ஜெயானந்தன்
உடைந்து போன மேகங்களை பார்த்து, பார்த்து பூரித்தது பூமி.
இறுகிப்போன மனங்களில் கூட
ஈரம் சுரந்து ராகம் பாடின.
பூமியிலே விழுந்த அமிர்த மழை
காட்டாறாய் கவிதை பாடி,
ஆடிக்கு போட்ட விதை
அறுவடைக்கு ஆடின.
ஆதிலெட்சுமி கல்யாணத்துக்கு
மாப்பிள்ளை வீடு வந்தாச்சு.
கோடீஸ்வரன் கோவிலுக்கு
பூசைகள் போட கிளம்பியாச்சு
தவிலுக்கும்,நாதஸ்வரங்களுக்கும்
தூசிதட்டினார் வளையப்பட்டி.
ஆடு மேய்க்கும் அன்னத்துக்கும்
ஷீட்டி பாவாடை தச்சாச்சு.
கரந்தை மூனிஸ்வரனுக்கு படையல்
போட்டாள் அன்னக்கிளி.!
ஆறு குளம் நிரம்பியாச்சு
அயிரை மீனும் வந்தாச்சு.
கச்சிதமா செலவு செய்ய
அம்மா கையில கொடுத்த பணம்
அஞ்சாரு பெட்டியிலே அளவோட செலவாச்சு!
ஊர் மக்கள் ஒன்று கூடி
ஆதாவனை கும்பிட்டு
மண்ணை வாரியெடுத்து
நெத்தியிலே போட்ட கோடு
மழை துளியில் நனைந்து ஓடி
பூமியெங்கும் ரேகையாக
கலந்த ஓடி, காவிரியில் சந்தம்பாடி
கடலோசை கவிதையாக
காலமெல்லாம் கேட்டதடி.
– ஜெயானந்தன்