கலைவாணன் கணேசன்
ஓர் இலக்கிய விமர்சகரிடம் ஒருவர் கேட்டார்: “இக்கவிதையில் அது சரியில்லை! இது சரியில்லை! என்று சொல்கிறாயே, உன்னால் ஒரு கவிதை எழுத முடியுமா ?”
அவர் சொன்னார்: “ஒரு நாற்காலி செய்ய ஆர்டர் கொடுத்தேன். தச்சர் செய்து கொண்டு வந்தார். அதை நான் பார்த்து, நாற்காலி சரியாக நிற்கவில்லையே! கால்களை சரியாக அளந்துதான் வைத்தாயா ? என்றவுடன் தச்சர் அதை சரி செய்துதர எடுத்து சென்று விட்டார். தச்சர் “நீயே செய்து கொள்ளவேண்டியதுதானே? என்று எரிச்சல்படவில்லை. ஏனென்றால், நாற்காலி செய்வது தச்சரின் வேலை. அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது என் வேலை.“
நான் திண்ணையில் (sept 2) வெளிவந்த பென்னேசன் என்பவரின் ‘மன்னிப்பு’ என்ற சிறுகதையை வாசித்தேன். வாசித்தபின் என்னுள் எழுந்த எண்ணங்கள் இக்கட்டுரை. வாசிக்குமுன் மேற்சொன்ன நாற்காலி விஷயத்தை நினைவில் கொள்ளவும்.
இக்கதை ஒரு விபரீதமான கற்பனை. ஆபாச சொற்கள் நிறைந்த மொழி நடை. இந்தி, தமிழ், சமஸ்கிருதம்,, ஹரியான்வி (ஹரியானாவில் பேசப்படும் ஹிந்தி) விரவி அடித்திருக்கிறார். தில்லி மத்திய அமைச்சகம் ஒன்றில் பணிபுரியும் ஒரு சின்ன அதிகாரி, அவரின் பெரிய அதிகாரி, இருவருக்கும் பெரிய அதிகாரி, இவர்கள் அனைவருக்கும் பெரிய அதிகாரி: இவர்கள் பற்றிய கதை.
‘சின்ன’, ‘பெரிய’ என்ற சொற்களை எழுத கதாசிரியருக்கு மனம் வரவில்லை. ‘சோட்டா’, ‘படா’ என்ற இந்தி சொற்களிள்மீது அபரிதமான காதல். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட கதாபாத்திரங்கள் அம்மொழியில் பேசினால் எதார்த்தம். ஆனால் ‘கதை சொல்லி’ பாத்திரமான ருக்மாங்கதன் ஒரு தமிழர். அவர் நினைப்பிலேயே சோட்டா, படா என்றுதான் வருகிறது. ஏன்? இந்தியை ஆதிக்கத்தால் ஏற்றோம் என்றால் பரவாயில்லை. தானே எடுத்து தன் மேலே போட்டுக்கொள்வார்களா?
ருக்மாங்கதனின் மனைவி தன் கணவனின் பெயரை சுருக்கி அழைப்பதும், நண்பர்களும் தோழர்களும் அவ்வாறே அழைப்பதும் அன்யோன்யத்தின் வெளிப்பாடு. ஆனால், இங்கே மேலதிகாரி தன் கீழ் பணிபுரியும் ருக்மாங்கதனை ‘ருக்கு’ என்கிறார். அப்படி அழைக்க அவர்களுக்கிடையில் என்ன? தனிப்பட்ட பாச உணர்வா?
தில்லி போலீசையே தன் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கும் அமைச்சகம். ஒரு நான்காம் நிலையில் உள்ள சின்ன அதிகாரிக்கு (மங்கோலால்) தில்லி போலீசுக்குப் போன் போட்டு ‘உனக்கு ஒரு காரை அனுப்பச் சொல்கிறேன்!’ என்று சொல்லும் அதிகாரத் தோரணை இருக்கிறது. நம்பலாம். அந்த அமைச்சகத்தின் மேலதிகாரியை பொது இடத்தில் வைத்து அடித்துவிட்டான் ஒரு தில்லி கான்ஸ்டபிள். இதுவும் நடக்கலாம். ஆள் தெரியாமல் போலீஸ் அடிப்பது எங்கும் நடக்கும். ஆனால், அந்த மேலதிகாரியிடம் மன்னிப்பு கேட்டு விட்டால் எல்லாம் சுபம் ஆகிவிடுகிறது என்பது விபரீத கற்பனையில் கூட வராது. அடிபட்ட காட்சி யு டியூபில் வந்தால் என்னவாகும் ? ஆனால், வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அடிபட்ட அதிகாரி பயப்படுவார் என்று பூடகமாக முடிக்கிறார் கதையை. குற்றவாளிக்குத் தண்டனை கொடுத்தால், அது வெளியில் தெரிந்தால், தண்டிக்கும் அதிகாரி அவமானப்பட வேண்டும் என்று நினைக்கிறார் கதாசிரியர்.
ருக்மாங்கதனின் மேலதிகாரிமங்கோலால் சின்ன அதிகாரியான ருக்மாங்கதனின் வீட்டிற்கே வந்து அவன் மனைவியிடம் அநாகரிகமாக பேசுகிறார். எப்போதாவது ஓர் சூழலில் அப்படி நடந்தது என்றால் எதார்த்தம். ஆனால் அதுவே வழக்கம் என்று நினைக்க வைக்கிறார். எந்த ஆபிசில் இப்படி நடக்கிறது? பின்னர் அவன் மனைவி திட்டியதும் “என் மருமகளே!” என்று அழைத்து சமாதானப்படுத்தினாராம். அதாவது ஒரு மாமனார் தன் மருமகளிடம் அநாகரிகமாக பேசலாம். என்ன வக்கிரமான சிந்தனை இது !
அந்த மேலதிகாரி ருக்மாங்கதனிடம் எப்போதுமே ஆபாசமாக பேசுகிறார். ‘லுக்காய்’ என்ற ஆபாச சொல்லால்தான் தன் மனைவியை குறிப்பிடுவாராம். அதையே கீழ் அதிகாரியிடம் சொல்வாராம்! அடடே !
//ஹரே போஸடிகே… கஹான் மர்கயா தூ… ஜா.. தேரா பாப் தேரேகூ டூண்ட்ரஹா ஹைன்…”// மங்கோலால் ருக்மாங்கனிடம் போனில் சொல்கிறார் இவ்வாக்கியத்தை.
இரண்டாம் சொல்லை திண்ணை வாசகர்கள் இணையத்தில் தேடினால், ஏன் பார்த்தோம் என்று வருந்துவார்கள். அது ஒரு விபச்சாரியின் பெண் குறியை குறிக்கும் சொல். அதன் வழி வந்தவனே ! என்று மங்கோலால் சொல்கிறார். அதாவது ‘தேவடியாப்பயல்’! மேலதிகாரி தன் கீழ்வேலைபார்க்கும் அதிகாரியை ‘தேவடியாப்பயலே! என்கிறாராம். தில்லி மத்திய உட்துறை அமைச்சகம் கற்றோர் பணி செய்யும் அலுவலகமா ? அல்லது, தெருப்பொறுக்கிகளின் கூடாரமா ?
//லே பாய் ரூக்கு… தேரா லுகாயி ஆயீ ஹை”//
லுகாயி என்ற சொல் “மிகவும் ஆபாசமான சொல்” என்கிறார் கதாசிரியர். ஏன் ஆபாசம்? என்று சொல்ல மாட்டாராம். அதாவது, வாசகர்கள் குழந்தைகள். அவர்களுக்குத் தெரியக்கூடாது! ஆபாச சொற்களை கேட்டு சீரழியக்கூடாதென்ற அக்கறை. நன்றி சொல்லலாம். ஏன், ஒரு ஹரியானக்காரரிடம் கேட்டால் சொல்லப்போகிறார்! இதையா கதையில் எழுதுவார்கள் என்றும் கேட்பார்.
அந்த ஹரியானா கதாபாத்திரத்தை ஜாட் என்ற ஜாதி சொல்லியே நமக்கு காட்டுகிறார். அதாவாவது ஜாட்டுகள் நாகரிகம் இல்லாதவர்கள் என்று நாமெடுக்க வேண்டும். உண்மை என்ன? இஜ்ஜாதியினர் மட்டுமல்ல. மற்ற ஜாதியினரும் ஹரியானாவில் வாழ்கிறார்கள். தற்போதை ஹரியானா முதல்வரே ஜாட்டில்லாத பிற ஜாதியினர். (நயப் சிங் சைனி). ஜாட்டுகளைப் பொறுத்தவரை சீக்கியர்களின் பெரும் பிரிவு இவர்களே. பாலிவுட் நடிகர்களில் பிரபலமானவர் இவர்களே கபூர் குடும்பமே ஜாட்டுகள்தான். தமிழில் நடிக்கும் மும்பை நடிகைகள் (தமன்னா, ராகுல் ப்ரீத் சிங், சிம்ரன்) ஜாட்டுகளே! முன்னாள் இந்திய பிரதமர் ஐ கே குஜ்ரால் ஜாட் ஜாதியினர். ஆனால் இக்கதை அவர்களை பண்பில்லா காட்டுமிராண்டிகளாகக் காட்டுகிறது. ஜாதியை குறிப்பிட வேண்டிய அவசியமென்ன ?
ஆபாச சொற்கள் கதைக்கு எதார்த்த நிலையையும் ஒரு தேவையான அதிர்ச்சியையும் கொடுக்க வல்லவை. பல கதைகளில் வாசித்திருக்கிறோம். தலித்திய எழுத்தாளர்கள், கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கை பற்றிய மற்ற எழுத்தாளர்களின் கதைகள் – இவற்றில் வரும். அங்கே கதாமாந்தர்கள் நாகரிகத் தமிழில் பேச மாட்டார்கள். அப்படி பேசினால் வாசகர்கள் கதையோடு ஒன்ற முடியாது. ஒரு போலித்தனமான எழுத்தை வாசிக்கத்தான் வேண்டுமா? என்று எரிச்சல்படுவார்கள். அம்மக்கள் அப்படித்தான் பேசுவார்கள் எனபதால் அவை அங்கே கட்டாயமாக்கப்படுகின்றன .
இங்கே அமைச்சகம் ஒன்றில் அதிகாரிகள் வெளியில் சொல்லக்கூசும் சொற்களிலேயே பேசிக்கொள்கிறார்கள்! அமைச்சகமும் சேரியும் ஒன்றா?
ருக்மாங்கதன் வெளியே வருகிறான். அறை வாயிலில் அமர்ந்திருக்கும் அலுவலர் ஆங்கிலத்தில் கேட்கிறார். உள்ளே ருக்மாங்கதன் சந்தித்த மேலதிகாரி ஆந்திராவை சேர்ந்த டெபுடி கமிஷனர். எந்த மொழியில் பேசினார்? ருக்காங்கதன் தேவ் மனைவிடம் பேசிவிட்டு இறங்கும் போது, “டிக் ஹை மேம் சாஹிப் !” என்கிறான். அப்பெண் எந்த மொழியில் பேசினார்? அவர் பேச்சு கதையில் தமிழில்தானே கொடுக்கப்பட்டிருக்கிறது ? இவர் பேச்சு மட்டுமென்ன ஹிந்தியில் ?
கதையில் கையாளப்பட்ட உரையாடல்கள் தாறுமாறாக இருக்கின்றன. யார் எம்மொழியில் பேசினார் என்ற குழப்பம். தமிழன் இந்தி பேசுகிறான்! இந்திக்காரன் தமிழில் பேசுகிறான்!! கதை கற்பனை என்றாலும் லாஜிக் உதைக்கக் கூடாது. கொஞ்சம் கவனம் செலுத்தினால் தவிர்த்திருக்க முடியும்.
இந்தி வாக்கியங்கள் நிறைந்த கதை. இந்தி தெரியாமல் கதையை அனுபவிக்க முடியாது. தில்லியில் உள்ள மத்திய அமைச்சகம் ஒரு தெருப்பொறுக்கிகளின் கூடாரம் என்ற நினைப்புக்கு நம்மைத் தள்ளுகிறார் கதாசிரியர். தில்லியில் போலீஸ் தொடர்புடைய அமைச்சகம் உட்துறை அமைச்சகம். ருக்மாங்கதன் ஒரு கடை நிலை அதிகாரி. அமைச்சகத்தில் கடைநிலை அதிகாரி செக்சன் ஆபிசர். ருக்மாங்கதனுக்கும் தேவ் என்ற மேலதிகாரிக்கும் இடையில் இரு மேலதிகாரிகள். அப்படியென்றால் தேவ் ஒரு டைரக்டர் அல்லது ஜாயின்ட் செக்ரட்டரி. உட்துறை அமைச்சகத்தில் டைரக்டர் ஓர் ஐ ஏ எஸ் அதிகாரி. இல்லாவிட்டால் ஓர் ஐ பி எஸ் அதிகாரி. போலீஸ் பற்றிய கண்காணிப்பு பொறுப்பு என்பதால் கண்டிப்பாக ஐ பி எஸ் அதிகாரிதான் டைரக்டர் ஆக இருப்பார். ஓர் ஐ பி எஸ் அதிகாரியை போலீஸ் கான்ஸ்டபிள் பொது வெளியில் கன்னத்தில் அறைகிறான் என்று கதை போகிறது. நடுரோட்டில் போட்டு உதைத்தவன் அடிபட்ட அதிகாரியின் அறைக்குள் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாமே மறக்கடிக்கப்படும் என்ற கதையை நாம் நம்பலாம். மற்றவர்கள் ?
(The following is not the fault of the story writer. It is the carelessness of the Thinnai short-story department)
The picture shows a woman sitting in front of a police officer. But in the story, the character Rukmangathan is a male who went and met the Dy Commissioner of Police. The picture is drawn attractively, though. Kudos to the artist.