பென்னேசன்
வெய்யில் கொள்ளை போயிக்கிட்டு இருக்கு? எதுக்குக் கிளம்பறே? சித்தப்பாவைப் பார்த்துட்டே போகலாமேடா. நான் சொல்றதை விட நீ இருந்து அவர்கிட்டே சொல்லிட்டுப் போனா அவருக்கும் ஒரு சமாதானமா இருக்கும் இல்லை. வர்ற நேரம்தான். பார்த்துட்டே போயிடேன்’ என்று அவனை நிறுத்திப் பார்த்தாள் கல்பனா சித்தி.
வரதனுக்கு அங்கிருந்து தப்பித்துப் போனால் போதும் என்று இருந்தது. தான் வந்தபோது சித்தப்பா இல்லாமல் போனதே நல்லது. இருந்திருந்தால் முதல் காரியமாக அவனுடைய அழைப்பையே படுகேவலமாக உதாசீனப்படுத்தி இருப்பார். “அன்னிக்கு எனக்கு ரொம்ப முக்கியமான இடத்துலே வேலை இருக்கே” என்பார். “என்ன இருந்தாலும் அண்ணியும் உன்னோட வந்திருக்கலாம். உங்கப்பனுக்குத்தான் கையாலே ஆகலை. ஆனா சம்சாரத்தை அனுப்பி வச்சு ஒரு மரியாதை குடுக்கலாமேன்னு என்னிக்குமே அவனுக்குத் தோணாது” என்பார்.
அம்மாவும் வந்திருந்தால் கதையை வேறு மாதிரி மாற்றி இருப்பார். “தம்பியைக் கூப்பிட சம்சாரத்தை அனுப்புவாரு அவரு. அதே சம்சாரத்தோட தம்பியைக் கூப்பிடணும்னா ஆம்புலன்ஸ் ஏறியாவது போயிட்டு வருவாரு இல்லையா?’’ என்று அம்மாவை நோகடித்து இருப்பார்.
தான் வந்தபோது அவர் இல்லாமல் போனது ரொம்ப நல்லதாகப் போனது என்றும் தான் வந்த மாதிரியும் ஆனது – சித்தப்பாவைக் கூப்பிட்ட விஷயமும் முடிந்து போனது என்று அவனை சந்தோஷப்பட விடாமல் சித்தி படுத்திக் கொண்டிருந்தாள்.
சித்தியைப் பற்றியும் அவனுக்குத் தெரியும். இவனிடமும் அம்மாவிடமும் எப்போதும் சித்தப்பாவைக் குறை சொல்லிக் கொண்டு மூக்கை சிந்திக் கொண்டிருப்பாள். இந்தக் கோளாறு பிடிச்ச மனுஷனோடு எப்படி சம்சாரம் நடத்த முடியும்னு நீங்களே பாருங்க. யாரைப் பார்த்தாலும் உங்க மச்சினருக்கு வயித்துலே பல்லு… என்று அம்மாவிடம் மூக்கைச் சிந்துவாள்.
சித்தியின் தம்பி கல்யாணத்தில் சித்தப்பா கலக்கிய கலக்கல் உலகப்பிரசித்தம். ஒன்றுமில்லாத ஒரு விஷயத்துக்குக் கோபித்துக் கொண்டு இந்தக் கல்யாணத்தில் நான் சாப்பிட்டால் இலையில் இருப்பது சோறாக இருக்காது. பீயாகத்தான் இருக்கணும்… என்று வெளிநடப்பு செய்து மொத்தக் கல்யாண மண்டபத்திலும் பரபரப்பை உண்டாக்கியவர். சித்தப்பா சாப்பிடாததால் அவருடைய மாமனார், மாமியார், மச்சினர்கள், அவர்களுடைய மனைவிமார்கள், பிள்ளைகள் என்று ஒரு பட்டாளத்தையே பட்டினியில் வைத்த பெருமையை ஈட்டியவர் சித்தப்பா. சித்திக்கு இந்த விஷயத்தில் எப்போதும் பெரிய வருத்தம் உண்டு. ஆனால் சித்தப்பாவிடம் அதைச் சொல்லும் தைரியம் எப்போதும் இருந்தது கிடையாது.
அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அநேகமாக சித்தப்பா சொல்லி வைத்த மாதிரி வீட்டில் இருக்க மாட்டார். சித்தப்பா பற்றிய குற்றப் பத்திரிகையை அப்பாவிடமும் அம்மாவிடமும் மூக்கைச் சிந்திக் கொண்டே பட்டியல் போடுவாள் சித்தி. “மூர்க்கனுக்கு வாழ்க்கைப் பட்டா என்னோட கதிதான்” என்று அழுவாள். அம்மாவும் அப்பாவும் சமாதானப்படுத்தி விட்டு வருவார்கள். இது அடிக்கடி நடக்கும்.
ஆனால் ஒவ்வொரு நாளும் சித்தப்பாவுக்கு முதல் காப்பியைக் கொடுக்கும்போதே அவருடைய சகோதர சகோதரிகளைப் பற்றி எதையாவது ஆரம்பித்து அவருடைய மூர்க்கத்தை இன்னும் சற்று உசுப்பி விட்டுக் குளிக்கப் போய்விடுவாள் சித்தி. “உங்க தங்கை பொண்ணு வளைகாப்புலே ஏற்கனவே யாரோ கட்டிக்கிட்ட புடவையை சலவை போட்டு நல்லி பையிலே போட்டுக் குடுத்த சாமர்த்தியம் வேறு யாருக்கு வரும்?“ என்று சித்தப்பாவின் ரத்தக் கொதிப்பை சற்று அதிகரிக்க வைத்து விட்டு சாமிக்கு விளக்கு ஏற்றத் துவங்குவாள். சித்தப்பாவும் தருணம் வாய்க்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் பிராது கொடுத்து பெரிய சண்டையாகப் போட்டு அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்.
“அண்ணா அண்ணான்னு நீங்கதான் கொண்டாடறீங்க. வீட்டுக்குப் போனா சுமங்கலிக்கு ஒரு இணுக்கு பூ தர மனசு வராது உங்கள் மதினிக்கு” என்று போகிற போக்கில் சொல்வாள். “பாவம். அவளோட குடும்பம் அப்படி. அதெல்லாம் பரம்பரையா வரணும்” என்பாள்.
“அங்கே எல்லாம் நீ எதுக்கு புடுங்கறதுக்குப் போறயா? உன்னைப் போகச் சொல்லி நான் சொன்னேனா? எங்க அண்ணன் ஒரு பொண்டுகனாச்சாரி. நீ அவன் பேச்சைக் காலங்கார்த்தாலே என்கிட்டே பேசாதே. ” என்று சித்தப்பா தன்அண்ணனைத் திட்டிய பிறகுதான், அவர் பேசுவது பிடிக்காத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இடத்தை விட்டு நகருவாள் சித்தி.
முன் கூடத்தில் உள்ள ஸ்டூலில் உட்கார்ந்து சாக்ஸ் போடத் துவங்கினான் வரதன். சித்தி துரத்தி வருவது போல பின்னால் வந்து நின்றாள். அழைப்பு வைத்தாயிற்று. இங்கிருந்து தப்பித்துப் போகப் பரபரத்தான் வரதன். வேண்டும் என்றே காலத்தைக் கடத்துகிறாள் சித்தி. சித்தப்பா இப்போதே வந்து தன்னை சுவற்றோடு சேர்த்து அப்புவதைப் போல எதையாவது சொல்ல வேண்டும். அதை மறுப்பது போலக் குறுக்கிட்டு எதையாவது பஞ்சாயத்து பண்ணி வைக்க சித்திக்கு அதிகரிக்கும் ஆர்வம் புரிந்தது வரதனுக்கு.
“பஸ் கிடைக்காது சித்தி. அப்புறம் பரமசிவம் மாமாவையும் நேரிலே பார்த்துக் கூப்பிடணும். நான் திரும்ப வர்றேன் சித்தி. சித்தப்பாவுக்கு சொல்லிடுங்க. நான் வர்றேன்”. ஏதோ சர்க்கஸ் மிருகத்தின் கூண்டில் இருந்து தப்பியோடும் அவசரத்துடன் கிளம்பினான்.
“சரி. பார்த்துக்கோ. சித்தப்பாவைப் பத்தி உனக்குத் தெரியும். நான் சொல்லிடறேன். ஆனா பேருக்காவது வந்து எட்டிப் பாத்துட்டுப் போடா வரது. வராமல் மட்டும் இருந்துடாதே’’ என்று சிரித்துக் கொண்டே வாசல் அருகே வந்து நின்றாள் சித்தி. அந்த சிரிப்பு அவனுக்குக் கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது.
”இதோ சித்தப்பா வந்துடுவார். இருந்துட்டுப் போடான்னு மல்லாடினேன். உங்க பரம்பரைக்கே அடுத்தவங்க பேச்சைக் கேட்கிற புத்தி எங்கே இருந்திருக்கு. உங்க பேரனுக்குத்தான் முடியிறக்குறாங்க. போயிட்டு வாங்க” என்று அந்தச் சிரிப்பு திருகலாகும் மாயம் சித்தப்பா வந்தபிறகு நடக்கும் என்று தெரியும் வரதனுக்கு.
வீட்டுக்குப் போனால் அப்பா இருமிக்கொண்டே நச்சரிப்பார். “ஒழுங்கா தன்மையா கூப்பிட்டியாடா? அவன் வரமாட்டான். ஆனாலும் நாம கூப்பிடறதுலே குறை வைக்கக் கூடாது வரதா” என்று இவனை வதை செய்வார்.
வேண்டுமென்றால் பரமசிவம் மாமாவைப் பார்த்து விட்டு மீண்டும் திரும்பி வந்து சித்தப்பாவைப் பார்த்து சொல்லி விட்டுப்போக வேண்டும். போகாமல் இருப்பது கொஞ்சம் ஆபத்தான விஷயம்தான். இப்போது கோல்மார்க்கெட்டில் இருந்து லாரன்ஸ் ரோடுக்குப் போய் பரமசிவம் மாமாவைப் பார்த்து அழைத்துவிட்டு திரும்ப கோல் மார்க்கெட் வந்து சித்தப்பாவின் வதையை வாங்கிக் கட்டிக் கொண்டு நொய்டா திரும்ப வேண்டும். நினைக்கவே அலுப்பாக இருந்தது வரதனுக்கு.
ஏதோ அரசாங்கக் கொண்டாட்டத்துக்கான விசேஷத்துக்கு ஊரையே அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். தோண்டிய இடத்தை மூடிவிட்டு மீண்டும் எதையோ மறந்து வைத்து மீண்டும் நினைவுக்கு வந்து தோண்டுவது போல பல இடங்களைத் திரும்பத் திரும்பத் தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். என்னதான் மெட்ரோவில் பயணித்தாலும் இறங்கி உள்ளே செல்லும் சாலைகள் அத்தனையும் தோண்டிப் போட்டு இருக்கிறார்கள். டெல்லி முழுதும் சாலைப்பயணங்களை சாகசங்கள் நிறைந்ததாக மாற்றி வருகிறது அரசாங்கம் என்று நொந்து கொண்டான்.
ஞாயிற்றுக்கிழமை பாழாய்ப்போனது மிகவும் வருத்தம் அளித்தது வரதனுக்கு. இத்தனைக்கும் மிகவும் சாதாரணமான விசேஷம். வார இறுதியில் மலை மந்திர் முருகன் கோயிலில் தங்கை குழந்தைக்கு முடியிறக்குகிறார்கள். தொலைபேசியிலேயே இவர்களை எல்லாம் கூப்பிடலாம். நேரில் கூப்பிட்டாலும் வாராத மாமனிதர் சித்தப்பா. சித்தியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சித்தப்பா இல்லாததை தெரிந்து கொண்டு அழைக்கப் போன சாகசத்தை முறியடித்து விட்டாள் சித்தி.
இப்போது பரமசிவம் மாமாவை அழைத்து விட்டு மீண்டும் கோல்மார்க்கெட் போய் சித்தப்பாவை நேரில் பார்த்து எதையாவது வாங்கிக் கட்டிக் கொண்டுதான் போகவேண்டும் என்று தலையில் எழுதியிருக்கிறது.
சித்தப்பாவைப் பார்த்து விட்டு மனக் காயங்கள் படாமல் திரும்புவது என்பது எப்போதும் நடக்காத காரியம். குழந்தையிலிருந்தே அவன் பார்த்ததுதான். ஒதுங்கி இருந்தாலும் விடமாட்டார். துரத்தி வந்து ஏதாவது காரணம் கண்டுபிடித்துக் குதறி விட்டுப் போவார். பரமசிவம் மாமாவை கூப்பிட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தான். மூன்றாவது மனிதர் என்கிற விவஸ்தை எல்லாம் சித்தப்பாவுக்குக் கிடையாது. கடித்துக் குதற வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. பரமசிவம் மாமாவும் வருகிறேன் என்று இவனுடன் கிளம்பினார். “எனக்கும் பார்த்து நாளாச்சுடா. நானும் வர்றேன். போயிட்டு வரலாம் வா” என்று கிளம்பினார் பரமசிவம் மாமா.
டெல்லிக்கு முதலில் வந்தவர் ராஜன் சித்தப்பாதான். தான் வேலை பார்த்த ஓட்டலிலேயே தன்னுடைய அண்ணாவுக்கும் நல்ல சம்பளத்துக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தன்னுடன் தங்க வைத்து நிறைய உதவிகள் செய்தவர் சித்தப்பா. கல்யாணம் ஆகும்வரையில் இவர்களுடன் தங்கியிருந்தார் சித்தப்பா. கலியாணம் செய்துகொண்டு தனியாகப்போனாலும் தினம் ஒருமுறையாவது வீட்டுக்கு வந்து இவனையும் தங்கை ராஜேஸ்வரியையும் கொஞ்சாமல் போனதில்லை சித்தப்பா.
யார் கண் பட்டதோ திடீரென்று அப்பாவுடன் தேவையில்லாமல் ஏதோ ஒரு சண்டையை வலித்துக் கொண்டார். அம்மாவின் அக்கா பேத்தி விளையாட்டுக்காக சித்தப்பாவை உதைப்பது போல ஒருநாள் விளையாட ரௌத்ர மூர்த்தியானார் சித்தப்பா. உங்க வீட்டுப் பிள்ளைகளை விட்டு என்னை உதைக்க விடுறியா? இதுக்கெல்லாம் ரிஷிமூலம் எனக்குத் தெரியும் என்று அம்மாவை முறைத்து விட்டு ஒருநாள் வெளியேறியவர் பல ஆண்டுகள் இவர்களுடன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.
விசேஷத்தில் எங்காவது பார்த்தாலும் என்ன சித்தப்பா என்றால் “சொல்லு” என்று உறுமி விட்டு அந்தப் பக்கமாக நகர்ந்து விடுவார். இவர்கள் குடும்பம் அங்கே வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் சித்தியை இழுத்துக் கொண்டு நகர்ந்து விடுவார். அப்பாவும் பலமுறை பேச முயற்சி செய்தார். பிறகு அப்பாவும் பேசுவதை விட்டு விட்டார். ஆனாலும் தம்பி பற்றி யாரிடமும் வாயைத் திறந்தது கிடையாது அப்பா.
“இவனுக்கு என்று ஒரு தனிமூளையை கடவுள் வச்சு மண்டைக்குள்ளே தைச்சிருக்கான் கடவுள்” என்று எப்போதாவது கிண்டலாக சிரிப்பார். வியாதியால் பலஹீனமானதும் சுத்தமாக அதையும் விட்டார்.
எப்போதாவது வரதனிடம் கெஞ்சிக் கூத்தாடி பிராந்தி வாங்கி வரச் சொல்லிக் குடிப்பார். அன்று மாலை ஆரம்பிக்கும் அவருடைய புலம்பல் இரவு முழுதும் தொடர்ந்து கொண்டிருக்கும். “தம்பி உடையான் படைக்கு அஞ்சான். உனக்கு என்ன மயிராடி தெரியும் என் தம்பி பத்தி?” என்று அம்மாவை வம்புக்கு இழுப்பார். “உடம்புக்கு முடியலைன்னுதானே தொலையட்டும்னு கொஞ்சம் குடிக்க விட்டேன். இப்போ எனக்கே வேலை காட்டுறியா? மரியாதையா எல்லாத்தையும் மூடிக்கிட்டு படுத்துக்கோ. மானம் போயிடும்” என்று அம்மா கத்தியதும் சத்தத்தைக் குறைத்துக் கொண்டு “வரதா… நாளைக்கு உன்னோட சித்தப்பாவை பார்த்துட்டு வரலாம்டா”… என்று இவனுடைய ஆமோதிப்புக்குக் காத்திராமல் முனகலைத் தொடர்ந்து கொண்டிருப்பார்.
உன்னோட பாசமலரை நாளைக்குப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு மூடிக்கிட்டுப் படுத்துக்கோ” என்று அம்மா போடும் சத்தத்தில் அமைதியாகத் தூங்க போவார்.
காலையில் சித்தப்பாவைப் பார்க்கப் போவது பற்றி மூச்சுக் காட்ட மாட்டார். “ராத்திரி ஏதோ தம்பியைப் பார்க்கணும்னு சொன்ன மாதிரி இருந்ததே?” என்று ஆரம்பிப்பாள் அம்மா. மூடிக்கிட்டு வேலையைப் பாருடி… என்று உறுமிவிட்டுப் பதுங்கிக் கொள்வார்.
“மாப்பிள்ளை உங்க சித்தப்பனை எனக்கும் பார்த்து நாளாச்சு. வாடா போகலாம்” என்று உடன் கிளம்பினார் பரமசிவம் மாமா. சின்ன வயதிலிருந்தே இவனை மாப்பிள்ளை என்று மனது நிறைந்து அழைப்பார் மாமா. கட்டிக் கொடுக்கப் பெண் யாரும் இல்லையென்றாலும் இவன் பரமசிவம் மாமாவுக்கு எப்போதும் மாப்பிள்ளைதான். இவருக்குப் பிள்ளை இல்லாமல் போனதை சித்தப்பா பல முறை வேறுவேறு வகைகளில் குத்திக் குதறியிருந்தாலும் ஏதோ சொல்ல இயலாத ஒரு பாசத்தை சித்தப்பா மீது வைத்திருந்தார் பரமசிவம் மாமா. “அவனுக்கு வாய்தாண்டா அப்படி. மனசு ரொம்ப நல்லதுடா. குழந்தை மாதிரிடா” என்பார் மாமா.
குழந்தை வீட்டில் வழக்கம் போல மிகவும் கோபமாக உட்கார்ந்திருந்தது. பரமசிவம் மாமாவை ஒப்புக்குக் கூட வா என்று கூப்பிட வில்லை. ஆனாலும் மாமா ரொம்பவும் சௌஜன்யமாக சித்தப்பா பக்கத்தில் உட்கார்ந்து தோளில் கைபோட்டார். அதை விரும்பாததுபோல முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டார் சித்தப்பா.
வரதனிடம், “ஏண்டா, அதுதான் வந்து சித்தி கிட்டே சொல்லிட்டுப் போனியாமே. அப்புறம் எதுக்கு லாரன்ஸ் ரோடு போயிட்டு அங்கிருந்து இங்கே வந்து, இங்கிருந்து நொய்டா போகணுமேடா. ஊர் வெய்யிலெல்லாம் உன் தலையில்தானா? போனில் சொன்னாக்கூடப் போதுமேடா. பத்தாததுக்கு, இன்னிக்கு நாளைக்குன்னு இருக்கிறவங்களையெல்லாம் இந்தவெய்யில்லே கூப்பிட்டு அலையணுமா? என்னடா இது?” என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் பேசினார்.
மாமாவுக்கு தன்னைப் பற்றிப் பேசியது ஒருமாதிரி இருந்தாலும், சகஜபாவத்தை வரவழைப்பது போன்ற தொனியில், “ராஜா, ஏன் இப்படி எல்லாம் பேசறே? உன்னையும் கிரிஜாவையும் பார்க்கணும்னுதானே வந்தேன். ரொம்ப நாளாச்சு இல்லையா? வந்தது தப்பா? என்று பாவமாகக் கேட்டார். சித்திக்கும் கண்கள் லேசாகப் பனித்தன.
சித்தப்பா அதற்கெல்லாம் அசரவில்லை. வரதன் இதுதான் சாக்கென்று எடுத்துவிட்டான். “என்ன சித்தப்பா, இப்படிப்பேசறீங்க? அப்பா எப்போ குடிச்சாலும் உங்களைப் பத்தி நினைச்சு அழ ஆரம்பிக்கிறாரு. உங்களுக்குள்ளே என்னதான் நடந்தது? ஏன் இப்படி ரெண்டு பேரும் எங்களைப் படுத்தறீங்க?” என்றான்
வரதன் தடதடவென்று நினைத்ததை சொல்லிவிட்டானே தவிர உள்ளுக்குள் உதறியது. ஆனால் சித்தப்பாவுக்குள் ஏதோ ஒன்று ஆடிப்போனது தெரிந்தது. ஆனாலும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, “உங்கப்பனுக்குச் சொல்லு, இதென்ன குடிக்கிற வயசா? ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போகுது. உன் கல்யாணத்தைப் பார்க்கணும். எங்க வனஜா கல்யாணத்துலே மணையிலே உட்காரணும். என்ன மயிருக்குக் குடிக்கிறான் உங்கப்பன்?” என்று கத்தினார்.
வரதனுக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. இறுக்கம் கொஞ்சம் தளர்வது போலத் தெரிகிறது. கொஞ்சம் லேசாக ஆடுவது தெரிகிறது. ஆனால் இது எத்தனை நேரம் என்று தெரியாது. வேதாளம் திரும்ப முருங்கை மரம் எப்போது ஏறும் என்பதும் தெரியாது. இந்த ஆளுக்கு உள்ளுக்குள் எல்லாம் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு வறட்டுக் கௌரவம் இப்படி அவரைப் பாடாகப் படுத்தி எடுக்கிறது என்று நினைத்தான்.
“சரி சித்தப்பா, எல்லாம் இருக்கட்டும். நீங்க வந்துதான் நடத்திக் கொடுக்கணும். உங்க மடியிலே தன் பேரனை உட்கார வைத்துக் காது குத்தணும்னு நினைக்கிறாரு அப்பா. நீங்க, சித்தி, வனஜா எல்லோரும் அவசியம் வரணும். வண்டி அனுப்பறேன். கண்டிப்பா வரணும் சித்தப்பா” என்று சற்று தயங்கியவாறு சொன்னான்.
வேதாளம் மீண்டும் மரமேறி உட்கார்ந்து கொண்டது. “நீ என்ன மயித்துக்கு வண்டி அனுப்பணும். எங்களுக்கு வண்டி வைக்கத் தெரியாதா? இப்படியா கூப்பிடறது? இதுவா மரியாதை? நீ எப்படி இருப்பே? உங்கப்பனை மாதிரித்தானே இருப்பே?” என்று பொரிந்து தள்ளினார்.
வரதனுக்கு மிகவும் சங்கடமானது. “இல்லை சித்தப்பா, நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் வண்டி ஏற்பாடு செய்திருக்கேன். அதனாலே சொன்னேன். இந்த வெய்யில்லே சித்தி எல்லாம் கஷ்டப்பட வேண்டாமேன்னுதான்… என்று இழுத்தான்.
“என் பொண்டாட்டியைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீயும் உங்கப்பனும் ஒண்ணும் கரிசனம் காட்ட வேண்டாம்” என்று பொரிந்தார்.
பரமசிவம் மாமா எதற்காக இங்கே வந்தோம் என்பது போல சங்கடத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். இடையில் வந்த சித்தி, “அவன் நல்ல மனசோடுதானே சொல்றான். இப்படி அவன் மீது குதிச்சா எப்புடி? வண்டியை அனுப்புடா வரதா? நான் இவரைக் கூட்டியாறேன்” என்றாள்.
“நீ என்ன என்னைக் கூட்டியாறது? செருப்புப் பிஞ்சிடும்” என்றவாறே அவசரமாக எழுந்து உள்ளறையை நோக்கிச் சென்றார். திரும்பி வரும்போது கையில் ஒரு மஞ்சள் பை. அதில் இருந்தவற்றை எடுத்து டீப்பாயின் மீது இழுத்துப் போட்டார். வேட்டி, அங்கவஸ்திரம், புடவை, ஒரு குட்டி பிளாஸ்டிக் நகைக்கடை டப்பா என்று எல்லாம் இருந்தது.
“நான் அவசியம் வர்றேன். என் பேரனை என் மடியில் உட்கார வைத்துக் காது குத்தணுமில்லை? அதை விடப் பெரிய வேலை ஒண்ணு இருக்கு. ஒரு குடிகார நாயை சபையில் வச்சு காது மேலேயே அடிக்கணும். உங்கப்பன்தான். வீட்டுலே உங்க அம்மா முன்னாலே ஏதோ கேட்டுக் குடிக்கிற மாதிரி நடிச்சுட்டு வெளியிலே வேலைக்குப் போறேன்னு அங்கங்கே ஜமா சேர்த்துக் குடிக்கிறான். எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறானா? உன்னையும் உங்கம்மாவையும் அவன் ஏமாத்தலாம். வரதா உங்கப்பன் நிறைய பேரிடம் சில்லறை சில்லறையா ஏதேதோ காரணம் சொல்லிக் கடன் வாங்கறான். இது உனக்குத் தெரியுமா? என்கிட்டே விஷயம் வந்தபோது ஒருத்தன் ரெண்டு பேருக்குப் பணம் கொடுத்து நானே இவன் கடனை அடைச்சிருக்கேன். நேரா முகம் பார்த்துப் பேசினா ஓடிப்போயிடறான். ஒருத்தர் ரெண்டு பேரை வச்சுக்கேட்டா உன் மேலே சத்தியமடிக்கிறான். உங்கம்மா மேலே சத்தியம் பண்றான். நான் சொல்றேன். ஒருநாள் உன் தலைமேலே எல்லாம் ஒண்ணா சேர்ந்து பெரிய இடியாக எறங்கப்போகுது. பார்த்துக்கோ. எல்லாத்துக்கும் சேர்த்து காதுகுத்து அன்னிக்கு வச்சிக்கிறேன் பஞ்சாயத்து” என்று கத்தினார்.
பரமசிவம் மாமாவும் வரதனும் பேயடித்த து போல நின்றார்கள். வரதனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றான். லேசாகக் கண் கலங்கித் தொண்டையை அடைத்தது. சித்தி ஏதோ காரியமாக சமைலறைக்குள் செல்வது போல அங்கிருந்து அவசரமாக நகர்ந்தாள். மீண்டும் இங்கு வராமலே இருந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் வந்ததால்தான் இந்த விஷயம் தனக்குத் தெரிந்திருக்கிறது.
அப்பாவுக்குத்தான் எத்தனை துணிச்சல்? எத்தனை வேஷம்? அவருக்கென்று நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அவருடைய ஓரிரு நண்பர்களும் எப்போதும் வீட்டுக்கு வந்தது இல்லை. ஏதோ அப்பாவியாக சமையல் வேலைக்குப் போய் வருகிற மனிதர் என்ற அளவில்தான் அவன் எப்போதும் அவரைப் பார்த்திருக்கிறான். வேறு யாரும் இதுபற்றித் தன்னிடமோ அம்மாவிடமோ சொன்னது கிடையாது. அத்தனை ரகசியமாக இருந்திருக்கிறார். பரமசிவம் மாமா அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து லேசாகத் தோளின் மீது கை வைத்து அழுத்தினார். அவனுக்கு எதுவும் பேசத்தோன்றவில்லை.
“சித்தப்பா அவசியம் வாங்க. பேசிக்குவோம்” என்று கிளம்புவதற்குத் தயாரானான். சித்தி உள்ளேயிருந்து அவசரமாக ஓடி வந்தாள். சாப்பிட்டுப் போகலாமேடா. சித்தப்பா நீங்களும் தான். திரும்ப அந்த வெய்யில்லே போகணுமே?” என்று பரமசிவம் மாமாவைக் கேட்டாள்.
பரமசிவம் மாமா “இல்லம்மா, ரெண்டு பேரும் எங்க வீட்டுலே சாப்பிட்டுத்தான் கிளம்பினோம். பரவாயில்லை” என்றார். சித்தப்பா சொன்ன விஷயத்தின் மீது மேற்கொண்டு எதுவும் சொல்ல விருப்பம் இல்லாதவர் போல அவர் இருந்தார்.
“நான் அப்பா கிட்டே பேசறேன் சித்தப்பா. நிச்சயம் கேக்கறேன். ஏன் அந்த மனிதர் அப்படி செய்யணும். உங்க கோபம் நியாயம்தான் சித்தப்பா” என்றவாறே வாசல் பக்கம் போனான். சித்தப்பா முகம் பார்க்க அவனுக்கு தைரியம் இல்லை. சித்தப்பா வேகமாக அவன் முன்னால் வந்து அவனை மறித்தவாறு நின்றார்.
“நீ இப்போ ஒண்ணும் அவன் கிட்டேபேசவேணாம். தெரிந்த மாதிரியே காட்டிக்காதே. அண்ணி கிட்டே ஒண்ணும் சொல்லாதே. உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிடுச்சு, நான் இப்படி சொன்னேன்னு தெரிஞ்சா அவன் காதுகுத்தலுக்கே வராமல் எங்கேயாவது ஓடிப்போயிடுவான். அவன் வேஷம் அப்படியே இருக்கட்டும். அங்கே வந்து வச்சிக்கிறேன். நீ தைரியமாப் போடா” என்றார்.
வரதனும் பரமசிவம் மாமாவும் கோல்மார்க்கெட்டின் பரந்து விரிந்த சாலையில் பேருந்து நிறுத்த த்தில் நின்றிருந்தார்கள். நிழற்குடையிலும் வெய்யிலின் தகிப்பு முகத்தில் அறைந்தது. இருவரும் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தார்கள். லாரன்ஸ் ரோடு போகும் வண்டி வந்து நின்றது. “பார்த்துக்கோடா வரதா” என்று அவன் தோளைத் தட்டி அவசரமாகச் சென்று பேருந்தில் ஏறிக்கொண்டார் பரமசிவம் மாமா.
“என்னடா சொன்னார் உங்க சித்தப்பா? வர்றேன்னாரா? தகராறு ஏதும் பண்ணலையே?” என்று சிரித்துக் கேட்டாள். அப்பாவும் உள்ளறையிலிருந்து வந்து கேள்வியுடன் எட்டிப்பார்த்தார்.
“நிச்சயம் வர்றேன்னாரு. அப்படி எல்லாம் விட்டுக்கொடுக்க முடியுமா? வந்து செய்யவேண்டிய மரியாதையெல்லாம் கண்டிப்பா செய்வேன்னு சொன்னாரும்மா. நிச்சயம் வருவாரு” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றான்.
“நான் சொல்லலை? என் தம்பி விட்டுக் குடுக்கமாட்டாண்டி” என்று அட்டகாசமாக சத்தம் போட்டுச் சொன்ன அவனுடைய அப்பா, ரெண்டு நாள் மயூர்விஹாரில் வேலையிருக்கு” என்றவாறு துணியை அடைத்த கட்டைப் பையைக் கையில் பிடித்தவாறு அவசரமாக வெளியில் கிளம்பினார்.
பென்னேசன்