ரவி அல்லது
கொளுந்துவிட்டு
எரியும்
அடுப்பில்
வெந்து
கொண்டிருந்தது
பசி.
குளிர்ந்த நீர்
வயிற்றுக்குள்
சூடாகியதற்கு
பெரும் காரணம்
தேவையில்லை
அடுப்பு
எரிவதைத் தவிர.
புத்தகத்தில்
சுருண்டுக்கிடந்த
பிள்ளை
மதியம்
மண்ணில் விழுந்த
சாதத்தை
சாப்பிட்டிருக்க வேண்டுமென
நினைத்தவாறு
ஒழுகும்
எச்சிலால்
காகிதத்தை நனைத்து.
வருவது தூக்கமா
மயக்கமாவென
தெரியாமலையே
கிடந்தது.
தட்டியை விளக்கி
வெளிவந்த
அம்மா
குப்புறக் கிடக்கும்
கணவனைத் தெரியதவாறு
கதவுத் தட்டியை மூடி
பிள்ளையை
எழுப்ப வேண்டுமென்ற
பெருங் கவலையோடு
அவசரமாக
அடுப்படிக்குப் போனாள்.
சோறாகாமல்
கூழான கஞ்சிக்கு
வருத்தப்படும்
அம்மா.
வாஞ்சையோடு
அணைத்து
முத்தம் கொடுக்கும்போது
இன்றும்
சாராய வாடை
வராமலிருந்தால்
தேவலாமென
கனவு கண்டது
பிள்ளை
குமட்டும் கொடுமையிலிருந்து
தப்பிக்க.
வடிக்காத கஞ்சி
வாடையை
முகர்ந்தவாறு.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com