சோம. அழகு
எந்தவொரு மனநிலையிலும் அதற்கு ஏற்ற (அல்லது ஏற்பில்லாத) எவ்வுணர்வையும் பூசிக்கொண்டு எந்தத் தொனியிலும் கூற முடிகிற ஒரு வாக்கியம் இது. ரொம்பவே வெட்டியாக இருந்த அந்த சுபதினத்தன்று ஒரு நொடி சந்திரமுகியாக (ஜோதிகாவைச் சொன்னேன்!) மாறி கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு தினுசாகச் சொல்லிப் பரிசோதித்த பின்பே எழுதுகிறேன். இன்பம், துன்பம், சோகம், விரக்தி, கோபம், சினம், துயரம், பயம், கவலை, ஏமாற்றம், பரிவு, எரிச்சல், சலிப்பு, அலட்சியம், வெறுப்பு, வியப்பு என அனைத்திலும் படு சமர்த்தாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள இயல்கிறது இவ்வரியால்.
அதான் வெட்டியா இருந்தேன்னு சொல்லீட்டேனே! அப்போ அடுத்தடுத்து மண்டக்கஜாயம் மாதிரி ஏதாவது உள்ளுக்குள்ளே உதிப்பதுதானே உலக வழக்கம்? பலர் துறவிகளாவதற்கும் தத்துவார்த்தவாதிகளாவதற்கும் மாபெரும் உதவி புரியும் அம்முதல் கேள்வி – ‘நான் யார்?’ – என்னுள் அன்று விதையாக விழுந்தது(!)… விருட்சமாக எழுந்தது(!). அப்பிடி இப்பிடி விழுந்து எழுந்து யோசித்ததில் இயற்கையாகத் தோன்றும் எந்த பதிலைச் சொன்னாலும் ‘அது உன் பெயர்’, ‘அது உன் படிப்பு’, ‘அது உன் முகவரி’, ‘உன் பெற்றோர் குறித்து கேட்கவில்லை’….. என முற்றும் உணர்ந்த ஞானிகளால் புறந்தள்ளப்படுவேன். “அண்டம்…பேரண்டம்…. நான் ஒரு சிறு புள்ளி…” – அய்யே! எனக்கே ரொம்ப அட்டுத்தனமா இருக்கு இந்த பதில். நான் என்ன கார்ப்பரேட் சாமியாரா? இப்படியெல்லாம் பினாற்ற?
இறுதியில் எனக்குச் சமாதானம் தரும் திருப்தியான பதிலைக் கண்டடைந்தேன். மற்றவர்க்கு இது ஏற்றுக் கொள்ளும்படி(convincing) இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என் ரசனைகள், விருப்பு வெறுப்புகள், ஆசைகள், கனவுகள், கொள்கைகள், என் மனதிற்கு உவப்பானவர்கள், கசப்பானவர்கள், எனக்குக் கிட்டும் நிபந்தனையற்ற அளவற்ற அன்பு, என் மீது பொங்கி வழியும் வெறுப்பு, அக்கறை என்னும் மாறுவேடத்தில் வந்து துரத்தி துரத்தி அடிக்கும் துரோகம்,….. என்னத்த போட்டு தனித்தனியா கதறீட்டு….!
“எந்தவொரு சூழலிலும் எனது நிலைப்பாடு, அச்சூழலில் சம்பந்தப்பட்டவர்களின் தன்மையைப் பொறுத்து வெளிப்படும் என் உணர்வுகள், எதிர்வினைகள், அதன்கண் அமையும் என் முடிவுகள் ……” – இவைதான் ‘நான்’.
அட! ஒவ்வொரு ‘நான்’க்காக வரையறையும் இதுவாகத்தானே இருக்க முடியும்? உடைந்து நொறுங்கிவிடாமல் வளைந்(த்)து ஒடிந்(த்)துவிடாமல் இந்த வரையறையைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வதிலேயே பாதி வாழ்க்கை அநியாயமாகக் கண் முன்னே கரைகிறது.
******************
நமது இருபதுகளின் தொடக்கத்தில் வாழ்க்கை குறித்த ஆசைகளும் கனவுகளும்தாம் நம்மை அவ்வயதில் துள்ளலுடன் இயக்கினவோ? ஒவ்வொன்றையும் நிச்சயம் நனவாக்கிவிட முடியும் என்றுதான் எவ்வளவு உறுதிப்பாடு? ஆனால் முப்பதைத் தொடும் முன்னரே ‘செய்து முடிக்க வேண்டியவை’ என்றொரு பட்டியல் தயார் செய்து அதில் ஒவ்வொன்றுக்குமான காலக்கெடுவையும் குறித்துக் கையில் திணித்து விடுகிறது இச்சமூகம். திருமணம், குழந்தை, வீடு, கார்…. என்று நீண்டு கொண்டே செல்லும் அசட்டுத்தனமும் அவசரமும் நிறைந்த அப்பட்டியல் மெல்ல மெல்ல நமது நேரத்தை ஆக்கிரமிப்பதில் துவங்கி நமது கனவுகள் மற்றும் விழைவுகளின் மறக்கடிப்புப் பணியில் சிறப்புற பயணித்து இறுதியில் நம்மை நமக்கே மறந்து போகச் செய்கிறது.
கொஞ்சம் நிதானித்து வாழ்க்கையை ரசித்து, வித்தியாசமானவர்களாக இருக்க முற்பட்டால் அப்பட்டியலில் காலம் கடந்தவைகளுக்கும் விடுபட்டவைகளுக்குமாகக் கேளிர் என்னும் போர்வையில் வந்து கொஞ்சமும் வெட்கமில்லாமல் நம்மை சிறுமை/இழிவு படுத்தவோ குற்றவுணர்ச்சியின் பிடியில் தள்ளிவிடவோ சகல கேள்விக்கணைகளுடன் தயார்நிலையில் இருக்கிறது இச்சராசரி சமூகம். அக ஏழ்மையைப் பகட்டைக் கொண்டு ஒப்பனை செய்யும் பெரும்பான்மையோரின் அருவருப்பான வாழ்வியல் முறை எனக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்றது! சில காலம் கழித்து நம்மை நாம் திரும்பிப் பார்க்கையில் வியப்பும் மலைப்பும் ஒருசேரத் தோன்றும் – “எவ்வளவு நம்பிக்கை மிகுந்திருந்தோம்?!” பின்னர்தான் எதார்த்தம் குறுக்கிடும் விபத்து எல்லோர் வாழ்விலும் நிகழ்ந்துவிடுகிறதே!
மாறிலியாகிப் போன அன்றாடங்களினால் எட்டாக் கனியாகிப் போய்விட்டவற்றைப் பற்றிய நினைவில் வெளிப்படும் பெருமூச்சில் சோகமோ கழிவிரக்கமோ… ஏன், ஏக்கமோ கூட இருக்காது. நம்மை அறியாமலேயே எப்போதோ மனம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளப் பழகியிருக்கும். ‘மகிழ்ச்சியை உணர்வது எப்படி?’ என மறந்து போதல் எவ்வளவு கொடுமையோ அதைப் போன்றதுதான் பிற உணர்வுகளை மறத்தலும். வரிசை கட்டி காத்திருக்கும் பொறுப்புகள்(commitments) நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் நிதர்சனம் திடீரென்று ஒரு நாள் மின்னலாகத் தோன்றி உணர்த்தும். அதை உணரும் அக்கணம் உட்பக்க முழங்கையில் இடித்துக் கொண்டதைப் போன்ற மின் அதிர்ச்சி ஒரு நொடி உடல் முழுவதும் பரவி அடங்கும். அவ்வளவுதான்… அடங்கிவிடும்.
**************
இழந்தவை ஒருபுறமிருக்க, இழக்கப் போவது குறித்த எவ்வித முன்னறிவுப்பும் இல்லாத ஊகிக்கக் கூட நேரம் தராத இவ்வாழ்க்கையை எப்போது நினைத்துப் பார்த்தாலும் வினோதமாக உள்ளூர பயம் வேர் விடுகிறது. என்றோ ஒரு நாள் கடைசியாக பிரியமான ஒருவரிடம் மகிழ்ச்சி ததும்ப கதைத்திருந்து ‘மீண்டும் சந்திப்போம்’ எனக் கூறி விடை பெற்றிருப்போம்; என்றோ ஒரு நாள் கடைசியாக நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடியிருப்போம்; என்றோ ஒரு நாள் கடைசியாக தாத்தாவிடம் கதை கேட்டிருப்போம்; என்றோ ஒரு நாள் கடைசியாக அம்மா ஊட்டிவிடுவாள்; என்றோ ஒரு நாள் கடைசியாக அப்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் பின் அமர்ந்து செல்வோம்; என்றோ ஒரு நாள் கடைசியாக நிலா பார்ப்போம்; என்றோ ஒரு நாள் கடைசியாக ஒரு அலை நம் கால்களை நனைக்கும்…… – இப்படி எத்தனையோ கடைசிகள் அரங்கேறும், எதுவுமே கடைசி என்று அறியாமல். அறிந்தால் அத்தருணத்தை இன்னும் நீட்டிக்க முயல்வோமா? அது போதுமானதாக இருக்குமா?
*****************
அன்பு, புரிதல், உண்மை, விடுதலை……. காலம் கடந்து கிடைக்கும் எதுவும் திவசம் கழிந்த பின் மறைந்தவரின் உடல்நலத்தை விசாரிப்பதைப் போன்றது. நாம் எதற்காக ஏங்கினோமோ அது நமக்குப் பொருட்டே இல்லை என்றான பின் அதை நம்மிடம் ஏதோ பொக்கிஷம் போல அளிக்கும் வாழ்க்கையின் முகத்தில் அதைத் திருப்பி விசிறியடிக்க வேண்டும் போல் இருக்கும். மன உளைச்சலில் இழந்த காலம் குறித்த கோபத்தை என்ன செய்ய?
வாழ்க்கை விதி(rule) ஒன்றே ஒன்றுதான். உலகில் எந்தச் சமன்பாடும் கிடையாது. ‘நாம் உண்மையாக நேர்மையாக கண்ணியமாக மரியாதையாக அன்பாக கருணையோடு நடந்து கொள்கிறோம் என்பதற்காக இவையே நமக்கும் திரும்பக் கிடைக்கும் என்று கிடையாது… நிச்சயம் கிடையவே கிடையாது’ – சமன்பாடுகளில் சமக்குறியின்(=) குறுக்காகக் கிடக்கும் பெரிய கோடு இதுதான். எவ்வளவு முட்டி மோதினாலும் இந்த அநியாயத்தை ஏற்றுக் கொண்டுதான் போக வேண்டும் என்பதுதான் ஆக மோசமான கையறுநிலை. நம் மனப் போராட்டத்தை முற்றிலும் புறக்கணிப்பவர்கள், நம் குரல்வளையைக் காலால் நசுக்குபவர்கள், நாம் கத்தாமல் திமிராமல் எவ்வித உணர்வுமின்றி மிகச் சாதரணமாக உரையாட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் கொடூரம் அரங்கேறும் இவ்வுலகில் போய் இந்தச் சமன்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்ப்பது……
******************
மனதும் நாமும் வெடித்துக் கொண்டிருக்கும் ஒரு கொடும் பொழுதில் அதைத் தொண்டை வலிக்க அழுது தீர்க்க முயல்கையில் அந்த வெளிப்பாடு போதாதது போல் யாருக்கேனும் என்றாவது தோன்றியிருக்கிறதா? அதைத் தாண்டிய வெளிப்படுத்தும் முறை அறியாத திணறலில் உழன்றிருக்கிறீர்களா? சிலவற்றிலிருந்து மீள்தல் சாத்தியமே அல்ல எனத் தோன்றும் போது கேட்கக் கிடைக்கும் ‘எல்லாம் ஒரு நாள் சரியாகும்’…… எவ்வளவு நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள்! ‘எல்லாம்’, ‘ஒரு நாள்’ எதுவென்றே தெரியாமல் போனாலும் கூட மனதின் கீறல்களுக்கு மருந்திடும் இவ்வார்த்தைகளை மிகச் சரியான நேரத்தில் நமது கரங்களில் கதகதப்புடன் ஒப்படைத்து ஆற்றுப்படுத்துபவர்கள் போதாதா அவ்வப்போது நம்மைத் தீண்டும் கசப்பை மறையச் செய்ய? சில விஷயங்கள் சரி ஆகாமல் போதலே ஆகச் சிறந்த சரி ஆதல்! இதுவும் அவ்வார்த்தைகளுள் அடக்கம்தான். Meliorism – இந்த ஒற்றைச் சொல்லில்தானே மொத்த உலகும் இயங்குகிறது.
**********************
எழுதப்படாத வரிகளுக்கான தொடர் தேடலில் வாழ்வில் உணர்பவற்றை அப்படியே வெளிப்படுத்த எப்போதும் சொற்கள் போதுமானதாக இருப்பதில்லை. உணர்வுகளை வார்த்தைகளினுள் அடைக்கும் முயற்சியில் அனிச்சையாக ஜன்னல் பக்கம் திரும்பும் பழக்கம் என்னிடம் மட்டும்தான் இருக்கிறதா? அடர்ந்து நிற்கும் மரங்களின் செறிவுனூடே கண்கள் சிறிது நேரம் துழாவும், ஏதோ அதன் இடுக்குகளில் எனக்கான வார்த்தைகள் சிக்கிக் கொண்டு இருப்பதைப் போல். பெரிய மனதுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக எட்டிப் பார்த்துத் தென்பட்ட வார்த்தைகளில்….
உயிரோடுதான் இருக்கிறோம். ஆனால் உயிர் பிரியும் வரை உயிர்ப்புடன் வாழக் கிடைப்பதெல்லாம் எவ்வளவு பெரும் பேறு? மரணத்தின் நிழல் கவியத் தொடங்கும் என் கடைசி மூச்சில் வெளிப்படும் “என்ன வாழ்க்கைடா இது?” எவ்வுணர்வைச் சுமந்திருக்கும்? புதிராகக் கலைத்துப் போட்டப்பட்ட வாழ்வின் சிறு சிறு பகுதிகள் எல்லாம் நமது இறுதி தருணத்தில் கண்முன் ஒற்றைப் படமாக ஒன்று சேர்ந்து பொருள் தரலாம்; அல்லது அதில் சில பகுதிகள் தொலைந்து போனவையாகவோ நிரப்பப்படாமல் கிடந்து போனவையாகவோ இருக்கலாம். வாழ்விற்கு அர்த்தம் என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்ன? எனில் அதற்குப் பொதுவான வரையறை வகுக்காதீர்களேன்.
பெரிதாக மகிழ கண் முன் அரங்கேறும் மீச்சிறு கவிதைகளே போதுமானதாய் இருக்கின்றன. எவ்வளவு மேகமூட்டமான காலைப் பொழுதெனினும் ஜன்னலில் தெரியும் இலையுதிர்ந்த மரத்தை அலங்கரித்தபடி விளையாடும் அச்சிட்டுக்குருவி போதாதா அந்நாளை இனிதே துவக்க? மனதில் கலக்கம் படரத் துவங்குகையில் எதிரில் துள்ளிக் குதித்தபடி வரும் ஒரு மழலை போதாதா அந்நாளைக் கடக்க? ஒருவரது முகத்தில் புன்னகையை வரைந்த பொந்திகை போதாதா அந்நாளை நிறைவு செய்ய?
வாழ்க்கை அழ வைக்கிறது; ஆச்சரியப்பட வைக்கிறது; மிரள வைக்கிறது; சிரிக்க வைக்கிறது; கசிந்துருக வைக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு வாழ்க்கைதான். ஏதோ ஒரு பாடலுக்கோ எழுத்துக்கோ உடைந்து அழுதுவிடும் அளவிற்குத்தான் இருக்கிறது இவ்வாழ்க்கை. அதனால்தானோ என்னவோ சின்ன சின்ன சாதாரணங்களில் பொதிந்திருக்கும் அழகியல் கூடப் பெரிதாய்த் தெரிகிறது.
*****************
என்னவெல்லாமோ குட்டிக்கரணம் அடித்து அரங்கேற்றும் கவன ஈர்ப்பு செயல்களின் ‘likes’ எண்ணிக்கையில் தமக்கான அடையாளத்தை அங்கீகாரத்தை மனநிறைவைத் தேடும் பெரும்பான்மையானோர்க்கிடையில், ‘What’s the point in all these?’ என்பதற்கும் ‘What’s the point in anything anyway?’ என்னும் கேள்விக்கும் இடையில் உலாவிக் கொண்டிருக்கிறேன். முதல் கேள்வியில் விளையும் பக்குவம் சமயத்தில் அதீதமாகி இரண்டாம் கேள்விக்குத் தரதரவென இட்டுச் சென்றுவிடும் அபாயமும் நிகழ்ந்துவிடுகிறது. அவ்வப்போது அந்த எல்லையைத் தொட்டாலும் மத்திமத்திற்கு மீண்டு வருதலில் பொருள் கொண்டு நகர்கிறது வாழ்க்கை.
- சோம. அழகு
- என் தாய் நீ
- மோகமுள்
- கவிதைகள்
- வண்டின் இனிய கீதம்
- படித்தோம் சொல்கின்றோம் :
- என்ன வாழ்க்கைடா இது?!