வெங்கடேசன் நாராயணஸ்வாமி
எப்போதுமுள்ள மௌனமே
நம்மிடையே – நாம் நம்முள்
உறைவதின் அத்தாக்ஷியாய்,
நம்மிருப்பே இடையறாத
சொற்பொழிவாய்,
வாழ்வாய்,
நாமொருவரையொருவர்
பார்த்துக் கொண்டிருந்தாலும்,
பார்க்காத மாதிரிதான்,
பார்க்காது இருந்தாலும்,
பார்த்துக் கொண்டிருப்பது போல்தான்.
ஒன்றாயிருப்பது என்பதென்ன?
நீயில்லை என் ஆழ்துயிலில்.
உன் ஆழ்ந்த உறக்கத்திலென்னைக்
கண்டாயோ?
நம் நிழல்களுறவாடுவதை?
பின்னிப் பிணைந்திருப்பதை?
நம் நினைவுகள்
முயங்கியிருப்பதை?
நம்மிருவுடல்கள் ஓரிடத்தில் இணைவதை?
நம்முணர்வுகள் பிணைவதை?
விழிப்பில் நாம் ஒருவரையொருவர்
பார்த்துக்
கொண்டிருந்தாலும் பார்க்காத மாதிரிதான்.
நீ நினைப்பதையே நான் நினைத்து,
நான் நினைப்பதையே நீ நினைத்து,
பைஜாமாக்களில் வரும்
பி1-பி2 வாழைப் பழங்களைப்போல்
எப்பொழுதும்
ஒரே சமயத்தில்
சிரித்து
ஓரிடத்திலழுது,
ஒரே நேரத்திலுண்டு, மகிழ்ந்து,
விளையாடி,
களந்து கூடி,
ஒரே பிராரப்த மூச்சுக்காற்றைச்
சுவாசிப்பதா சேர்ந்திருத்தல்?
எங்குமெப்பொழுதும்,
எவ்விடத்தும்,
என்னிடத்திலுன்னையும்,
உன்னிடத்திலென்னையும்.
உன்னைக் கொண்டு என்னுள் வைத்து
என்னையும் உன்னுள் இட்டு,
என்னைக் கொண்டு உன்னுள் வைத்து
உன்னையும் என்னுள் இட்டு
நம்மைக்கொண்டு நம்முள் வைத்து,
நம்மையும் நம்முள் இட்டு.
உபாதி நீங்கி,
‘காண்பது’, ‘என்’, ‘உன்’, ‘நான்’, ‘நீ’, ‘நாம்’, ‘எமது’
பேதம் எல்லாம் அற்று,
களந்து கரைந்து ஒன்றாய்,
இன்னதென்று சொல்லொனா
மனம் வாக்கேகா மௌனம்.
பேரின்பம் கண்டதும்
பேச்சு வருமா?
பரா-வாக்காய்,
வெளியாய் அகண்டமாய்,
வெறுமிருப்பு மாத்திரம்.
‘நீ’-‘நான்’
பேதமற்ற
அறி-துயில்
யோக நித்திரை,
கவுனமன்று.
ஒன்றேயான
மனமற்ற மௌன
உணர்வு மட்டும்.