Posted in

நீதி வழுவா நெறி முறையில்.

This entry is part 1 of 3 in the series 1 செப்டம்பர் 2024

ரவி அல்லது

பேச்சற்ற பின்னிரவு நேரத்தில்
விழுங்கிய
உணவு கவலத்திற்கு
அம்மாவின் கேவல்
தெரியாது.

சிருங்காரித்து
சேர்ந்தமர்ந்து
செல்லும்
வாகனத்தின்
டமா டமாவின்
கரும்புகையோடான
மல்லிகை வாசனை
வியக்க வைப்பவர்களுக்கு
அம்மாவின்
விசும்பல்
தெரியாது.

பிறிதொரு சமயம்
மூன்றாம் வகுப்பில்
சாயலொத்த ஒருவன்
இருக்கிறானென்ற
வியப்பில்
சொன்னதற்கு
அம்மா
அழுதது
அப்பொழுது
அதன் காரணம்
எனக்குத் தெரியாது.

ஆள் காட்டி விரலுக்கு
அசைந்தாடும்
கூட்டத்திற்கு
அறக்கூற்றான
அப்பா
நீதியாக
எனக்குள்
நின்றிருந்ததை
பொட்டழிக்காமல்
புறப்பட்ட அம்மா
பொசுக்கிவிட்டு
போனது

அவருக்கே தெரியாது.

நடு நிசி
கனவென
நான்
நினைத்த
ஒரு கேவல்…
ஒரு அறை…
ஒரு கெஞ்சலின்…
பொருட்டாக
சிறாரில் தொடங்கி
விடுதி மாறி
விடுதியாக
வேலையென
வெகு தூரம்
வந்தவனிடம்
அக்கா
அழுதுகொண்டே
கெஞ்சினாள்
அப்பாவை
கடைசியாக
காணொளியிலாவது
பாருடா
கல் நெஞ்சக்காரவென்று.

காரணமறியாமலையே
போகும்
அப்பாவுக்கும்
கடுஞ்சினமான
வீட்டாருக்கும்
அம்மாவின்
சாயலொத்த
என் மாற்றம்
அறியாததுதான்.


-ரவி அல்லது.

Series Navigationவலி வாங்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *