடன் கிழக்கு தெற்குப்புற
வேலிகள் கிடுகிற்கு மாறிவிட்டன. மக்கள் நடமாட்டம் கொண்ட `பொன்னு சீமா

ஒழுங்கை’ இந்த வேலிகளுடன் மருவிக்கொண்டு போனதே அதற்குக் காரணம்.
எமது ஊரில் நாங்கள் வசித்த பகுதிக்கு குட்டிப்பனை’ என்றொரு பெயரும் இருந்தது. எனது அம்மா பொழுதுபோக்காக நீத்துப்பெட்டி, பெட்டி இழைப்பதைச் சிறுவயதில் கண்டிருக்கின்றேன். தான் ஆசிரியத்தொழில் புரிந்தபோது பன்னம், தையல் படிப்பித்ததாகவும் சொல்லுவார். இதில் பன்னம் என்பது பனை ஓலை சம்பந்தமான கல்வியாகும். வீட்டு வளவைச் சுற்றி வேலி, கிணற்றில் நீர் அள்ளத் துலா, வீட்டின் கூரை, கடகம் பெட்டி சுளகு நீத்துப்பெட்டி இடியப்பத்தட்டு விசிறி என பனையின் பொருட்கள் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பங்கர்கள்’ கட்டவும், சென்றிகள்’ போடவும் பனங்குற்றிகள் பாவனைக்கு வந்தன. நான் அறிந்து தண்ணீர் ஊற்றி வளர்க்காமல் இத்தனை பயன்களைத் தரும் ஒரே மரம் பனைதான். • திரு.ஜெயராமசர்மா அவர்கள் தமிழ் இலக்கியத்தில் பெரும் புலமை மிக்கவர். ஆதலால்இலக்கியத்தில் இணைந்த பனை’ என்று பிள்ளையார் சுழியுடன்
கற்பகதரு’ நூலை ஆரம்பிக்கின்றார். தொல்காப்பியம், புறநானூறு, குறுந்தொகை, நாலடியார், நற்றிணை, வள்ளுவம், சிலம்பின் பாடல்கள் என சங்க இலக்கியங்கள் பலவற்றில் பனை இடம்பெற்றிருக்கின்றது என்பதை ஆசிரியர் மேற்கோள் காட்டும்போது வியப்பு மேலிடுகின்றது. தவிர புராணங்கள், திருமுறைகளிலும் நாட்டார் பாடல்கள், பழமொழிகளிலும் பனை பற்றி இருப்பதை அறியக்கூடியதாகவும் உள்ளது. இலக்கியத்தில் அதிகளவு இடம் பிடித்தது பனைமரம் தான் என்பதற்கு பல உதாரணங்கள் தந்து விளக்கியுள்ள ஆசிரியர், இத்தனை இலக்கியங்களில் இடம்பிடித்திருக்கும் பனைமரம், அந்த இலக்கியங்களை ஓலைச்சுவடி வடிவத்தில் காலத்துடன் காப்பாற்றியும் தந்திருக்கின்றது என்கின்றார். உலக அளவில் ஏறத்தாள நூற்றியம்பது மில்லியன்கள் வரை பனைமரங்கள் இருக்கலாம் எனக் கணிப்பிடும் ஆசிரியர், அதன் தோற்றம் ஆப்பிரிக்கா தேசம் எனவும், ஆப்பிரிக்காவிலிருந்து மனத இனம் எங்கெல்லாம் இடம்பெயர்ந்தார்களோ, அப்போது பனை விதைகளையும் எடுத்துச் சென்றிருக்கின்றார்கள் என்ற தகவலையும் தருகின்றார். ஏடு தந்திட்ட எங்கள் பனை’ என்ற பகுதியில் சுவடிகள் எப்படி உருவாகின்றன
என்ற பல சுவையான தகவல்களையும், நம் முன்னோர்களின் அறிவியலையும்
அறியக்கூடியதாக இருக்கின்றது. சங்ககாலத்து அறிவுப் பொக்கிஷங்கள்

பலவற்றையும் சமகாலத்துக்கு கடத்திய ஊடகமாக ஓலைச்சுவடிகள்
இருப்பதையும் பார்க்கின்றோம்.
பனைமரத்திற்குப் பல பெயர்கள் இருப்பதையும், பனைமரம் என்ற ஒரு மரத்தின்
வழி பல சொற்கள் உருவாகி இருப்பதையும் இப்புத்தகம் மூலம் அறியக்கூடியதாக
இருக்கின்றது. ஓலைகளைக்கூட அதன் பயன் கருதி பல பெயர்களில்
அழைக்கின்றோம். பனைமரத்தின் பயன்களைக் கருத்தில் கொண்டு பனை என்பது மரமல்ல, நல் வரம்’ என்கின்றார் ஆசிரியர். இந்த நூலில் கற்பகதரு சார்ந்த இரண்டு பெரும் அறிஞர்களைப் பற்றிக் காணக்கூடியதாக இருந்தது. ஒருவர் ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைந்து திரிந்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள். மற்றவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர்---18 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த பனைமரம் பற்றியதான நூலொன்றினை அடியொற்றிதாலவிலாசம்’ என்னும் செய்யுள்
நூலினைப் படைத்தவர். புலவர் பனம்பழத்தை தெய்வப்பழம்’ என்கின்றார். கங்குமட்டையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பனந்தும்பு பற்றிய விலாவாரியான தகவல்கள், பனந்தும்பு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தியா வகிக்கும் பங்கு, பனம்பொருட்களை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்து – பலருக்கும் தொழிலில் வாய்ப்பும் கொடுத்து வரும் பலரைப்பற்றிய அறிமுகம் என ஒரு அத்தியாயம் சொல்கின்றது. கற்பகதரு தமிழ்நாடு மாநிலமரம் என்ற தகவலும் அறியக் கிடக்கின்றது. பனை தரும் பாங்கான நுங்கு’ என்ற பகுதியில் நுங்கில் காணப்படும் மருத்துவ
குணங்கள், மற்றும் அது கொண்டிருக்கும் கனிமங்கள் பற்றி அறியக்கிடக்கின்றது.
கூடவே பனாட்டு, பனங்காப்பணியாரம், பனங்களியிலிருந்து செய்யப்படும் –
பனம்பானம் கோடியல் ஐஸ்கிறீம் ஜாம் யோக்கட் சொக்கிளேற் கேக் குக்கீஸ்
புடிங் என நாவூற வைத்தும் விடுகின்றார் ஆசிரியர். இதைவிட சவர்க்காரம்,
ஷாம்பு, முகத்துக்குப் பூசும் களிம்பு என்பவை கூட பனங்களியிலிருந்து
செய்யப்படுவதாக அறிகின்றோம். புலம்பெயர் நாட்டிலிருக்கும் எங்களுக்கு, பனை
தொடர்பான உணவுப் பதார்த்தங்களின் பெயரையும் அவற்றைத் தயாரிக்கும்
முறைகளையும் சொல்லி நாவின் சுவையை அதிகப்படுத்திவிடுகின்றார் ஆசிரியர்.
பனங்கிழங்கு, பனம்பழச்சாறு, ஒடியல்மா போன்றவை எமக்குக் கிடைத்தாலும்
மிக அரிதாகவே கிடைக்கின்றன.
`பனங்கொட்டையும் கிழங்கும்’ பகுதியில் வரும் சில தகவல்கள் என்னை
வியப்பில் ஆழ்த்தின. சுட்டபின்னும், முழைத்து கிழங்காகப் பயன் தரும் ஆற்றல்
பனங்கொட்டைக்கு உண்டு என்பதும், அரசன் ஒருவனின் முன்னணியினர்
நுங்கினைச் சுவைப்பதாகவும், அடுத்த அணியினர் பனம்பழத்தைச்

சாப்பிடுவதாகவும், இறுதிப் படையணியினர் கிழங்கினைச் சுவைப்பதாகவும்
சொல்லி – படையின் நீளமும், படையணியினரின் தொகையையும் சொல்லாமலே
சொல்லி நிற்கும் புறநானூற்றுப் பாடலும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
இறுதி அத்தியாயம் கள்ளு, பதநீர், பனங்கட்டி, பனஞ்சீனி என வாசகரை இனிக்க
வைக்கும். அவை இனிக்கும் சுவை கொண்டதோடல்லாமல் மருத்துவ
குணங்களும் கொண்டிருக்கின்றன. உணவாகப் பயன்படும் பனம்பொருட்களில்,
என்னவித சத்துக்கள் எந்த விகிதங்களில் உள்ளன என்ற தகவல்களையும்
தந்துவிடுகின்றார் ஆசிரியர். கள்ளு உடல்நலத்திற்குக் கேடு என்றபோதிலும்,
கள்ளின் சுவையை சங்க இலக்கியங்கள் கூறுவதாலும் கள்ளுப்
பிரியர்களுக்கெனவும் ஒரு அத்தியாயத்தை இந்த நூலில் திறந்து
வைத்திருக்கின்றார் ஆசிரியர். கள்ளினை வியந்து பல பழந்தமிழ் இலக்கியங்கள்
சொன்ன கருத்துகளைப் புறம்தள்ளிவிட்டு, அதற்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை
எடுத்துரைத்தது திருக்குறள் என்ற கருத்தினையும் முன் வைக்கின்றார் ஆசிரியர்.
அனேகமான அத்தியாயங்களின் முடிவில் – அந்த அத்தியாயம் குறிக்கும்
செய்தியினை முய்த்தாப்பாக கவிதை வடிவில் தருவது சிறப்பாகும். திரு
ஜெயராமசர்மா அவர்களின் கவித்துவம் மிக்க வரிகளில் கவிதைகளை இரசித்துச்
சுவைத்தேன்.
சில இடங்களில் தென்னையையும் பனையையும் கோர்த்து சண்டையிட வைத்து
வேடிக்கையும் பார்க்கின்றார் ஆசிரியர். நட்பு என்று வரும்போது தென்னையை
விட பனைதான் உச்சத்தில் இருக்கின்றது என நாலடியாரை ஆதாரம்
காட்டுகின்றார் ஆசிரியர். இதே கருத்துப்பட குலவிளக்கு என்ற சினிமாப்படத்தில்
வந்த பனைமரம் தென்னைமரம் வாழைமரம்’ என்ற பாடலை எல்லோரும் இரசித்திருப்பார்கள். • அபுனைவு இலக்கியங்களில் காணப்படுவது போன்று, புனைவு இலக்கியங்களில் பனை பற்றிய சொல்லாடல்கள், கருத்தாடல்கள் காணப்படுவது குறைவாகவே உள்ளன. செங்கை ஆழியானின்முற்றத்து ஒற்றைப்பனை’ நாவல், வதிரி இ.
இராஜேஸ்கண்ணன் எழுதிய தொலையும் பொக்கிஷங்கள்’ சிறுகதைத்தொகுப்பு, சபாபதிப்பிள்ளை பெரியதம்பி எழுதியபனை இராசன்’ கற்பனைச் சரித்திர இசை
நாடகம், ச.சு.பொன்னம்பலம் எழுதிய பனை நூறு’ கவிதைகள், சு.வெங்கடேசனின் வேள்பாரி’, ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு’ நாவல், சி.கணேசன் எழுதிய பனை விடிலி’ போன்றவை ஞாபகத்தில் வரும் சில புனைவு இலக்கியப்
படைப்புகளாகும். எஸ்.பொ தொகுத்த பனியும் பனையும்’, ராஜனி திராணகமவின் முறிந்த பனை’, பாமா எழுதிய `கருக்கு’ போன்ற புனைவு இலக்கியப் படைப்புகள்

சிலவற்றில் அதன் தலையங்களில் பனை’ காணப்படுமளவிற்கு, அதன் உள்ளடக்கங்களில் பனை பற்றி விசேடமாக எதுவும் காணப்படவில்லை. இந்தப் புத்தகம், என்னைப் போலவே, பலருக்கும் தமது இளமைக்கால நினைவுகளை மீட்டித்தரும். பனை மரம் பற்றிய இத்தனை தகவல்களையும் எம்மால் மனதிறுத்தி வைத்திருப்பது என்பது மிகச் சிரமமான காரியம் ஆகும். வேண்டும்போது புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ஆவணமாக, திரு ஜெயராமசர்மா அவர்களின் கடும் முயற்சியினால் உழைப்பினால் உருவாகியிருக்கின்றது இந்தக்கற்பகதரு’ நூல். இத்தனை தகவல்களையும்
ஒருசேரத் திரட்டித் தருவதற்கு ஆசிரியர் எவ்வளவு தேடல்களைச் செய்திருக்க
வேண்டும்! ஆச்சரியமாக இருக்கின்றது. ஆசிரியரின் இந்த முயற்சி
பாராட்டுதற்குரியது. நின்று நிலைக்கக்கூடிய புத்தகமாக திகழும் இந்தப் புத்தகம்
பலரிடமும் போய்ச் சேர வேண்டும், பலரும் வாசித்துப் பயன் பெற வேண்டும்
என்பது எனது விருப்பம். திரு ஜெயராமசர்மா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

Series Navigationவாசல் தாண்டும் வேளைஅலகிலா விளையாட்டு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *