ஜீயெஸ்
வானத்தின் இருளை இரண்டாகக் கிழித்துக் கொண்டு, பல கிகாவாட் சக்தியோடு அந்த ஹாஸ்பிடல் வளாகத்தை தாக்கியது அந்த மின்னல். தொடர்ந்து, காதை பிளக்கும் ஓசையுடன் பாறாங்கற்களை உருட்டி விட்டாற்போல இடியும் இறங்கியது. அந்த உக்கிரசக்தியை தாங்க முடியாமல் அந்த ஹாஸ்பிடலில் இருந்த பல கோடி மதிப்புள்ள நவீன சாதனங்கள் சேதமடைந்தன. ஹாஸ்பிடல் முழுவதும் இருளில் மூழ்கியது. அந்த சமயம் இன்னொரு சம்பவமும் அங்கு நடந்தது. அந்த வளாகத்தின் இன்னொரு பகுதியில் மாடி அறை ஒன்றில் மானிட்டருடன் இணைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் உடல், அந்த இடி மின்னல் தாக்கிய நொடியில், ஒரு முறை அதிர்ந்து தூக்கிப் போட்டது. மூன்று வருடங்களாக கோமாவில் படுத்திருந்த ஐசு என்கிற ஐஷ்வர்யா முதன்முறையாக திடுக்கென்று கண் விழித்தாள்.
“டேய் அஷ்வின், வண்டியை இவ்வளோ வேகமா ஓட்டாதே. கொஞ்சம் மெதுவா போ”, என்றாள் ஐசு. அஷ்வின் அவள் சொன்னதைக் காதில் வாங்காமல் வழக்கம்போல வேகமாக ஓட்டினான். மற்ற விஷயங்களில் மிதமாக இருந்த அஷ்வினை, இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. இருவரும் சிறு வயது முதல் அக்கம்பக்கத்து வீடுகளில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அஷ்வினுடைய அப்பா சீனிவாசனும், ஐசுவின் அப்பா கணபதியும் நீண்ட கால நண்பர்கள். பல வருடங்களாக இரு குடும்பங்களும் பரஸ்பர சுக துக்கங்களில் பங்கு கொண்டு அன்னியோன்னியமாக இருந்தனர். சிறு வயதிலேயே அஷ்வினுக்கு ஐஸ்வர்யா என்று தீர்மானித்து விட்டனர். அதற்கெற்றாற்போல இருவருக்குமிடையே ஆழ்ந்த நட்பும், புரிதலும் இருந்தது. அஷ்வின் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, மேனேஜ்மென்ட் கோர்ஸில் தேர்ச்சி பெற்று சொந்த பிசினஸ் தொடங்கினான். பிஸினஸும் ஓரளவு நன்றாக நடந்து கொண்டிருந்தது. ஒரு சுபயோக சுபலக்னத்தில் இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது. வாழ்க்கை ஒரு வண்ணமயமான கனவு போல் போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடியது.
இருவரும் அவர்களுடைய முதல் வருட ஆனிவர்சரியை நண்பர்களுடன் கொண்டாடி விட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு வளைவில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த காரின் குறுக்கே நாய் வர, சடாரென்று பிரேக்கை அழுத்தினான் அஷ்வின். டயர்கள் தேய்ந்து ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்ற கார், பாதையின் நடுவில் இருந்த மீடியனில் மோதி, எகிறி மூன்று முறை சுழன்று எதிர் திசையில் குப்புற விழுந்தது. எதிர்சாரியில் வந்து கொண்டிருந்த சரக்கு லாரியின் ட்ரைவருக்கு கண்ணிமைக்கும் நேரத்தைவிட குறைவான அவகாசம்தான் இருந்தது ப்ரேக்கை அழுத்த. லாரியின் வேகம் கட்டுப்படாமல், காரின் மீது மோதி, காரை இருபது அடி தூரத்துக்கு தூக்கி எறிந்தது. எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் நடந்து முடிந்துவிட்டது.
அஷ்வினுக்கு கை கால் இரண்டிலும் ஃப்ராக்சர். பாண்டேஜ் போட்டிருந்தார்கள். ஓரிரு மாதங்கள் பிஸியோதெராபி செய்தால் சரியாகிவிடும், மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றார்கள். ஐஸ்வர்யாவிற்குத்தான் தலையில் பலத்த அடிபட்டு நினைவில்லாமல் இருந்தாள். ஸ்கான் செய்ததில் மூளையில் ரத்தக்கசிவு, உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்றார் டாக்டர் சிவராமன். எல்லோரும் கவலையோடு காத்திருந்தார்கள். சில மணிநேரம் கழித்து வெளியே வந்த டாக்டர், சீனிவாசனையும் கணபதியையும் தன் ரூமுக்கு தனியாக அழைத்து பேசினார். “மூளையில் ப்ளட் க்ளாட்டை எடுத்துட்டோம். ப்ளீடிங்கும் நின்னுடுத்து. கம்ப்ளீட்டாக ஹீல் ஆக ஒரு பதினைந்து நாள் ஆகலாம். ஆனா பேஷண்ட் இன்னும் கோமாவுலதான் இருக்காங்க. இப்போதைக்கு அவங்கள லைஃப் சப்போர்ட் ஸிஸ்டத்தில வைச்சிருக்கோம்” என்றார். “கோமாவிலிருந்து வெளியே வர இன்னும் எவ்வளவு நாள் ஆகும், டாக்டர்” என்று விசும்பியபடியே கேட்டார் கணபதி. தலையை ஆட்டினார் டாக்டர். “டெஃபனட்டா சொல்ல முடியாது. ஒரு வாரம் ஆகலாம், ஒரு மாசம் ஆகலாம், ஒரு வருஷம் ஆகலாம், ஏன், கோமாவுலேருந்து வெளியே வராமலும் போகலாம். இனி நம்ம கையில எதுவும் இல்லை” என்றார் டாக்டர். “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எப்படியாவது ஐசுவை காப்பாத்துங்க டாக்டர்” என்றார் சீனிவாசன். “லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்” என்று சொல்லி அனுப்பி வைத்தார் டாக்டர்.
அஷ்வின் தினமும் ஹாஸ்பிடல் வந்து ஐசுவைப் பார்த்துவிட்டு போவான். அவளுடைய இந்த நிலைமைக்கு தன்னுடைய பைத்தியக்காரத்தனம் தான் காரணம் என்று எண்ணி எண்ணி மருகினான். அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு சின்ன வயதில் அவர்கள் இருவரும் சேர்ந்து கழித்த இன்பமான தருணங்கள், அடித்த லூட்டிகள் எல்லாவற்றையும் நினைவு கூர்வான். இவன் பேசுவதையெல்லாம் அந்த அறையில் இருந்த கடிகாரமும், இயந்திரங்களும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.
நாட்கள் நகர்ந்தன. வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் வருடங்கள் ஆகின. ஐசுவின் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மெதுவாக குடும்பத்தினர் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தனர். அஷ்வின் இருந்த மனநிலையில் அவனால் முழுமையாக பிஸினஸில் கவனம் செலுத்த முடியாததால் மந்த நிலை ஏற்பட்டது. பணப்புழக்கம் குறைந்தது. முன்பைப்போல தாராளமாக செலவு செய்ய முடியவில்லை. கணபதிதான் முதலில் அவனிடம் பிரஸ்தாபித்தார். “அஷ்வின், இனிமே ஐசுவிக்கு குணமாகும்னு எனக்கு தோணலை. நாமும் கொஞ்சம் யதார்த்தமா யோசிக்கணும். அவளை இந்த நிலைமையில் ஒரு வெஜிடபிளாக பார்க்கவே கஷ்டமாயிருக்கு. அவளுக்கு ஒரு நிரந்தர விடுதலை குடுக்கணும்“ என்றார். அஷ்வினால் அந்த ரீதியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவர் சொன்னதில் இருந்த யதார்த்தம் புரிந்தது. “இவ்வளோ நாள் பொறுமையா இருந்துட்டோம். இன்னும் ரெண்டு மாசம் பார்ப்போம். ஏதும் இம்புருவ்மெண்ட் இல்லேன்னா கடவுள்விட்ட வழி” என்றான் அரை மனதாக. அந்த இரண்டு மாதங்களும் கழிந்தன எந்தவித மாறுதலும் இல்லாமல். வேறு வழியின்றி, இரண்டு குடும்பங்களும் டாக்டர் சிவராமனை கலந்தாலோசித்து, அவளுடைய அவஸ்தையை முடிவுக்கு கொண்டு வர தீர்மானம் செய்தனர். அவளுடைய முடிவு மற்றவர்களுடைய வாழ்வில் ஒளியேற்ற, அவளுடைய உறுப்புகளை தானம் செய்வது என்று முடிவானது. அடுத்த சனிக்கிழமை அஷ்வின்- ஐஸ்வர்யாவினுடைய நான்காவது வெட்டிங் ஆனிவர்சரியன்று அதற்கான தேதியும் குறிக்கப்பட்டது. அதற்கான நடைமுறைகளையும் விவரித்தார் டாக்டர் சிவராமன். சனிக்கிழமை காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் பார்க்க வேண்டிய உறவினர்கள் எல்லாம் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். ஒன்பது மணியளவில் மானிட்டருடனான தொடர்பு துண்டிக்கப்படும். சில நேரம் கழித்து, உயிர் பிரிந்ததை உறுதி செய்தபின், அவளுடைய உடல் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டு, உறுப்பு தானத்திற்கு தயார் செய்யப்படும். தயார் நிலையில் இருக்கும் டாக்டர் குழுக்கள் அவளது உறுப்புகளை மற்ற பேஷண்டுகளுக்கு பொறுத்துவதற்கான ஆபரேஷனில் ஈடுபடுவார்கள். ஏதாவது சந்தேகம் அல்லது கேள்விகள் இருக்கிறதா என்று கேட்டார் டாக்டர். இல்லை என்று தலை அசைத்தார்கள் எல்லோரும்.
அஷ்வின் சனிக்கிழமையன்று ஹாஸ்பிடலுக்கு வர மறுத்து விட்டான். ஐசு உயிரோடு திரும்ப வருவாள் என்று நம்பிக்கையோடு இவ்வளவு நாள் ஹாஸ்பிடலுக்குப் போய்க் கொண்டிருந்தான். அவளுடைய உயிரைப் பறிக்கும் அந்த தருணத்தைப் பார்க்கும் சக்தி தனக்கில்லை. தான் கண்டிப்பாக வர முடியாது. என்ன கையெழுத்து வேண்டுமோ, இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டான். டாக்டர் சிவராமன் சனிக்கிழமையன்று நடக்க இருந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு அந்த ஹாஸ்பிடல் வளாகத்தை இடியும் மின்னலும் தாக்கியது.
கண்களைத் திறந்து பார்த்த ஐசுவுக்கு தான் எங்கே இருக்கிறேன் என்று புரியவில்லை. அறை ஒரே இருட்டாக இருந்தது. தீடிரென்று வந்த மின்னல் கீற்றில், ஒரு ஹாஸ்பிடல் அறையில் இருப்பது தெரிந்தது. எதற்காக ஹாஸ்பிடலில் இருக்கிறோம், என்ன ஆயிற்று தனக்கு என்று ஒரே குழப்பமாக இருந்தது. தலை லேசாக வலித்தது. சிறிது நேரம் கழித்து வெளியே ஆளரவம் கேட்டது. கதவை திறந்து கொண்டு நைட் டூயூட்டி நர்ஸ் உள்ளே வந்தார். அறையில் மின்சாரம் இல்லாததைக் கண்டு, உடனே எலெக்ட்ரீஷனை கூட்டி வரப் போனார். எலெக்ட்ரீஷன் வந்து ஃப்யூசை போட்டார். நர்ஸ் “அப்படியே மானிட்டர் சரியா இருக்குதான்னு செக் பண்ணிடுங்க. பாவம் மூணு வருஷமா இந்த பேஷண்ட் மானிட்டர் சப்போர்ட்லதான் கோமாவுல இருக்காங்க. தெனமும் இந்த பொண்ணோட புருஷன் வந்து, கையைப் பிடிச்சிக்கிட்டு, இந்தம்மாவுக்கு கேக்குதோ இல்லியோ, பேசிட்டு போறாரு. பாக்கவே பரிதாபமா இருக்கு” என்றார். மானிட்டரை செக் செய்த எலெக்ட்ரீஷன், “எல்லாம் சரியா இருக்குங்க“ என்று சொல்லிவிட்டு போனார்.
என்னது, மூன்று வருடங்களாக கோமாவில் இருந்தோமா? நினைக்கவே திகைப்பாக இருந்தது. கஷ்டப்பட்டு, என்ன நடந்தது என்று நினைவுக்குக் கொண்டு வர முயர்ச்சித்தாள். மெதுவாக பனிமூட்டம் போல அன்று நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. கார் குப்புற விழுந்து லாரியால் தூக்கியடிக்கப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. முதலில் அஷ்வினைப் பற்றியே நினைக்க முடிந்தது அவளால். அஷ்வின் உனக்கு என்ன ஆச்சு. பலத்த அடி எதுவும் இல்லையே. தினமும் என்னை வந்து பார்த்ததா நர்ஸ் சொன்னாரே. எவ்வளோ அன்பு உனக்கு என் மேல. என்னோட கையைப் பிடிச்சிண்டு பேசினாயாமே. என்ன பேசினாய் என்னோடு? எனக்கு ஒண்ணுமே கேக்கலையே. மூணு வருஷமா நான் இப்படி இருக்கறதைப் பார்த்து எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பே? இப்போ எனக்கு சுயநினைவு வந்துடுத்து தெரியுமா. எவ்வளோ சந்தோஷப்படுவே நீ. ஒரு பொண்ணு குழந்தை வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டே இல்லே. உனக்கு அழகான ஒரு பொண்ணு குழந்தையை பெத்து குடுக்கறேன். அப்பறம் எனக்கு க்யூட்டாக ஒரு பையன். அது போதும். ஆனா ஒண்ணு. இனிமே நீ காரை மட்டும் தொடக் கூடாது. வேணா ஒரு ட்ரைவரைப் போட்டுக்கலாம். சீக்கிரம் வா அஷ்வின். உன்னை பாக்காம இருக்க முடியல்ல. நான் கண்ணைத் திறந்து முதன்முதலா உன்னைத்தான் பாக்கணும். வேற யாரையும் பாக்க மாட்டேன். நான் கண்ணைத் தெறந்ததும் உன் முகத்தில் வர அதிர்ச்சியையும் சந்தோஷத்தையும் என் கண்ணால் பார்க்கணும். மனதில் அஷ்வினுடன் பேசிக் கொண்டு போனாள். அவளுக்கு கொஞ்சம் அசதியாக இருந்தது. மெதுவாக விடிய ஆரம்பித்தது.
நேரம் எட்டு மணி ஆயிற்று. உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் ஹாஸ்பிடல் லாபியில் கூடியிருந்தனர். பலர் பூங்கொத்துக்களுடன் வந்திருந்தனர். டாக்டர் ஒவ்வொருவராகப் போய், சீக்கிரம் வந்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். முதலில் அவளுடைய நெருங்கிய தோழிகள் உள்ளே போனார்கள். அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் ‘ஹாப்பி ஆனிவர்சரி ஐசு’ என்று வாழ்த்தி, பூங்கொத்தை டேபிளில் வைத்துவிட்டு வந்தனர். சிலர் ‘விஷ் யூ ஆல் தி பீஸ்’ என்றனர். ‘ஓ, இன்று எங்களுடைய ஆனிவர்சரியா. அதுதான் எல்லாரும் விஷ் பண்ண வந்திருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டாள் ஐசு. பிறகு உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சென்றனர். நள்ளிரவிலிருந்து விழித்திருந்ததால் ஐசுவிற்கு தூக்கம் கண்ணை சுயற்றியது. அஷ்வின் சீக்கிரமா வாடா.
அஷ்வினுடைய தங்கை வசந்தி வந்தாள். இருவரும் நெருங்கிய தோழிகள். ஐசுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு விசும்பினாள். ‘ஒரு பையன் நல்லவனா இருக்கான்னு தோணுது, ப்ரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்னு’ சொன்னியே. ப்ரபோஸ் பண்ணியா? இல்லே கல்யாணமே ஆயிடுத்தா. ஆகல்லேன்னா நான் திரும்ப வந்ததும் கலந்துக்கற முதல் பங்க்ஷன் உன் கண்யாணமாத்தான் இருக்கணும். மனதுக்குள் பேசினாள் வசந்தியோடு. துக்கம் தாளாமல் வெளியே போனாள் வசந்தி.
அஷ்வின் எங்கேடா நீ? சீக்கிரம் வா, எனக்கு தூக்கமா வருது.
அம்மா வந்தாள். கோவிலிலிருந்து கொண்டு வந்த விபூதி குங்குமத்தை அவள் நெற்றியில் இட்டு விட்டாள். “உன்னை இந்த கோலத்துல பார்க்கவாடி பெத்து வளர்த்தேன். எங்கேயிருந்தாலும் நன்னா இருடி பொண்ணே” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். ‘அம்மா, அழாதேம்மா. எனக்கு ஒண்ணும் இல்லேம்மா. எனக்கு எல்லாம் சரியாயிடுத்து. உன்னோட பேச வேண்டியது நிறைய இருக்கும்மா. கொஞ்சம் பொறுத்துக்கோ. இப்ப அஷ்வின் வந்துடுவான். எங்கேடா போயிட்டே. சீக்கிரம் வாடா ‘.
அம்மாவை கைத்தாங்கலாக வெளியே விட்டு வந்தார் அப்பா. கூடவே டாக்டரும் வந்தார். அப்பா அருகில் வந்து கையைப் பிடித்துக்கொண்டு தலையை கோதி விட்டார். “வலிக்குமா டாக்டர்” என்று கேட்டார். ‘வலிக்கவே இல்லேப்பா. துளிகூட வலி இல்லே. நான் நல்லாயிட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல பழையபடி நடமாட ஆரம்பிச்சுடுவேன். இப்ப அஷ்வின் வந்தவுடனே உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸ் குடுக்கறேன்’. அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் தூங்கிப் போனாள்.
டாக்டர் சிவராமன் கணபதியைப் பார்த்து, “இட்ஸ் டைம் நவ். வீ ஹாவ் டு கெட் ஆன் வித் இட்” என்றார்.
அஷ்வின் அவனுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தது கொண்டிருந்தான். அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஐசுவின் நினைவாகவே இருந்தது. கம்ப்யூட்டரை ஆன் செய்து வேலை செய்யலாம் என்று பார்த்தான். கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க முற்பட்டான். அதிலும் மனம் லயிக்கவில்லை. தூக்கி எறிந்தான். தலையே வெடித்து விடும் போல இருந்தது. ஹாஸ்பிடலக்கு போகக்கூடாது என்ற அவன் தீர்மானம் தவிடு பொடியாகிப் போனது. கடிகாரத்தைப் பார்த்தான். 8.35 ஆகியிருந்தது. ஹாஸ்பிடல் போக குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். உடனே பாண்ட் சட்டையை மாட்டிக்கொண்டு காரில் குதித்தான். இன்று வழக்கத்தை விட ரோடில் அதிக டிராபிக் இருப்பதாகத் தோன்றியது. அப்படி என்னதான் அவசர வேலை இன்று எல்லோருக்கும்? வழி நெடுக வண்டி ஹாரனை அழுத்திக் கொண்டே வந்தான். எல்லாரும் கடுப்பாகி இவனைப் பார்த்தார்கள். ஒரு டிராபிக் சிக்னலில் எல்லா வண்டிகளை நிறுத்தி விட்டார்கள். வி.ஐ.பி பட்டாளம் போகிறது. அவர்களுடைய வண்டிகள் போன பின்தான் டிராஃபிக்கை கிளியர் செய்ய முடியும் என்று சொல்லி விட்டார் கான்ஸ்டபிள். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்று பார்த்தான். இடது பக்கம் ஒரு ஒன்-வே இருந்தது. அதில் போனால் சீக்கிரம் போய்விடலாம். சற்றும் யோசிக்காமல் வண்டியை ரிவர்ஸ் எடுத்து அந்த தெருவில் புகுந்தான். டிராபிக் கான்ஸ்டபிள் எங்குதான் ஒளிந்து கொண்டிருந்தாரோ தெரியவில்லை, இவன் வண்டி வருவதைப் பார்த்ததும் குறுக்கே பாய்ந்து வழிமறித்தார். “சார், இது ஒன்-வே. போர்டு போட்டிருக்குதே, பாக்கலையா” என்று கேட்டார்.
“சார், சார், அவசரமா ஹாஸ்பிடலுக்கு போறேன். என்னோட ஓய்ஃப் சீரியசா இருக்காங்க. உடனே போயாகணும், சார்” என்றான்.
“போலீஸ்காரன்கிட்டே மாட்டினா, எல்லாரும் இது மாதிரிதான் ஏதாவது காரணம் சொல்றாங்க. இது ஸ்கூல் ஸோன் வேற. யாராவது வண்டில அடிபட்டு செத்து தொலச்சாங்கன்னா, யார் சார் பதில் சொல்றது? உங்களோட லைசென்ஸும், R.C புக்கும் எடுங்க” என்றார் போலீஸ்காரர்.
இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருந்தது. வேறு வழியின்றி கார் டாஷ் போர்டில் இருந்து டாகுமெண்ட்ஸ்ஸை எடுப்பது போல வண்டிக்குள் நுழைந்தான். சடாரென்று கார் கதவை மூடி, டயர்கள் தேய்ந்து புகை வர, அசுர கதியில் காரைக் கிளப்பி, சீறிப்பாய்ந்து சென்றான். இதை சற்றும் எதிர்பாராத போலீஸ்காரர், சுதாரித்துக் கொண்டு கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தந்தார்.
டாக்டர் சிவராமன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. அவர் தன்னுடைய முப்பது வயது சர்வீசில் எத்தனையோ மரணங்களை பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் மனதை பாதித்த போதிலும், போகப் போக, சகஜமாகப் போய்விட்டது. ஆனாலும் கருணைக் கொலை என்பது அவருடைய சர்வீசில் இதுவே முதல் முறை. என்னதான் மருத்துவம் முன்னேறி இருந்தாலும், பிறப்பும் இறப்பும் மனிதன் கையில் இல்லை. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை திடமாக நம்பினார். ஒவ்வொரு முறையும் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழையும்போது, ‘இறைவா, என்னால் ஆன முயற்சியை நான் செய்கிறேன். இந்த உயிரை பிழைக்க வைப்பது என்பது உன்னுடைய கையில் மட்டும்தான் இருக்கிறது’ என்று வேண்டிக் கொண்டுதான் ஆபரேஷனை ஆரம்பிப்பார். கருணைக் கொலையில் சிறிதளவும் அவருக்கு உடன்பாடில்லை. அதுவும் இந்தப் பெண்ணுக்கு அவருடைய மகளின் வயதுதான் இருக்கும். வாழ வேண்டிய வயதில் உயிரைப் பறிக்கும் செயலில் ஈடுபட அவரது மனம் சஞ்சலம் அடைந்தது. விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். அருகிலிருந்த ஸிஸ்டர், அவரது மனநிலையை புரிந்துகொண்டு, “டாக்டர், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. உங்களுக்கு டீ ஆர்டர் பண்ணவா?” என்று கேட்டார். ஆகட்டும் என்பது போல தலையை ஆட்டினார். டீயைக் குடித்து விட்டு சிறிது நேரம் கழித்து மனதைத் திடப்படுத்திக் கொண்டு, “ஓகே, ஸிஸ்டர். லைஃப் சப்போர்ட் ஸிஸ்டத்தை எல்லாம் டிஸ்கனெக்ட் பண்ணிடுங்க. கால் மணி நேரம் கழித்து பாடியை ஆபரேசன் தியேட்டருக்கு மூவ் பண்ணிடுங்க. சைன் பண்ண வேண்டிய டாகுமெண்ட்ஸ் எல்லாம் என் ரூமுக்கு அனுப்புங்க” என்றவாறு அறையை விட்டு வெளியேறினார். கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்களாக ஐசுவை தன் பெண்ணைப் போல பார்த்துக் கொண்டிருந்த ஸிஸ்டரின் மனதை என்னவோ செய்தது. அவள் தலையை கோதி விட்டு, குனிந்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு, “ரெஸ்ட் இன் பீஸ், மை டியர்” என்று சொல்லி அவளுடைய முகத்தில் இருந்த மாஸ்க் மற்றும் இதர இணைப்புகளை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்தார். மிஞ்சிப்போனால் இன்னும் கால் மணி நேரம். எல்லாம் அடங்கிவிடும். அந்த அவலத்தை பார்க்க மனமில்லாமல், கனத்த இதயத்துடன் அறையின் கதவை மூடிக்கொண்டு ஸிஸ்டர் வெளியேறினார்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐசுவுக்கு திடீரென்று நெஞ்சை அடைப்பது போல உணர்ந்தாள். மூச்சு முட்ட ஆரம்பித்தது. நெஞ்சில் யாரோ உட்கார்ந்து கொண்டு அழுத்துவது போல வலித்தது. உடம்பு தூக்கி தூக்கிப் போட ஆரம்பித்தது. மெல்ல…. மெல்ல…. அவள் சுயநினைவை இழக்க ஆரம்பித்தாள்.
அஷ்வின் காரை இந்த அளவு வேகமாக அவன் வாழ்நாளில் ஓட்டியது இல்லை. ஆக்ஸிலரேட்டரை எவ்வளவு அழுத்த முடியுமோ அவ்வளவு அழுத்தியும், வண்டி மெதுவாக ஊர்ந்து போவது போல இருந்தது. தூரத்தில் போலீஸ் வண்டியின் சைரன் ஒலி கேட்டது. சில வண்டிகளை இடித்துத் தள்ளி, ஒரு வழியாக ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தான். போர்ட்டிகோவில் வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக உள்ளே போக முயற்ச்சிக்கையில் வாட்ச்மென் “சார், காரை இங்க நிப்பாட்ட கூடாது” என்றார். சாவியை தூக்கிப் போட்டு, “பார்க் பண்ணிடுங்க. அவசரமா போகணும்“ என்று லிஃப்ட்டை நோக்கி விரைந்தான். லாபியில் உட்கார்ந்து கொண்டிருந்த உறவினர்கள் இவனைப் பார்த்ததும் “அஷ்வின், அஷ்வின்” என்று கத்திக் கொண்டு வந்ததை கூட கவனிக்கவில்லை. லிஃப்ட் கதவு திறந்தவுடன், ஐசுவின் அறையை நோக்கி ஓடினான். கதவை திறந்து உள்ளே சென்றதும் யாரும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். ஐசுவின் உடம்பு தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். பதறிப்போய் “ஐசு, ஐசு. உனக்கு என்னம்மா பண்றது. நான் அஷ்வின் வந்திருக்கேன் பாரு.. நான் பேசறது உனக்கு கேக்குதா. கண்ணை திறந்து பாரும்மா” என்று அவளைப் பிடித்து உலுக்கினான். ஐசு கண்களை திறக்க முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை. கண்களில் இரண்டு பாறாங்கற்களை கட்டி விட்டாற்போல இருந்தது. கையை அசைக்க முயன்றாள். முடியவில்லை. அஷ்வின் அவளது கன்னத்தில் தட்டி “கண்ணை திற ஐசு. கண்ணை திறந்து பாரு” என்று வெறி பிடித்தது போல் உலுக்கிக் கொண்டிருந்தான். ஐசுவிற்கு அவனுடைய குரல் பல மைல்களுக்கு அப்பால் கேட்பது போல இருந்தது. தன்னுடைய உயிர் பிரிவதற்கு முன் ஒரு முறை அவனைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் உயிரில் இருந்த சக்தியையெல்லாம் திரட்டி, கடும்முயற்சியுடன் கண்களை மெல்ல மெல்லத் திறந்து அவனைப் பார்த்தாள் ஐசு. அப்போது கதவைத்திறந்து கொண்டு உறவினர்கள் கூட்டம் உள்ளே வந்தது. அவர்களைப் பார்த்து “ஐசு கண்ணை திறந்து பார்த்தா. உடனே டாக்டரை கூட்டிக்கிட்டு வாங்க.” என்று கத்தினான். எல்லோரும் திசைக்கு ஒருவராக ஓடினார்கள். ஸிஸ்டர்தான் இந்த களேபரத்தைக் கண்டு முதலில் ஓடி வந்தார். “ஐசு கண்ணை திறந்து பார்த்தா ஸிஸ்டர். அவள் உயிரோடு இருக்கா. அவளை எப்படியாவது காப்பாத்துங்க ஸிஸ்டர்” என்று கதற ஆரம்பித்தான். ஸிஸ்டர் துரிதமாக இயந்திரங்களுடனான இணைப்பை மீண்டும் பொருத்தினார். டாக்டர் சிவராமனும் உள்ளே விரைந்து வந்தார். “எல்லாரும் கொஞ்சம் வெளியே போங்க” என்று அனுப்பிவிட்டு சிகிச்சையை ஆரம்பித்தார்.
இரண்டு நாள் கழித்து ஐசுவை டிஸ்சார்ஜ் செய்தார் டாக்டர் சிவராமன். குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து டாக்டருக்கு நன்றி சொன்னார்கள். ஐசு கோமாவில் இருந்து மீண்டது முற்றிலும் கடவுளின் செயல், தன் பங்கு ஒன்றும் இல்லை என்றார் டாக்டர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை செக்கப்பிற்கு வந்து செல்லும்படி சொல்லி அனுப்பினார்.
அடுத்த இரண்டு நாட்கள் உறவினர்களும், நண்பர்களும் வருவதும் போவதுமாக வீடு ஏக களேபரமாக இருந்தது. அவர்களுக்கு தனிமையில் சிறிது அவகாசம் கிடைத்ததும், அஷ்வின் ஐசுவைப் பார்த்து, “பாவி, சண்டாளி. அத்தனைப் பேரு வந்து பாத்திருக்காங்க. கண்ணை மூடிண்டு பாசாங்கு பண்ணிண்டு படுத்துண்டிருக்கே. அஞ்சு நிமிஷம்……இன்னும் அஞ்சே நிமிஷம் நான் லேட்டா வந்திருந்தேன்னா எல்லாம் முடிஞ்சிருக்குமேடி, பாவி” என்றான்.
அவனுடைய சட்டையைப் பிடித்து உலுக்கியபடி, “நீ மட்டும் என்னவாம். என்னை கொல்ல எப்படிடா உனக்கு மனசு வந்தது. என்னை கொன்னுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு, ஜாலியா இருக்கலாம்னு பாத்தியா? உன்னை அவ்ளோ ஈசியா விட்டுடுவேன்னு நெனச்சியா? ஆவியா வந்து, உன்னை உண்டு இல்லேன்னு பண்ணியிருப்பேன், தெரியுமா?” என்றாள் ஐசு.