Posted in

சரித்திர சான்று

This entry is part 2 of 11 in the series 1 டிசம்பர் 2024

பத்மநாபபுரம் அரவிந்தன் –

எத்தனையெத்தனை  தலைமுறை 

மரபணுக்களின் நீட்சி நான் 

என்னுள் நீந்தும் 

அவைகள் அத்தனையும் 

எத்தனை ஜாதிகள் கொண்டனவோ 

எத்தனை மதங்களை ஏற்றனவோ…

கள்குடித்துப் பித்தான முப்பாட்டன் 

வழி வந்த  சிலவும்.. 

புகை பிடித்துப் புகையான 

பூட்டன் வழி வந்த சிலவும் 

போன இடமெல்லாம் போகம் விளைத்து 

தன் முகத்தை பதிவு செய்த   

முகமறியா முன்னோரின் சிலவும்

சொல் வடித்துக் கவிதை செய்த

பெரும்பாட்டன்  வழிவந்த சிலவும்

ஏமாற்றியும்  பலரிடம் ஏமாந்தும் 

புத்திகெட்டுப் போயலைந்த 

பெயர் தெரியா பெரியவர்கள் 

வழிவந்த சிலவும்..  

பெரும் புத்தி கொண்டலைந்த 

பூட்டனின் சிலவும் 

சித்தம் கலைந்து பித்தனாய்த் திரிந்த 

தாத்தாவிடமிருந்து சிலவும்

கவிதையும் கதையும்

சொல்லித்திரிந்த பாட்டனிடமிருந்து சிலவும்

அன்பாய் பேசி அனுசரித்த  

ஆச்சியிடமிருந்து சிலவும் 

குலத்தையே தன் வாயால் கூறுபோட்ட

பூட்டியிடமிருந்து சிலவும்… 

பெற்றோரிடமிருந்து வெகு சிலவும் 

கொண்டலையும் நான்..

மொத்தத்தில் 

தலைமுறைகளின் சரித்திர சான்று…

என்னுள் இவர்களெல்லாம் 

சிலநேரம் வந்துதித்துத் 

தம்மை வெளிக்காட்டும் போது

புரியாத பலபேர்கள் 

சொல்லித்திரிவார்கள் 

அப்பன்  அம்மை குணத்துக்கு

கொஞ்சமும் பொருந்தாத என்ன 

எளவுடுத்த பிள்ளையோ இதுவென்று …

Series Navigation‘அபராஜிதன்’ – சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருதுதொடர் மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *