வெங்கடேசன் நாராயணஸ்வாமி
[ஶ்ரீம.பா.10.32.1]
ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:
அரசே! அண்ணலைக் காணும் ஆவலால் அழுதனர் உரத்த குரலில், வஶீகரிக்கும் வகையில் பாடியும் பலவாறு புலம்பியும்,
மணிவண்ணனைக் காண இவ்வாறே இக்கோபிகைகள்
ஏங்கியே தவித்தனரே!
[ஶ்ரீம.பா.10.32.2]
பட்டுப் பீதாம்பரமுடுத்தி
பன்மலர் வனமாலையணிந்து
பங்கயத் திருமுகம் தன்னில் மோஹனப்
புன்னகை மிளிர மன்மதன் மயங்கும்
மாறகோடி ஸுந்தரனாய் மதுஸூதனன்
அவர்கள் முன்னே தோன்றினாரே!
[ஶ்ரீம.பா.10.32.3]
பிரிந்த உயிர் திரும்பி வர மிக
உவகையுடன் வரவேற்கும் விறைத்தவுடல் போல்
அருளால் ஆருயிர் அண்ணல் திரும்பத் தோன்றக்கண்டு
அன்பால் முகமலர்ந்து அணங்குகள் அனைவரும்
அக்கணமே ஒருசேர அதிர்ந்தெழுந்தனரே!
[ஶ்ரீம.பா.10.32.4]
அஞ்சன வண்ணனின் கமலப்பூங்கரத்தை தன் இரு கைகளால்
அஞ்சலி கூப்பி அகமகிழ்வொடு பற்றினாள் ஒருத்தி,
அண்ணலின் சந்தனம் பூசிய மற்றோர் கரத்தை
அன்புடன் தன் தோளிலேற்றாள் மற்றோருத்தியுமே!
[ஶ்ரீம.பா.10.32.5]
வேறோருத்தியோ, கண்ணன் சவைத்துமிழ்ந்த தாம்பூலமதை
அஞ்சலி கூப்பிய தன் மென்மலர்க் கரங்களிலேந்தினாள்!
தாபம் மிகுந்த ஒருத்தி அண்ணலின் செங்கமலச் சீரடிகள் தன்னை
தனிரு ஸ்தனங்களில் தாங்கினாளே!
[ஶ்ரீம.பா.10.32.6]
புருவம் நெறித்து உதட்டைக் கடித்து
பிரணய கோபத்தில் கொதித்த ஒருத்தி
ஓரக்கண்ணால் தன் காந்தனைக் குத்துபவள்போல்
கூர்ந்து நோக்கினாளே!
[ஶ்ரீம.பா.10.32.7]
கண்கொட்டாது கண்ணனின்
கமலத்திருமுகம்தனை சுவைப்பதுபோல் பருகிக்கண்டும்,
தினமும் தாமோதரனின் திருவடி தரிசித்தும்
திருப்தியடையா தவசிகள்போல்
இன்னொருத்தி இருந்தாளே!
[ஶ்ரீம.பா.10.32.8]
கண்ணின் கருமணிவழியே கருமாணிக்கமவனைக்
கொணர்ந்து தன் உள்ளத்திலிறுத்தி,
கண்மூடி இறுக நெஞ்சாரத் தழுவி,
புளகாங்கிதப் புல்லரிப்பெய்தி,
யோகிபோல் ஆனந்தத்தில் மூழ்கினாள் ஒருத்தியுமே!
[ஶ்ரீம.பா.10.32.9]
கேஶவனை நேரில் கண்ட மகிழ்ச்சியில்
கோலாகலக் கொண்டாட்டத்தில் திளைத்த
அக்கோபிகைகள் அனைவரும் விட்டொழித்தனர் தம் விரஹதாபத்தை.
அஃது, முத்திநாடும் தவசிகள்
இறைவனைத் தன்னகத்தே தரிசித்து
தங்கள் முத்தாபங்களும் அழியப் பெற்றது போலாயிற்றே!
[ஶ்ரீம.பா.10.32.10]
அரசே! கோபியர்கள் புடைசூழ கோவிந்தன் வீற்றிருக்கும் காட்சிமை
இச்சை, ஞான, கிரியை ஶக்தி சூழ இறைவன் பேரோளியுடன் பிரகாசிக்கும் பேரழகு மாட்சிமையாய் விளங்கிற்றே!
[ஶ்ரீம.பா.10.32.11-12]
எல்லாம் வல்ல ஈஶனாம் எம்பிரான்
ஏந்திழைப் பெண்டிரை யமுனையின்
மணல் திட்டிடம் அழைத்துச் செல்ல,
யமுனை தன் அலைக்கரங்களால்
மெல்லிய மணல் பரப்பி
மேடைகட்டி விளையாட,
மாதவி மற்றும் மந்தாரையின் நறுமணங்கமழ் மந்தமாருதம் வீச
வண்டினங்கள் வண்மையோடு வலம்வர
குதிர்காலக் குளிர்மதிக் கிரணங்கள்
இரவின் இருளை இகழ்ந்தழிக்க
ஶிவமாய் செப்பியது அமைதி எங்குமே!
[ஶ்ரீம.பா.10.32.13]
அனந்தனின் தரிசனம் கண்டு
ஆனந்தக் களிப்பெய்தி அன்பில் திளைத்த அக்கோபிகைகள்
தங்கள் இதயதாபம் நீங்கப்பெற்று
ஆசைகளனைத்தும் ஈடேறி
மனநிறைவெய்தினரே!
அஃது, நான்மறைகள் தங்கள் முதல் மூன்று பகுதிகளாம்
ஸம்ஹிதை, பிராஹ்மனம், மற்றும் ஆரண்யகத்தால்
இதய தாபம் நீங்கப்பெற்று, நான்காம் பகுதியாம்
உபநிடத ஞானத்தால் இறைவனைத் தங்கள் அகத்தேயுணர்ந்து
நிறைவுற்றது போலாயிற்றே!
தங்கள் கொங்கைகளில் பூசியிருந்த குங்குமப்பூச்சாந்து பட்ட
தங்கள் மேலாடைகளை விரித்து அக்கோபியர்கள்
இருக்கை அமைத்துத் தந்தனர்
தங்கள் ஆத்மநாயகனாம் ஶ்ரீ கிருஷ்ணனுக்கே!
[ஶ்ரீம.பா.10.32.14]
யோகீஶ்வரர்களின் இதயக் குகை இருக்கையில் வீற்றிருப்பவராம்
ஸர்வேஶ்வரர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்
கோபியர் இட்ட மேலாடை இருக்கையிலமர்ந்தார்.
மூவுலகழகும் செல்வமும் ஒருங்கே சேர்ந்தார் போல்
கோபியர்கள் அர்ச்சிக்க அவர்கள் நடுவே
பேரழகுப் பெட்டகமாய் பேரொளியுடன் விளங்கினாரே!
[ஶ்ரீம.பா.10.32.15]
உள்ளத்தில் காமக்கிளர்ச்சிதனை உசுப்பிவிடும்
உம்பர்கோன் கோமானை உடனிருந்த கோபிகைகள் தங்கள்
இன்முறுவல், இனிய காதல் கனிந்த பார்வை,
இன்பப்புருவ நெரித்தல் ஆகியன கொண்டு கௌரவித்து
திருநிறைச்செல்வனின் திருவடிகள் மற்றும் திருக்கரங்களைத்
தங்கள் மலர்மஞ்ச மடிமீது வைத்துப்
பிடித்துவிட்டுக் கொண்டே புகழ்ந்தவண்ணம் சிறிது
பிரணய கோபத்துடனே பேசலாயினர்!
[ஶ்ரீம.பா.10.32.16]
கோபிகைகள் கேட்கிறார்கள்:
“அன்புடையோருடன் அன்பாயிருப்பர் சிலர்,
வேறு சிலர் இதில் மாறுபடுவர் –
அன்பிலாதாரோடு அன்புடனும், அன்புடையோருடன்
அன்பற்று இருப்போரும் உண்டு.
இன்னும் சிலர், விருப்பு-வெறுப்பற்றோராய்,
அன்புடையோருடனும், அன்பிலாதோருடனும் அன்பாயிருப்பதில்லை!
ஏனிப்படி வைகுந்தவாஸரே?! இதைச் சற்றே விளக்கியருளுங்கள்!”
[ஶ்ரீம.பா.10.32.17]
ஶ்ரீ பகவான் கூறுகிறார்:
“தோழிகாள்! ஒருவருக்கொருவர் அன்புடன் பழகுதல்
கொடுக்கல்-வாங்கல் முறையாம்.
ஸுயநலமே இதன் குறிக்கோளாம்.
இதில் தூய நட்புமில்லை! அறமுமில்லை!
இதில் தன்னலம் தவிர வேறொன்றுமில்லையே!
[ஶ்ரீம.பா.10.32.18]
கொடியிடைப் பெண்களே! தன்னிடம் அன்பிலாதோருடனும்
அன்பாயிருப்போர் பொற்றோரைப் போல் கருணையுள்ளம் கொண்டோரே! ஆங்கே எவ்வித எதிர்பார்ப்புமிலா
ஸுயநலமற்ற கடமைக் கண்ணியமும் நல்லிதயமும்தான் உள்ளனவே!
[ஶ்ரீம.பா.10.32.19]
தன்னிடம் அன்புடையோருடன் அன்பற்று இருப்போர்
அன்பிலாதாரோடு எவ்விதம் அன்பாயிருப்பர்?
அவர்கள் ஆத்மரமிப்பில் நித்திய திருப்தராயிருக்கக்கூடும், அல்லது,
செய்நன்றி கொன்றோராயும் அல்லது
குருத் துரோகியாகவும் இருக்கக் கூடும்.
ஒருவர் பிறர்க்கீவதெல்லாம் தமக்கே ஈவதாம்.
இதை அறிந்தால் எவர்தான் ஈயாதொழிவார்?
[ஶ்ரீம.பா.10.32.20]
தோழிகாள்! யானோ, இதற்கு மாறாக,
எம்மிடம் அன்பு செய்யும் அனைத்து உயிர்களும்
எம்மிடம் தொடர்ந்து அன்பு காட்ட வேண்டுமென்று சற்றே விலகியிருப்பேன்.
எவ்விதம் திடீரென செல்வந்தனான ஏழையொருவன், அச்செல்வமனைத்தையும் இழப்பானேயாகில், அதையே எண்ணியெண்ணி வேறு சிந்தனையேதுமற்று இருப்பானோ, அதுபோல.
[ஶ்ரீம.பா.10.32.21]
எமதன்பு அபலைகளே!
எமக்காக நன்மை-தீமையினை சிந்தியாது
நான்மறை அறங்கள் வகுத்த நன்னெறி மீறி
உலகியல் நடைமுறை உதறி
உற்றார்-உறவினர் மற்றும் துணையைத் துறந்து
அனைத்தையும் தியாகம் செய்த
உங்களது தன்னலமற்ற தூய
அன்பு எம்மைவிட்டு அகலாமல் தொடரவே
மறைந்தருளினோம் யாம்!
எமதன்பிற்குரிய நீங்கள் உங்களன்பிற்குப் பாத்திரமான எம்மிடம்
காணாதீர்கள் குறையோ குற்றமோ!
[ஶ்ரீம.பா.10.32.22]
யோகியரும் துறக்கவியலா இல்லற இன்ப விலங்கை தகர்த்தெறிந்து
கள்ளங்கபடமற்ற அன்புடன் எம்மை வந்தடைந்த தங்களனைவர்கட்கும்
அயனின் ஆயுட்காலம் வரை[1] யாம் கைமாறு செய்யினும் அது செய்தது போலாகா!
யாம் என்றென்றும் கடன்பட்டோம் தங்களுக்கே!
தங்கள் இயல்பின் கருணையாம் அன்பால்
விடுவிப்பீரெம்மை இத்தீராக் கடனின்று!”
அடிக்குறிப்பு: ஆய்ச்சியர் குரவை – பாகம் மூன்று – “கோபிகைகளின் இனிய கீதம்” ஆக 14 ஜூலை 2024 திண்ணை இதழில் வெளிவந்துள்ளது.
[1] அயனின் ஆயுட்காலம் 100 அயன் ஆண்டுகள். இரு கல்பங்கள் அயனின் ஒரு நாள் (பகல்-இரவு). ஒரு கல்பம் ஓராயிரம் சதுர்-யுகங்கள் கொண்டது. ஒரு சதுர்-யுகம் 4,320,000 பூமி ஆண்டுகளைக் கொண்டது. அயனின் ஒரு நாள் 8.64 பில்லியன் பூமி ஆண்டுகள். அயனின் ஆயுட்காலம் 311.04 டிரில்லியன் பூமி வருடங்கள்!!
- தெறிப்பு
- ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்கு
- கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு.
- அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்