ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

நா. வெங்கடேசன் 

[ஶ்ரீம.பா.10.29.1]
ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:
குதிர் கால இரவில்

பூத்துக் குலுங்கும் மல்லிகைச் சரங்களை
முகில்வண்ணர் கண்ணுற்று காதல் வயப்பட்டு,
திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார்
தன் யோகமாயையினாலே!
[ஶ்ரீம.பா.10.29.2]
அச்சமயம், கீழ்வானம் ஶிவக்க
அழகுற்ற தணொளிக்கரங்கள்தனைப் பரப்பி
வெய்யக் கதிரோன் வெயிலில் வாடிய
விரஜ மக்கள் தாபம் தீர திங்களுதித்தனன்.
அஃது, நீண்டு வெளியூர் ஏகித் திரும்பும்
மணாளன் தன் அன்பு மனையாளின்
ஆசை முகந்தனில்
கப்பிய காதலுடன்
அப்பிய குங்குமப் பூக்குழம்பு
பூச்சு போலாச்சே!
[ஶ்ரீம.பா.10.29.3]
குமுதமலர்ந்து பூரணகலை ஒளிசிந்த
குமுதவல்லி திருமுகப்பொலிவாய் சீருடன் புதிய
குங்குமப்பூ ஶிவப்பில் சந்திரனவன்
இன்னொளியால் வனம் முழுதும் ஶிவந்து கண்ட

கோவிந்தன் குழலூதினாரே!
கோகுலத்து கோபியர்கள்

மனமெலாம் கொள்ளை கொள்ள குழலூதினாரே!

[ஶ்ரீம.பா.10.29.4]
நெஞ்சினிலின்பக் கனலையெழுப்பி
நினைவழிக்கும் கோவிந்தன் குழலிசையில்
தமுளம் பறிகொடுத்த கோபியர் ஒவ்வொருவரும்
காந்தனிருக்குமிடம் சேருமவசர வேகத்தில்
காது குண்டலங்கள் குலுங்கி ஆட
தான் செல்வதை பிறிதொருவரறியா
வண்ணம் வந்து கூடினரே!

[ஶ்ரீம.பா.10.29.5]

கோவிந்தன் குழலிசை கேட்ட கோபியர்களுள்,
கறவை கணங்களைக் கறப்பதை அப்படியே விட்டுவிட்டுப்

பேராவலுடன் போந்தனரே!

பாலைக் காய்ச்சியும் ரொட்டியைச் சுட்டும் கொண்டிருந்தோர்,
கொதிக்கின்ற பாலையும் வெந்த ரொட்டியையும்
அடுப்பிலிருந்து இறக்காமல் அப்படியே
விட்டுச் சென்றனரே!
[ஶ்ரீம.பா.10.29.6]

உணவு பரிமாறுவோர், தம் குழவிகட்குப் பாலூட்டுவோர்,

மணாளர்க்குப் பணிசெய்வோர்
மற்றும் உணவருந்துவோர்,
அப்பணிகளை அங்ஙனமே
பாதியில் விட்டுவிட்டு ஏகினரே!
[ஶ்ரீம.பா.10.29.7]
அலங்கரித்துக் கொள்வோரும்,
நீராடுவோர் தலை துவட்டாமலும்,
கண் மையிட்டெழுதுவோரும்,
மலரிட்டு கூந்தல் முடிவோரும்,
அப்படியே பாதியில் விட்டுச் சென்றனரே!
ஆடைகளையும் பொன்னணி பூடணங்களையும்

சிலர் தாறுமாறாய் தரித்து
கண்ணனிருக்கிமிடந் திரிந்தனரே!
[ஶ்ரீம.பா.10.29.8]
உற்றார் உறவினர்

உடன் பிறந்தோர் பதி மற்றும் பெற்றோர்

தடுத்தும் கேளாமல்
தன்னிலை மறந்து
திரும்பிப் பாராமல்
தன்னுளம் கவர்
கள்வனாம் கோவிந்தனிடம்
தடிந்து சென்றனரே!

[ஶ்ரீம.பா.10.29.9]
வீட்டினுள் சிக்கி வெளிவரயியலா
விரஜ தேவதைகள் சிலர்
கண்ணன் கழலினையே நண்ணி நண்ணி
கண்களை மூடி எண்ணம் பதித்து
வெளியுலகம் வெறுத்து

திண்ணமாய் தியானமதில் திளைத்து மூழ்கினரே!

[ஶ்ரீம.பா.10.29.10]
தமுயிரினுமினிய அச்சுதனின்
தாங்கொணா பிரிவுத் தாபத்தீ
தகிப்பில் முப்பிழையும் பொசுங்கி,
தியானத்தில் கண்ணனை உளமாறத் தழுவிய
பேரின்பப் பேற்றால் மறுபிறவிப்
புண்ணியமும் நசிந்ததே!
[ஶ்ரீம.பா.10.29.11]

இங்ஙனம் நல்வினை தீவினை நீங்கப்பெற்று
உள்ளம் கவர் கள்வனாம் பரமாத்மா கண்ணனைக்
காதலனாய் வரித்துத் தியானத்தில் கலந்தாலும்,
முக்குண விளைவாம் ஜடவுடல் பற்று உடனே நீத்து

பூவுலகிற்கப்பாற்பட்ட பரமான்ம
உன்னத நிலையை உணர்ந்தனரே!
[ஶ்ரீம.பா.10.29.12]
பரீக்‌ஷித் மஹாராஜா கேட்கிறார்:
முனிவரே! கோபியர்கள்,

கண்ணனைத் தன் காதலனாய்த் தானே வரித்தனர்?

முழுமுதற் கடவுளாக அல்லவே?

எனில், அச்சுதரின் அழகு, இன்சொற்கள் முதலிய புறவய குணங்களில் மனதைப்

பறிகொடுத்தோர்க்கு

முக்குணங்களின் பிரவாஹரூபமாம் உலகியலின்

முடிவு உண்டானதெங்ஙனம்?
[ஶ்ரீம.பா.10.29.13]
ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:

சேதி மன்னன் ஶிஶுபாலன் ஹ்ருஷீகேஶனைப் பகைத்தும் ஸித்தியடையந்தாரென்று

முன்னமே கூறினேன்.
பகைத்தவரே நற்கதி பெற்றாராயின்,
ஐயனிடமன்பு பூண்டோர் முத்தியடைவதில்

ஐயமேது?

[ஶ்ரீம.பா.10.29.14]
அரசே! அண்ணலின் திருவவதாரம்
நரர்களான நம் நலத்திற்கேயாம்.
அச்சுதர் அனந்தர் அளப்பரியவர்,
வற்றாத திருக்குணங்களின் கொள்கலனவரே.
உலகியலுக்கப்பாற்பட்டு எல்லையற்றவரவரே.
மாயாப் பிரகிருதித் தொடர்பும் இயல்புமற்று,
அதனை அடக்கியாள்பவரவரே.
முக்குணப் பிரவாஹத்தின் தோற்றுவாயுமவரே.

[ஶ்ரீம.பா.10.29.15]

காமம், குரோதம், பயம், அன்பு, பக்தி, நட்பு –
இவ்வறுவுணர்ச்சிகளில் ஏதேனுமொன்றை
எப்பொழுதும் அரியினிடம் நிலையாய் வைப்பவர்
நிச்சயமாயவரையே இரண்டறக் கலப்பரே!

[ஶ்ரீம.பா.10.29.16]

பிறப்பற்றவனும், யோகேஶ்வரர்களின் ஈஶனுமாம்
கண்ணபிரானிடம் வியப்போ, ஸந்தேகமோ
கொள்ளத் தேவையில்லை நீர்.
ஏனெனில், இவ்வுலகம்
முத்திபெறுவது முகில்வண்ணர் அருளால்.
மரம்-செடி-கொடிகளும் கூட
பெரும்பேற்றை அடையுமே
அச்சுதரால் தடுத்தாட்கொள்ளப் பட்டால்.

[ஶ்ரீம.பா.10.29.17]
வாக்கில் வல்லவராம் வனமாலீ
தன்னருகில் வந்த விரஜ வனிதையரை
தன் இன்சொலால் கிறங்கச் செய்து
பின்வருமாறு கூறலானார்.
[ஶ்ரீம.பா.10.29.18]
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:
பாக்கியவதிகளே! உங்கள் வரவு நல்வரவாகுக!
உங்களுக்குப் பிரியமானதெதுவோ அதைச்
செய்ய சித்தமாயிருக்கின்றேன்.
கோகுலத்தில் அனைவரும் நலந்தானே?
இங்கு நீங்கள் வந்த காரணமென்னவோ? கூறுங்கள்!

[ஶ்ரீம.பா.10.29.19]
இவ்விரவு வேளை இயல்பாகவே
மிகவும் அச்சமூட்டுவது.
இங்கு கொடிய விலங்குகளின்
நடமாட்டம் வேறு,
இங்கு பெண்கள் தங்குவது நலமல்ல.
கொடியிடை அழகிகளே!
கோகுலம் திரும்பிச் செல்லுங்கள்.
[ஶ்ரீம.பா.10.29.20]
உங்களைக் காணாமலுங்கள்
பெற்றோர், மக்கள், மணாளர், மற்றும்
உடன்பிறந்தோர் தேடுவர்.
கவலையும் மனவருத்தமும்
கொடுக்காதீர்கள் அவர்கட்கு.
[ஶ்ரீம.பா.10.29.21]

முழுமதியொளியில் மலர்கள் பூத்துக் குலுங்க
யமுனை மீது வீசும் தென்றல்
மரங்களைத் தழுவி
இளந்தளிர் இலைகளை அசைத்தாடி
அழகுற விளங்கும் விருந்தாவனத்தைப்
பார்த்தாயிற்றல்லவா?
[ஶ்ரீம.பா.10.29.22]
ஆகையால், கணமும் தாமதியாது
கோகுலம் திரும்பிச் செல்லுங்கள்.
குடும்பப் பெண்களாம் நீங்கள்
பணிவிடை புரியுங்களுங்கள் கணவருக்கு.
அழுகின்ற குழவிகட்கு முலைப் பாலூட்டுங்கள்.

கன்றுகளைக் கட்டவிழ்த்து
கறவைகளிட மூட்டவிட்டுப்
பாலைக் கறக்கச் செல்லுங்கள்.
[ஶ்ரீம.பா.10.29.23]
ஒருவேளை எம்மீதாழ்ந்த அன்பால்
உளமுருகி வயப்பட்டு நீங்களிங்கு வந்திருந்தால்
உண்மையி லதுவும் பொருத்தமே!

ஏனெனில், அன்பே ஶிவமயமாயான்மாவா மெம்மிடத்தே

எவ்வுயிர்க்கு மியல்பில் பிரியமாம்.
[ஶ்ரீம.பா.10.29.24]

பாக்கியவதீகாள்! உள்ளன்புடன்
கணவருக்குப் பணிவிடை புரிவதும்
உறவினர்க் குதவுவதும்
ஈன்ற மக்களைப் போஷித்து வளர்ப்பதும்
குடும்பப் பெண்களின் தலையாய கடமையாமே!

[ஶ்ரீம.பா.10.29.25]
தீய பழக்கமுள்ளவனோ,
துரதிருஷ்டமானவனோ, முதியவனோ,
மூடனோ, நோயாளியோ,
ஏழையோ, எவ்வாறாயினும்
மறுமையில் நற்பேறு நாடும்
குலமகள் தன் கரம் பற்றிய,
பாவமற்ற தன் கணவனைக்
கைவிடலாகாதே.
[ஶ்ரீம.பா.10.29.26]
குலமகள் கள்ள உறவு கொளல்
அறநெறி ஒவ்வா அவச்சொலளிப்பதாம்,
துன்பமும் பயமும் தருவதாம்,
அற்பமுமிழிவானதுமாம்,
வானுறையும் புகழ் கெடுப்பதுவுமதுவே.

[ஶ்ரீம.பா.10.29.27]

எமது திருவிளையாடல்களைக் கேட்பதாலும்
எம்மை மானஸீகமாய் தரிசிப்பதாலும்
தியானிப்பதாலும், எமது திருநாமத்தைக்
கீர்த்தனம் செய்வதாலும் பக்தி கிட்டுமே.
அருகிலிருந்தால்தான் பக்தி நெறி என்றில்லையே.

ஆதலினில்லம் திரும்புங்கள்.
[ஶ்ரீம.பா.10.29.28]
ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:
இங்ஙனம் விருப்பமில்லா மொழிகளை
முகுந்தனுரைக்கக் கேட்ட கோபிகைகள்
தங்களெண்ணம் நிறைவேறாது
மனம் தளர்ந்து மீளாத் துயரெய்தினரே.

[ஶ்ரீம.பா.10.29.29]

துயரப் பெருமூச்சால் மாதுளை மணி உதடு வறள

துக்கமதில் முகம் தாழ்த்திக்
கால்கள் தரையில் கோலமிட
காதலால் கசிந்து கண்ணீர் மல்கி
கண்மை கரைந்தொழுகி
மார்பிலிட்ட குங்குமம் மழித்தோட
மீளாத் துயரை மனதில் சுமந்து
மௌனமாய் உதாஸீனராய்
சமைந்து நின்றனரே.

[ஶ்ரீம.பா.10.29.30]

அன்புமிக்க கண்ணன் அன்பிலாதவர் போல்
அரற்றுகிறாரே நம்மோடு?
மற்றை நம் காமங்கள் மாற்றி
உற்றோமே ஆகி உகந்தவரிடமே ஆசைவைத்து
அன்னவர்க்கே ஆளாகி ஆயர்கள் நாம் ஆட்பட்டு வந்தோமே?

என்று வாடி மனத்தால் வருந்தி
அழுது ஶிவந்த கண்கள் துடைத்து
பதட்டமுடன் தொண்டை கமற
தழுதழுத்த குரலுடன் தங்கள்

உள்ளக் குமுறலை உணர்ச்சிபொங்க உரைத்தனரே!

[ஶ்ரீம.பா.10.29.31]
கோபிகைகள் கூறுகின்றனர்:
தான் பிடித்த பிடியிலுறுதியாயிருப்பவரே!
எதற்கும் நீர் கட்டுப் படாதவரல்லவா?

கட்டுகளறுத்து நுமது கழலடி பற்றிய அடிமைகளாமெம்மை
கடுஞ்சொல் கூறி கைவிடுவது தகுமோ?
ஆதி புருஷராம் ஶ்ரீமந் நாராயணர்
முத்தி நாடி தம்மிடம் தஞ்சமென்று வருவோரைக்
கைகொடுத்துக் காப்பதில்லையா?

[ஶ்ரீம.பா.10.29.32]

உற்றாருறவினர் மணாளர் மக்களைப் பேணிக் காத்தல்
மங்கையர் கடமையென்று அறநெறியறிந்த
அன்பரே! தாங்களுரைத்தது மிகச்சரியே!
எவ்வுயிர்க்கு மன்பின் ஊற்றாம் உள்ளுறை ஆன்மாவும்
உற்றாருறவினரனைத்தும் ஆனீர் ஈஶனே!
தாங்களுரைத்த அறநெறிகளினிறுதி முடிவு
யாவர்க்குமிறைவனாம் தங்களையே அடைதலன்றோ?
எனவே, இற்றைக்கும் ஈரேழ் பிறவிக்கும் நும்தன்னோடு
உற்றோமேயாவோம் உமக்கே யாமாட்செய்வோம்!

[ஶ்ரீம.பா.10.29.33]

வாழ்வில் வல்லுநர் அன்பைச் செலுத்துவது எப்-
போழ்தும் பிரியமாம் தமதாத்மாவாமும்மிடமே!
இடும்பை ஈபவரே மணாளர், மக்கள் மற்றுமுற்றாருறவினர்,

ஆவதென்ன அவர்களால்?
ஈவிரக்கம் காட்டுமெம்மிடம் பரமேஶ்வரா!
பங்கயக் கண்ணா! உம்மிடம் பண்டே வைத்த எம்

பத்தி முறித்திடாதீர்!
[ஶ்ரீம.பா.10.29.34]

இதுகாறுமில்லமதில் ஈடுபட்டுவந்த எங்கள் மனம்
இப்போது நும்மால் கவரப்பட்டு வீட்டுப் பணிசெய்ய
இசைய மறுக்குமெமது கரங்கள் மற்றும் தங்கள்
இணையடிவிட்டு ஓரடியகல மறுக்குமெமது கால்கள்.
எவ்வாறு செல்வோம் கோகுலம்? என் செய்வோமங்கு சென்றுதான்?

[ஶ்ரீம.பா.10.29.35]

ஆற்றி அணையுங்கள் அஞ்சன வண்ணரே! தங்கள்
திருக்கனிவாயமுதமெனும் வெள்ளம் ஈந்து

ஆற்றி அணையுங்களெங்கள் நெஞ்சில் மூண்ட மோகக் கனலை.
உமது கனிந்த பார்வையும் இன்முறுவலும் மனதை மயக்கும்
மதுரக் குழலோசையும் காதலுணர்ச்சியைத் தூண்டி
எமது உள்ளமதில் பற்றியெரியும் காமத்தீயை
ஆற்றி அணையுங்களன்பரே தங்கள் திருக்கனிவாயமுதமீந்து!
இல்லையெனில், உம்மை அடையா விரஹத் தீயில்
வீழ்ந்து வெந்து மாள்வோம், அதுவும்
உம்மையே நினைந்துருகி

உமது மலரடியில் கலந்து கரைவோம் இறுதியில்.

[ஶ்ரீம.பா.10.29.36]

தாமரைக் கண்ணனே! நினது திருவடிச் சேவை
திருவிற்கும் கண நேரமே, அதுவுமெப்போதோவதுதான்.
ஏனெனில், இவ்வனவாஸிகளாமெம்மிடமே அன்பு வைத்து தாங்கள்

இங்கேதானே இருக்கிறீர் எப்பொழுதும்.
இப்போதுதானே கிட்டியது எமக்கு
இச்சரண ஸேவை பாக்கியம். ஆதலின்
இவ்வானந்தத்தை விடுத்து வேறொருவர் பொருட்டு
இயலவில்லை பணிசெய்ய எம்மால்.
[ஶ்ரீம.பா.10.29.37]

அலைமகளின் அருட் கடைக்கண் பார்வை பெற
அருந்தவம் புரியும் தேவர்கள் பணிசெய்

திருமகள் நின் வலமார்பிலுறைந்தும், பத்தர் போற்றும் நின்
திருவடித்துகள்தனை பெற விழைகிறாள் துளஸியுடன்.
அங்ஙனமே, யாமும் ஶரணடைந்தோம் உன்னடியை

உமது திருவடி தூளி பெறவே.
[ஶ்ரீம.பா.10.29.38]

பாபமொடு துன்பம் போக்கும் புண்ணிய மூர்த்தே!
தாபமொழிய தங்களை வழிபட வீடுவாசல் துறந்து
தஞ்சமென்று வந்துசேர்ந்தோமுமது சேவடி நீழலில்!
அருள்புரிவீர் ஆணழகா! எம்மை ஆட்கொண்டு அருள்புரிவீர்!
உமது அழகிய புன்னகையும், உமதானந்த கடைக்கண் பார்வையுமெமது

உள்ளத்தில் மூட்டிவிட்ட கடுங்காமத்தீயதில்

தீய்ந்து தவிக்கின்றோம்.

உமக்குத் தாஸியாகும் பாக்கியத்தைத் தந்தருளும்.
உமக்குப் பணிசெய்யும் பெரும்பேற்றையும் தந்தருளுமே!
பொன்னாய் மின்னுமெங்களெழில் மேனியில்
புரளுங்கள் புரந்தரரே கறுநீல பூடணமாய்!

[ஶ்ரீம.பா.10.29.39]

சுருள் கருங்குழல் சற்றே மறைத்த அழகிய திருமுகமும்
குண்டலங்களால் ஒளிவீசும் திருக்கன்னங்களும்
கொவ்வைச் செவ்வாயுதடுகளில் மிளிரும் திருவாயமுதமும்
மோகனப் புன்னகையால் கனியுமினிய திருப்பார்வையும்
அஞ்சேலென காக்குமிரு நீண்டுருண்ட திருக்கரங்களும்
அலர்மேல் மங்கையின்பமுடனுறை திருமார்பும்
கண்ணுற்ற நாங்கள் உமக்கே ஆட்செய்யுமடிமைகளானோம்.

[ஶ்ரீம.பா.10.29.40]

எமதருமை மணிவண்ணரே! புளகாங்கிதமடையும்
மரங்கள் மான்கள் கறவைகள் பறவைகள்

மற்றெல்லாமும் மங்களம் நல்கும் உமது திருமேனி தரிசனத்தால்.
மும்மைசால் உலகுக்கெல்லாம் உயர்ந்த மூல எழிலாமுமது

இன்பத் திருமேனி அழகைக் கண்டும்,
உள்ளங்கவர் இராக மூர்ச்சனைகளுடன் மோகமூட்டும்
உமது புல்லாங்குழல் கீதம் கேட்டும்,

மூவுலகிலுள்ள எப்பெண்தான் தன்னிலை பிறழாதிருப்பாள்?
ஆங்கே, சான்றோர் வகுத்த எல்லையை மீறாதவளாய்

எவரால்தான் இருக்க முடியும்?
[ஶ்ரீம.பா.10.29.41]
தாபம் தீர்ப்பீர் தாமரைக் கண்ணா!
நறுமணங்கமழ் உமது செங்கமலக் கரந்தனை
உமதடிமைகளாம் எமது மார்பிலும் தலையிலும் வைத்துத்

தாபம் தீர்ப்பீர் தாமோதரரே!

ஏழைப் பங்காளரே! காத்தருளினீரெம்மை இடர்பல இடும்பையிலிருந்து, அஃது,

ஆதிபுருஷராம் ஶ்ரீமந் நாராயணர் அவுணரையழித்து

அமரரை அணைத்தது போல்,
கோகுலத்தின் இடுக்கண் களைய
தாங்களெடுத்த திருவவதாரமல்லவா?
[ஶ்ரீம.பா.10.29.42]
ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:
யோகேஶ்வரர்க்கு ஈஶனாம்,

ஸ்வயம் பிரகாஶனாம், ஸச்சிதானந்த மூர்த்தியாம்
ஶ்ரீ கண்ணபிரான், மனம் நொந்து ஆய்ச்சியர் பகர்ந்த மொழிதனை

இரக்கமுடன் செவிமடுத்துக் கேட்டு
சற்றே புன்னகை பூத்த வண்ணம் கருணை பூண்டு
காதலில் இரமித்து ராஸலீலை செய்பவரானாரவர்களோடு.

[ஶ்ரீம.பா.10.29.43]

அச்சுதனெனும் திருநாமத்திற்கேற்ப பிறழ்வில்லா அறமே திருவுருவானான்,
தன்னடியார்களைக் கைவிடாது தடுத்தாட்கொண்டான்.
கோபிகைகள் புடைசூழ கம்பீரக் கருணையுடன்
காளமேக வள்ளல் லீலைகள் பல புரிபவரானார்.
கண்ணனின் கனிவான திருக்கண்பார்வை பற்றியாங்கே
கூடின கோபியர் முகங்கள் மலர்ந்து குலுங்க,

வெண்முத்து முல்லைச்சர முறுவலால் முகில்வண்ணன் திருமுகமொளி வீச அற்புதமாய்

வீற்றிருந்தார்.

கோபியர்கள் சூழ கோவிந்தனிருந்த நள்ளிரவு

தாரகைகள் சூழத் திருகுமானுருவக் கிறுக்கலுடை கதிர்மதியம் போலாயிற்றே!

[ஶ்ரீம.பா.10.29.44]

நூற்றுவராய் கோபிகைகள் வரிசை வரிசையாய்
வாஸுதேவனை மண்டலமாய்ச் சூழ்ந்தவன்
திருநாமந்தனைத் திரும்பத் திரும்ப ஓத,
அக்கீதமொட்டி அனந்தனவன்
குதிர் காலக் குமுதனையும், குமுதனொளியையும்
குமுதமலர்ந்த யமுனையைப் பாடியும் குழலிசைத்தும்,
தனது திருமார்பில் தவழும் வைஜயந்தி வனமாலையொளியால்
விருந்தாவனத்தை வலம்வந்தானொளிமய மாக்கியே.

[ஶ்ரீம.பா.10.29.45]

பனிபடர்ந்த குளிர்ந்த யமுனைக்கரை மணல்திட்டில்
ஆய்ச்சியர் சூழ ஆடிவந்தார் அஞ்சனவண்ணன்,
ஆங்கே யமுனையினானந்த அலைகள் மீது தவழ்ந்து,
அன்றே அலர்ந்த ஆம்பலின் நறுமணங் கமழ்
வீசுதென்றல்தனை அனுபவித்தவாரே.

[ஶ்ரீம.பா.10.29.46]
மாறவீரனின் மன்மதக் கணைகள்
விரஜ மங்கையர் மீது மாரி மாரி பொழிய,
கைகளை நீட்டிக் கட்டியணைத்தும்
தலைக் கேசத்தை நீவியும்
மதர்த்த முலைகளில் முகம் புதைத்தும்
எதிர்த்த நகில்களில் நகம் பதித்தும்
சிற்றிடை சிறிதசைத்தும்
துடைகளைத் தடவியும்

கேலிப்பார்வையாலும் குறும்புச் சிரிப்பாலும்

மதன மொழிகளாலும்
கோபியர் மனக்கிளர்ச்சி வளர்த்தும்
கேளிக்கை புரிந்தவண்ணம்
களியாடினாரே காதலுடன்.
[ஶ்ரீம.பா.10.29.47]

இங்ஙனம் பரந்தமனங்கொண்டவராம் பரந்தாமனால்
தங்கள் காம இச்சைகள் ஈடேறப் பெற்றும்
உலகின் பிற அழகிகளைவிட
கண்ணனே விரும்பியேற்ற தாமே
பெருமதிப்பிற்குரிய பாக்கியசாலிகளென
தமக்குள் இறுமாந்திருந்தனரே.
[ஶ்ரீம.பா.10.29.48]
மலரவன் மற்றும் மகேஶனை

தன் மோஹன அழகால் மயக்குவிக்கும் கேஶவன்
கோபிகைகள் கொண்ட கர்வம் கண்டு
அவர்தம் தற்பெருமையழிந்து மனந்தெளிவு பெற
அவ்விடத்திலேயே மறைந்தருளினாரே.

Series Navigationஅழிவுகள்அமைதி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *