வெங்கடேசன் நாராயணசாமி
யுகள கீதம்
கோபிகைகள் கூறுகின்றனர்:
[ஶ்ரீம.பா.10.35.2,3]
இடது கன்னம் இடது தோளில் சாய்த்து
வில்லாய் புருவம் வளைத்தசைத்து
மெல்ல உதட்டைக் குழலில் வைத்து
தளிர் திருவிரல்கள் துளைகளில் பரவ
முகுந்தனின் இன்னிசை திசையெலாம் நிறைய, ஆய்ச்சிகாள்!
வானுறை வனிதையர் வல்லினரொடு
வானளாவி வியந்து வேணு காணமதில் மயங்கி
காமன் கணையொறுத்த சித்தம் கலங்கி வெள்கி
அரையிடை அழுக்காடை அவிழ்வதையும்
அறியாதசையா நின்றனரே!
[ஶ்ரீம.பா.10.35.4,5]
நங்கைமீர்காள்! இந்நந்தகுமாரர்
நலிந்தோர்க்கு நலம்பல செய்து தேற்றும்
வெண்முத்துச்சர சிரிப்பழகர்,
காளமேகத் திருமார்பில் நித்திய மின்னலாய்
நிலைத்த திருநிறைச் செல்வரிவரே.
இதோர் அற்புதங் கேளீர்!
இவ்விமலரின் வேய்ங்குழல் கீதம்
உய்விப்பது விரக வேட்கையில் வாடும் நம்மையும்
உலகத் துன்பமதிலுழல் உயிர்களனைத்தையுமாம்.
கோவிந்தன் குழலோசையில் மயங்கி
மேலெழுந்த விரைத்த செவியொடு
கூட்டம் கூட்டமாய் வந்து நின்ற
காளைகள், மான்கள், பசுக்கள்
மேய்வதை மறந்து, மேய்ந்த புல் கடைவாய் வழிசோர
சலனமில்லா சமாதியில்
முப்பரிமாண சித்திரம் போலசையா நின்றனவே!
[ஶ்ரீம.பா.10.35.6,7]
தோழீ! பலதேவனுடன் ஆயர் தொடர
மயிற்பீலி பூங்கொத்து முடியிற் செருகி
செங்காவி தாதுப்பொடி பூசி, துளிர்
இலையால் திருமேனியலங்கரித்து
மல்ல கச்சை கட்டி
குழலால் பசுக்கள் பெயர் கூறி
தாமோதரனார் தன்னிடமழைத்தாரே.
அத்தேன் குழலோசையில்
நதிகள் தயங்கி வேகம் அழிய, நம்மைப் போலவே,
தென்றல் தூவும் திருமால் திருவடி தூளி விரும்பி
‘புண்ணியக் குறைவோ? ஆசைத் தடையோ?’ என ஏங்கி
அன்பலைகளாம் கரங்கள் நடுங்க
அஞ்சலி கூப்பி அசையா நின்றனவே!
[ஶ்ரீம.பா.10.35.8,9]
ஆதிபுருஷராம் அரவிந்தன் தனழியா லீலைகள் தம்மை
ஆயர்கள் புடைசூழ்ந்து போற்றிப் புகழ
ஆரண்யம் சுற்றி வர, குன்றினடி மேயும்
ஆவினங்கள் தன்னை குழலூதியழைக்கவே,
அக்கானகந் தன்னில் செடி கொடி மரங்கள்
அலர்ந்து குலுங்க, மலர்கள் காய்-கனிகள் சுமையால்
கிளைகள் தலைகுனிந்து வளைந்து அஞ்சலி கூப்பி
தன்னுளிறைவன் நிறைந்துணர்த்தும்
அன்பால் மேனி சிலிர்த்து
மதுவைத் தாரையாய்
மழையாய்ச் சொரிந்தனவே.
[ஶ்ரீம.பா.10.35.10,11]
கண்கவர் திருத்திலகம் தரித்து
தெய்வமணங் கமழ்தன் திருமார்புதனில் வனமாலை
துளசிதள தேன் பருகி மதர்த்த
வண்டின் குழாமதின் உயர்ந்த ரீங்கார ஶ்ருதி
குழலோசையுடன் குவிந்திசைய அதனை
மகிழ்ந்து புகழ்ந்து குதூகலமாய்
ஶ்ரீ வேணுகோபாலர் கானம் செய்தாரே.
இன்ப வேணுகானமதில் மயங்கி
சுனையில் நீந்தும் கொக்குகள், அன்னங்கள்
இன்னும் மற்ற பறவைகள்
அரியினடியில் வந்திறைஞ்சி
மனமடக்கிக் கண்மூடி மோனத் தியானமதில்
அசையா அமர்ந்தனவே!
ஆஹா! வியப்பாக இல்லை?
[ஶ்ரீம.பா.10.35.12,13]
மகர குண்டலமும் மலர்மாலையும் துலங்க
பரமன் பலராமனுடன் பர்வதயுச்சியில்
பாங்குடனே மகிழ்ந்து, விரஜ தேவதைகாள்!
அகிலம் களிப்பெய்ய
கல்லும் கனியும் வேணு கீதம் செய்தாரே.
ககன வெளியில் மூண்ட எழிலிகள்
கண்ணனைக் கடக்க அஞ்சி
மெல்ல மெல்ல குழலோசைக்கேற்ற
தாள கதியிலிரைய, நிழலால் குடைவிரித்து,
பன்னீர்ப் பூக்களைத் தூறலாய்த் தூவி,
குழலின் இன்னிசை கெடுமோவென்றஞ்சி
இடியோசையடக்கி
ஸன்னமாய் இட்டனவே.
[ஶ்ரீம.பா.10.35.14,15]
ஸகலகலா வல்லவனாமுனது அருந்தவப் புதல்வன் அசோதாய்!
ஸ்வர-லய ஸூக்குமங்களைத் தானே பயின்று
தன் கொவ்வைச் செவ்வாயுதட்டில் குழல் பதித்து
ஆனந்த ராகங்களை அழகுற இசைத்து
தேனினுமினிய கீதம் பொழிகிறாரே.
பேரறிஞர்களாம் பிரம்மேந்திர ருத்திரர்கள் தலைமையில் தேவர்களும், முனிகளும், ரிஷிகளும்,
மேல், மத்யம, கீழ் ஸ்தாயி வேற்றுமையுடன்
வேணுகானம் கேட்டுத் தலைவணங்கித் தங்கள்
மனதை ஒருமுகப்படுத்தியும்
மனமோஹன இன்னிசையின் ஆழமும் நுட்பமும்
இன்னதென்று அகழ்ந்தறியா ததிர்ந்து நின்றனரே.
[ஶ்ரீம.பா.10.35.16,17]
மதயானை மதர்த்த பெருநடை மாதவன்
மதுரமோஹன வேணுகானம் பொழிந்து போகையில்
கொடி, வஜ்ராயுதம், செங்கமலம், துரட்டி எனும்
விசித்திர ரேகைகளுடைய தன் செந்தாமரைச் சேவடிகளால்
ஆநிரை குளம்படி மிதியால் வேதனையுற்ற விரஜ பூமியின்
வாதனை தணித்தாற்றிச் செல்கிறாரே.
அதனை ஆங்கே கண்டு களித்து,
அழகுமிக்க அன்னவரின் கள்ளக் கடைக்கண் பார்வையால்
காமவேட்கையுற்று மிகுந்து மெய்மறந்து
அரையிடை அழுக்காடை மற்றும்
அள்ளிமுடிந்த கூந்தல் அவிழ்வதை உணரா
அசைவற்று மரமாய் சமைந்து நின்றோமே.
[ஶ்ரீம.பா.10.35.18,19]
தனக்கு மிகவும் பிடித்த நறுமணங் கமழ் வன்துழாய் மாலையணிந்து
மணிமாலைகள் பூண்டு, அவ்விரத்தின மணிகளால்
பசுக்களை எண்ணிக் கொண்டு,
தன்னுயிர்த் தோழன் தோளில் கைகளைப் போட்ட வண்ணம்
இனிய பாடலை கோவிந்தன் குழலிசைப்பாரே,
அக்குழலோசையில் தன்னை மறந்த கிருஷ்ணசார பெண்மான்கள்
நற்குணக் கடலாம் ஶ்ரீ கிருஷ்ணன் அருகில்
வீட்டைத் துறந்தோடி வந்த ஆயர் பெண்களைப் போல
அசையாதமர்ந்து கேட்டனவே.
[ஶ்ரீம.பா.10.35.20,21]
குருகுமாலை சூடி அழகுற அலங்கரித்து
நந்தகோபத் திருக்குமாரர், மாசற்றவளே! உமது தவப்புதல்வர், தம் அடியார்க்கு மட்டற்ற இன்பம் நல்கி
ஆநிரை ஆயர்கள் புடைசூழ யமுனையில் விளையாடவே,
அச்சமயம், குளிர் சந்தன நறுமணங்கமழ்
மலையமாருதம் மெல்ல மாதவன்
விரும்பிய வண்ணம் வீசி மகிழ்விக்க,
கந்தர்வர் முதலான உபதேவர்கள் சூழ்ந்து துதிபாடி
வாத்தியம் முழங்கி பூமாரிப்பெய்து
தொழுது நின்றனரே.
[ஶ்ரீம.பா.10.35.22,23]
குன்று குடையாயெடுத்து கோகுலம் காத்த கோவிந்தன்
வரும் வழியே வானுலகத் தேவர்கள்
தன் திருவடியில் வணங்கி நிற்க,
உடன் வந்தோர் போற்றிப் புகழ்பாட,
வேணுகானம் செய்து இதோ வருகிறாரே.
களைத்திருந்தும், தனித்த தன் திருமேனி காந்தியால்
தரிசிப்போர்க்கு உத்ஸவமாய் உற்சாகமும் களிப்பும் நல்கி,
பசுக்களின் குளம்படி தூசியால் புழுதிபடிந்த வனமாலையுடன்,
கருக்கலில் ஆநிரைகள் ஒன்று சேர்த்து,
தன் நண்பர்கள் விருப்பம் நிறைவேற
தேவகியின் திருவயிற்றிலுதித்த ஶ்ரீ கிருஷ்ணசந்திரன்
இன்பம் தர இதோ வருகிறாரே.
[ஶ்ரீம.பா.10.35.24,25]
மதர்த்து சுழன்ற குறும்பு விழிகளால் தன் நண்பர்களை வாழ்த்தி
வனமாலை தரித்து, செக்கச்சிவந்த இலந்தைப் பழமாய் தன்
திருமுகம் கனிய, ஸொர்ண குண்டலங்களின் ஒளியால்
கதுப்புக் கன்னங்கள் மின்னியழகுற,
மதயானையொத்த கம்பீர நடையுடன் மலர்ந்த திருமுகமாய்
யதுகுல திலகன் மணிவண்ணன்
மாலைச் சந்திரனைப் போல்
ஆயர்பாடியும் அவர்தம் பொறிபுலன்களும்
பகலில் அவரைக் காணா தாபத்தால் வாடிய வாட்டத்தைப் போக்குபவராய் இதோ அருகில் எழுந்தருளினாரே!