சுகமான வலிகள்

This entry is part 7 of 11 in the series 1 டிசம்பர் 2024

76வது பிறந்தநாள் சிட்னியில் விடியும் என்று மனோ எதிர்பார்க்கவில்லை. வழக்கம்போல் தேக்கா வசிப்போர்சங்கக் கூட்டம் முடிந்ததும் சத்யா சொன்னார்.

‘பயணச்சீட்டுக்கான காசு தந்தால் போதும். 10 நாட்கள் சிட்னி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யமுடியும் என்று என் மகன் சொல்கிறார். என் மகன் இப்போது சிட்னியில் ஒரு சுற்றுலா நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார். குறைந்தது 10பேர் வேண்டுமாம்.’

கேட்டமாத்திரத்தில் எல்லாரும் நான், நான் என்று கையைத்தூக்கி விட்டார்கள். பத்தாவதாக மனோவும் சேர்ந்துகொண்டார். இப்படித்தான் இந்த சிட்னி பயணம் முடிவானது.

சிட்னியில் இறங்கிவிட்டார்கள். ஒபேராஹவுஸுக்குப் பக்கத்திலேயேதான் அவர்கள் தங்கும் இடம். அதுதான் நகரின் மையம். எகானமி பயணச்சீட்டுக்கு முதல்வகுப்பு வசதியா? எல்லாருக்குமே ஏகப்பட்ட மகிழ்ச்சி. மிகப்பெரிய இடம். கொஞ்சமாக மக்கள் நடமாட்டம். ஒரே அமைதி. ஒரே அமைதி. உண்மையில் அமைதியா அல்லது காது கேட்கவில்லையா? மனோ காதைச் சோதித்துக் கொண்டார். 76வது பிறந்தநாள் இவ்வளவு அழகாக விடியும் என்று சத்தியமாக மனோ நம்பவில்லை.

நீலமலை, குரூஸ் பயணத்தில் ஊர் சுற்றல், சிலசமயம் வளிமண்டலத்தையும் வானத்தையும் பார்க்கும் ஆசையில் அவ்வப்போது எம்பிக்குதிக்கும் திமிங்கிலங்கள், அன்றைக்கு விடைபெறும் அழகான சிவப்புச்சூரியன், பரந்துவிரிந்த துறைமுகத்தளம், அணிவகுத்து நிற்கும் படகுகள், ஒபேராஹவுஸ், துறைமுகத்தின் தளத்தை முத்தமிட்டபடி கரையோரம் நிற்கும் 10 மாடி வீட்டுவசதிவாரியத் தொகுதிபோல் நிற்கும் குரூஸ், எல்லாமுமே எப்போதும் இனிக்கும் ஆச்சரியம். அந்த குரூஸையும் துறைமுகத் தளத்தையும் மாறிமாறிப் பார்த்தார் மனோ. ‘என்னால் எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து நகரமுடியும். உன்னால் முடியுமா என்று துறைமுகத்தளத்திற்கு சவால் விடுகிறதோ குரூஸ்’ அவரின் கற்பனையில் அவரே சிரித்துக்கொண்டார்.

அன்று வெள்ளிக்கிழமை. துறைமுகத்தின் ஏகாந்த தளத்தில் காலார நடந்தார் மனோ. அடுத்த கிரகம் வந்துவிட்டதாய் உணர்ந்தார். அந்தப் பெரிய வெளியின் நடுவில் மூன்றுபேர் அமரும் ஓர் இருக்கை.  அதில் ஓர் இளம் பெண். ஒரு புத்தகத்தில் மூழ்கிக்கிடந்தார். அவ்வப்போது புன்னகைத்தார். புருவம் உயர்த்தினார். ஆம். உண்மையிலேயே மூழ்கித்தான் விட்டார். ஒருபக்கம் சில செல்ல நாய்க்குட்டிகள் விளையாடின. விலகி ஓடின. திடீரென்று சேர்ந்தன. முத்தமிட்டுக்கொண்டன. வெகு தூரத்தில் அதன் முதலாளிகள் சப்தமின்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். தவறாக ஒருவர் கைசொடுக்கியதில், அவருடைய நாய்க்குட்டி ஓடிவந்தது. போவென்று அவரே சைகை காட்டியபின் ஓடிவந்து நண்பர்களுடன் சேர்ந்துகொண்டது. இதையெல்லாம் கவனித்தபடி மனோவின் குழு அந்தத் தளத்தில் குழுமி நின்றது. அவ்வப்போது சத்யாவின் மகன்தான் அந்தந்த இடங்களைப் பற்றிச் சொன்னார்.

‘சிங்கப்பூரில் ஏன் நம்மால் இப்டியெல்லாம் வாழமுடியவில்லை. எப்பப்பாத்தாலும் வேலை வேலை என்றே அலைகிறோமே’

மனோ கேட்டார்.

‘இங்கே இயற்கை வளம் உண்டு. சிங்கப்பூர் மனிதவளத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு குட்டிநாடு’

சத்யாவின் மகன் சொன்னார்.

‘தயவுசெய்து அரசியல் வேண்டாமே. எல்லாவற்றையும் மறந்திருக்கத்தானே இங்கு வந்தோம்.’

சத்யா சொன்னார். பேச்சு சட்டென திசை மாறியது. சத்யா மகன் தொடர்ந்தார்.

‘5 மணிக்கு மேலோ, உணவு இடைவேளையிலோ, அலுவலகத்திலிருந்து அதிகாரி அழைத்தால் அவர்மீது உடன் சட்டநடவடிக்கை இங்கே எடுக்க முடியும். சனி, ஞாயிறுகளில் அலுவலகம் என்ற பேச்சே எவர் வாயிலும் வராது. வார நாட்களில் அவர்கள் பேசிக்கொள்வதெல்லாம், வாரஇறுதியில் எங்கே செல்லலாம், யார் யார் என்னென்ன கொண்டுவரலாம், யார்யார் செல்லலாம், புதிதாக ஒரு கொண்டாட்டத்திற்கு என்ன செய்யலாம். அந்த வாரம் யாருடைய பிறந்தநாள், இப்படித்தான் பேச்சு இருக்கும். யாரும் வேலை பற்றி பேசவே மாட்டார்கள். அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது அவர்கள் மட்டும்தான் வருவார்கள். அவர்களோடு எந்த வேலையும் ஒட்டிக்கொண்டு வராது’

என்று சொல்லிச் சிரித்தார் சத்யாவின் மகன். அப்போது ஒபேரா ஹவிஸிலிருந்து சிலர் கையில் டப்பாக்களுடன் வந்தார்கள். அது உணவு டப்பாதான். சிறுசிறு குழுவாக நகர்ந்து இங்கே எம்மார்ட்டியில் நுழைவுச்சீட்டு பெறுவதுபோல் தட்டிவிட்டு, தயாராய் நின்ற படகில் ஏறிக்கொண்டார்கள். படகு விரைந்தது.

‘எங்கே போகிறார்கள்?’

என்று கேட்க மனோ வாயைத் திறக்கும் முன்பே சத்யாவின் மகன் சொன்னார்.

‘அவர்களுக்கு ஒரு மணிநேரம் உணவு இடைவேளை. சாப்பிட்டுக்கொண்டே படகில் சுற்றுவார்கள். அன்று மலர்ந்த பூக்களை நலம் விசாரிப்பார்கள். கரையோரம் வேடிக்கைபார்க்கும் விலங்கியல் தோட்ட விலங்குகளுக்கு வணக்கம் சொல்வார்கள். அவ்வப்போது தலைகாட்டும் திமிங்கிலங்களை வாழ்த்துவார்கள். கடலலைகளின் இரைச்சலோடு பாடுவார்கள். வானத்தின் அமைதியில் இமை மூடுவார்கள். ஒரு சுற்று வந்ததும் அவர்களின் புதிய உலகம் முடியும். உணவும் முடியும்’

‘வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்’

என்றார் மனோ.

‘அப்படிச் சொல்முடியாது மனோ. அவர்களுக்கும் ஏராளப் பிரச்சினை இருக்கும்’

என்றார் சத்யா.

‘இருக்கட்டுமே. இல்லையென்றே நாம் நம்புவோம்.’

என்றார் சத்யாவின் மகன்.

அடுத்தநாள் சனிக்கிழமை. சுற்றுலாவின் கடைசி நாள். அன்று அவர்களின் திட்டம் கடற்கரையில் பொழுதைக் கழிப்பது. எல்லாரும் கடற்கரை வந்துவிட்டார்கள். ஒபேராஹவுஸ், குரூஸ், துறைமுகத்தளம், எல்லாம் சிறிதாகத் தெரிந்தன. தன்னந்தனியாக ஓர் ஆணையோ, பெண்ணையோ சத்தியமாகப் பார்க்கமுடியவில்லை. கணவன் மனைவியாக, அவர்களே பிள்ளைகளுடன், தாத்தாபாட்டிகள், அவர்களுடன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், சகோதரங்கள் பெற்றோருடன் இப்படி சின்னச்சின்ன குழுக்களாகளாகத்தான் நடமாட்டம். ஆங்காங்கே வட்டமாய் அமர்ந்து பேசுவார்கள். கொரிப்பார்கள். பாடுவார்கள். ஆடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவ்வளவு பெரிய கடற்கரையில் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகாசனப்பயிற்சி நடக்கிறது. பக்கத்திலேயே  5 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளுக்கான யோகாசனப் பயிற்சி, அடுத்து, கடற்கரையைப் பார்த்தபடி சிலர் அந்தக் காட்சியை வரைந்துகொண்டிருந்தார்கள். சிலர் பாபிக்யூவுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மனோவின் குழு கடந்தபோது

‘வாருங்கள் சாப்பிடலாம்’

என்று அழைத்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, குழு மேலும் நடந்தது. ஒரு பெரிய மரம். அதன் வயது ஆயிரமாம். சத்யாவின் மகன் சொன்னார். அந்தக் கிளைகளில் ஏறி சில பொடுசுகள் அமர்ந்துகொண்டிருந்தார்கள். ஒருவர் வீசும் பந்தை அடுத்தவர் பிடிக்கவேண்டும்.

மனோ வேகவேகமாக நடந்து அந்த மரத்தைக் கட்டிப்பிடித்தபடி உருகினார். அவருக்கு மரங்கள் தெய்வங்கள். எத்தனை டன் ஆக்ஸிஜனை இந்த மக்களுக்காக அது தந்திருக்கும். எத்தனை டன் கரியமில வாயுவை சலித்திருக்கும். தனக்கென்று இந்த மரங்கள் எதுவுமே செய்துகொள்வதில்லையே. மனிதர்களுக்காவே படைக்கப்பட்டதல்லவா மரங்கள். கட்டிப்படித்தபடி வெகுநேரம் அசைவற்றிருந்தார் மனோ. கண்கள் சிவப்பேறி இருந்தன.

அந்தநாள் பொழுதும் கழிந்தது.

‘பத்துநாள் முடிந்துவிட்டதா?’

‘மூன்று மணிநேரம் ஓடும் ஒரு நல்ல படம் மூன்று நிமிடத்தில் முடிந்ததுபோல் தெரியுமல்லவா. அப்படித்தான்’

‘உண்மைதான். சத்யாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.’

‘எனக்கு ஏன் நன்றி. என் மகனுக்குச் சொல்லுங்கள்’

எல்லாரும் சத்யா மகனை தன் சொந்தப்பிள்ளையாகத் தழுவி முத்தமிட்டார்கள். அடுத்தநாள் அவர்கள் விமானநிலையம் புறப்படவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை. எல்லாரும் விமானநிலையம் செல்லத் தயாரானார்கள். விமானநிலையம். இருக்கை எண்ணெல்லாம் வாங்கியாகிவிட்டது. சத்யாவின் மகன் எல்லாரையும் அனுப்பிவைத்துவிட்டு எதையோ பறிகொடுத்ததுபோல் நின்றார். விமானத்தை நோக்கி பத்து பேரும் முன்னேறினார்கள். ஒவ்வொருவரும் விமானத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்.

மனோவுக்கு திடீரென்று அடிவயிற்றில் ஒரு விலங்கு கவ்விப்பிடித்து கடித்து இழுப்பதுபோல் ஒரு வலி. அடிவயிற்றைப் பொத்தி, முகங்குப்புற, நெற்றி முழங்காலைத்தொட ‘வலி, வலி’ என்று கத்தினார். விமானதத்துக்குள் நுழைந்தவர்களும் ஓடிவந்தார்கள். எல்லாரும் கூடிவிட்டார்கள். ‘மனோ, மனோ’ என்ற அழைப்புக்கு ‘வலி,வலி’ என்றே பதில்வந்தது. கட்டுப்பாட்டு அதிகாரி விரைந்துவந்தார். சில விமானப் பணிப்பெண்கள், விமான ஊழியர்கள், ஒரு விமானமோட்டி எல்லாரும் வந்துவிட்டார்கள். மனோ இல்லாமல் விமானம் பறக்கமுடியாதே.

கட்டுப்பாட்டு அதிகாரி உடன் ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்தார். ஓடுதளத்தில் ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கிறது. நெருங்கிவிட்டது. மனோ பயணிக்கவேண்டுமென்றால் வலி இருக்கக் கூடாதே. ஆம்புலன்ஸிலிருந்து மருத்துவர் இறங்கினார். சத்யா நெருங்கினார்.

‘கொஞ்சம் தள்ளி நில்லுங்க.’

என்றார்  மருத்துவர். அட தமிழ்! முகக்கவசம் அணிந்திருந்தார். மனோவை நெருங்கினார். முகத்தைப் பார்த்த்தும், நெற்றியில் கைவைத்து ‘சார்’ என்றார். அவர் வலி என்று சொன்ன இடத்தில் லேசாகக் கைவைத்தபோது அலறினார். மருத்துவருக்கு வலிக்கான காரணம் ஓரளவு புரிந்தது.

‘வலிக்கொல்லி இருந்தால் தாங்க டாக்டர். நான் சிங்கப்பூர் சேரும்வரைத் தாங்கினால் போதும்.’

என்று குளறினார் மனோ. விமானமோட்டி வந்தார். மனோவிடம் சொன்னார்.

‘ஐயா, விமானம் எட்டரை மணிநேரம் பறக்கும். பறக்கும் மொத்த தூரமும் கடலுக்கு மேல்தான். அவசரமாகத் தரையிறங்கவேண்டு மென்றாலும் இரண்டரை மணிநேரம் ஆகும். அதற்குள் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது. நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை நீங்கள் பயணிப்பது ஆபத்து’

எல்லாரையும் பார்த்து மருத்துவர் சொன்னார்.

‘அவர் பயணிக்கமாட்டார். உடனடியாக அல்ட்ராசானிக் ஸ்கேனிங் செய்தாக வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன். அவரை நல்லபடியாக குணமாக்கி சிங்கப்பூருக்கு அனுப்பிவைப்பது என் பொறுப்பு. எல்லாரும் சிங்கப்பூர் செல்லுங்கள். நாளை இதே விமானத்தில் அவரை நீங்கள் சிங்கப்பூரில் எதிர்பாருங்கள். அவர் பயணச்சீட்டுக்கு காப்பீடு இல்வாவிட்டாலும் பரவாயில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் புறப்படுங்கள். அவர்கள் அங்கிருந்து விலகவே இல்லை. அடிபட்ட காகத்தைச் சுற்றிக் கரையும் காகங்களாக  அவர்கள் கரைந்தார்கள். விமானமோட்டி அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விமானத்தில் ஏறச்சொன்னார். ஒவ்வொருவராக மனோவைப்பார்த்தபடியே விமானம் ஏறினார்கள்.சத்தமாகவே அழுதார்கள். மனோ ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார். இருக்கையில் அமராமல் எல்லாரும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவழியாக எல்லாரையும் அமரவைத்து, விமானம் சிங்கப்பூர் நோக்கிப் பறந்தது. ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பறந்தது.

அவசர சிகிச்சைப் பிரிவு. சிட்னியில் இதுவரை காணாத ஒரு புதுக்காட்சியை மனோ கண்டார். பெரிய அறை. ஏராளக் கூட்டம். இதயமாற்று அறுவை, முழங்கால் எலும்பு மாற்று அறுவை, கிட்னி கோளாறு, டயாலிசிஸ், மூச்சுப்ப்பிரச்சினை என்று எல்லாமே மிக அவசரமாகப் பார்க்கவேண்டிய நோயாளிகள். சிலமணிநேரம் தாமதமானாலும் மரணம் உறுதி என்று சொல்லும் நிலை. அந்தக் கூட்டத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு, ஒரு தனிஅறையில் கிடத்தப்பட்டார் மனோ. அல்ட்ராசானிக் ஸ்கேனிங் உடனே வந்து சேர்ந்தது. இதோ ஸ்கேனிங் நடக்கிறது. மனோவுக்கு ஒரு தற்காலிக வலிநிவாரணி தரப்பட்டதில் ஓரளவு பேசமுடிந்தது. மனோவை தைரியப்படுத்தினார் மருத்துவர்.

‘நான் நினைப்பதுபோல்தான் இருக்கவேண்டும். கொஞ்சம் பொறுங்கள் சார். ஒரு மணிநேரத்தில் முடிவு தெரியும்.’

அவர் சார் என்றதில் மனோ ஆச்சிரியப்பட்டார். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கும் இவருக்கு என்னைப்போன்ற ஒரு சுற்றுலாப்பயணிமேல்  இவ்வளவு மரியாதையா?  திகைத்தார்

ஸ்கேனிங் முடிவு வந்துவிட்டது. மருத்துவர் சொன்னார்.

‘சார். நான் நினைத்ததுதான். இது ஒரு சிறுநீரகத் தொற்று. யூரினரி இன்ஃபெக்‌ஷன். ஆர்க்கிடீஸ் இன்ஃப்ளமேஷன் ஆஃப் பால் (Orchitis inflammation of ball). உங்களுக்கு வந்தது ஆச்சரியம்தான். எப்படியோ இந்தக் கிருமி சிறுநீரகத்துக்குள் புகுந்துவிட்டது. இது ஆபத்தானது. இதற்கான ஒரே மருந்து Apo-Ciprofloxacin சார். சிங்கப்பூரிலும் கிடைக்கும்.  நல்லவேளை சரியான நேரத்தில் வந்துவிட்டீர்கள். இதுவே பறக்கும்போது வந்திருந்தால் ஒன்றுமே செய்திருக்கமுடியாது. உங்களைக் கடவுள் கைவிடவில்லை. ஆம். கைவிடமாட்டார். அவர் கைவிடக்கூடாது.’

என்று சொல்லி நெகிழ்ந்தார். மீண்டும் தொடர்ந்தார்.

‘சார். என்னெத் தெரியுதா?’

‘ஆமா. பாத்தமாதிரி இருக்கு. சரியா ஞாபகத்துக்கு வரல.’

‘குபேரன் சார். 1994லே ஒங்கள்ட துணைப்பாடத்துக்கு வந்தேன். பேர் கேட்டீங்க. நான் குபேரன்னு சொன்னேன். எல்லாரும் ஆசப்பட்றதெ நீங்க பேர்லயே வச்சிருக்கீங்கன்னீங்க. தேர்வுக்கு மூணு மாசம் இருக்கும்போதுதான் வந்தேன். நா மெடிக்கல் போகணும்னு ஆசப்பட்டதுனால அம்மா உடனே ஏற்பாடு செஞ்சாங்க. முதல்நாள் நான் பாடத்துக்கு வந்தபோது நீங்க கோத்தாமைலோ தந்தீங்க. எனக்குப் பிடிக்காது. சூடா காப்பிதான் குடிப்பேன்னு சொன்னேன். அன்னிலேருந்து, நா வகுப்புக்கு வரும்போதெல்லாம், ஒரு கோப்பையில காப்பி செஞ்சு தயாரா வச்சிருப்பீங்க. சாப்பிட்டபிறகுதான் வகுப்பையே ஆரம்பிப்பீங்க. நா அழைப்பு மணிய அழுத்தும்போது கதவத் தெறந்து ‘வாங்க டாக்டர்’ ம்பீங்க. சில சமயம் ஆன்ட்டி திறப்பாங்க. அவங்களும் வாங்க டாக்டர்னுதான் திறப்பாங்க. நீங்க அப்பச் சொன்னது பலிச்சிருக்கு சார். இப்ப இவ்வளவு பெரிய எடத்துல நா உக்காந்திருக்கேன்.’

குரல் உடைந்தது. நெகிழ்ந்தார். ஒற்றுத்தாளால் கண்களைத் ஒத்திக்கொண்டார்.

மனோ சொன்னார்

‘ஆமா குபேரன். எல்லாமே ஞாபகம் வந்துருச்சு. ஞாபகம் வந்திருச்சு. நேற்று வலிவலின்னு துடிச்சேன். அந்த வலிதான் உங்கள அழைச்சுக்கிட்டு வந்திருக்கு. அந்த வலி மட்டும் வரேலேன்னா ……..உங்கள நா இழந்திருப்பேன் குபேரன். இப்ப நெனச்சா அது வலி இல்ல. சுகம். நினைத்து நினைத்து நெகிழும் சுகம்.’

மனோவும் உடைந்தார். கண்ணீர் செவி மடலை எட்டியது. குபேரன் மெதுவாக மனோவைத் தாங்கித் தூக்கி, இன்னொரு தலையணை வைத்தார்.

‘உங்களுக்கு முற்றிலுமாக இது சரியாகிவிடும் சார். நாளை இதே விமானத்தில் நீங்கள் பயணிக்கலாம். உங்களின் விமானச்சீட்டு தயாராய் இருக்கு. நல்லா ஓய்வு எடுத்துக்கங்க. விரைவிலேயே நீங்க ஆன்டியோட சிட்னி வரணும். எங்கள்ட தங்கணும். இப்ப என் வீட்ல எல்லாரும் சிங்கப்பூர் போயிருக்காங்க.’

அந்த அவசர சிகிச்சை அறையிலிருந்து சில மணிநேரத்தில் சாதா அறைக்கு மனோ மாற்றப்பட்டார். அடுத்தநாள் குபேரன் மனோவை அழைத்துக்கொண்டு விமான நிலையம் விரைந்தார்.

விமானத்தில் இருக்கையில் அமர்ந்தார் மனோ. இமைகளை மூடி மௌனமானார். விமானம் புறப்பட ஆயத்தமாகிறது

என்றோ தந்த ஒரு கோப்பைக் காப்பிக்கும், ஒரு சொல்லுக்கும் இவ்வளவு பெரிய சக்தியா? பொலபொலவைன்று குழந்தைமாதிரி அழுதார் மனோ.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationசாகித்திய ரத்னா  விருது பெற்ற பெண் ஆளுமை –   ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரைஎழுத்தாளனின் முகவரி
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *