அந்த வீட்டுவசதிக் கழக வீட்டுக்கு நாங்கள் புதிதாக குடிவந்திருக்கிறோம். புதுக்கோழிகளாக பண்ணையில் சேர்ந்த நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழகிய கோழிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் வீட்டில் 6 பேர். என் மகள், மருமகன், அவர்களின் இரண்டு குழந்தைகளோடு நாங்கள் இருவர். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை 50 உருப்படிகள் துவைத்தாக வேண்டும். மூன்று ஆயாக்கள் சேர்ந்தாலும் முடியாத காரியத்தை நகராமலேயே என் துவைக்கும் இயந்திரம் துவைத்துவிடுகிறது. பாவம் அது.
மேற்கூரையில் கொண்டி அடித்து ஆறு மூங்கில் கழிகளைக் கிடத்தி அதில் துணிகளைக் காயப்போடுவேன். பத்தவில்லை. கழிகளில் துணிகளை விரித்து வெளிக்குழாயில் சொருக எனக்கு ஏகப்பட்ட பயம். ஒரு நாள் அப்படிச் சொருகி மேல்வீட்டுக் காரரின் சிவப்பு உடுப்பிலிருந்து சாயம் சொட்டி என் 90 வெள்ளி லினன் சட்டை இப்போது புடிதுண்டாகிவிட்டது.
வெளியே இரண்டு கம்பித் தாங்கிகளை நிறுத்தி, அதன் காலில் சுட்ட செங்கல் ஒன்றிரண்டை ஏற்றி அதன்மேல் மூங்கில் கழிகளைக் கிடத்தி அதில்தான் மீதித்துணிகளைக் காயப்போடுவேன். சாயாமல் காப்பாற்றும் செங்கற்களுக்கு நன்றி. எல்லாம் சுமுகமாகவே ஓடியது.
ஒரு நாள். வீட்டுவசதிக் கழக அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்தார். சொன்னார்.
‘துணிகளை உள்ளே காயப்போடுங்கள். இதைப் பார்ப்பது எதிர்வீட்டுக்காரருக்கு அபசகுணமாய் இருக்கிறதாம். எந்த வேலையும் சுமுகமாக நடப்பதில்லையாம். எங்கள் அலுவலகத்துக்கு புகார் தந்திருக்கிறார்’
என்றார்.
‘இது என் உபயோகத்தில் உள்ள இடம்தானே?’
‘ஆம். சட்டப்படி உங்களை நிர்ப்பந்திக்க முடியாது. எதற்கு விவகாரம் என்று நினைத்தால் அகற்றிவிடுங்கள். முடியாதென்றால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அவரும் ஒன்றும் செய்யமுடியாது. அப்படியே அவர் மேற்கொண்டு புகார் தந்தாலும் நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம். அவரைச் சமாதானப்படுத்தவே முயற்சிப்போம். உண்மையில் நீங்கள் காயப்போட்டிருக்கும் இடத்தைப் பார்க்கத்தான் நான் வந்தேன். நீங்கள் சட்டத்தை ஒன்றும் மீறவில்லை. விவகாரம் எதற்கு என்று நினைத்தால் அகற்றிவிடுங்கள்.’
என்றார். என் 50 உருப்படிகளை துவைத்தே தீரவேண்டிய கதையை மறுபடியும் ஒருதடவை அவரிடம் ஒப்பித்துவிட்டுச் சொன்னேன்.
‘அவர் வீட்டு வாசலைப் பாருங்கள். மேலே ஒரு பெரிய சிவப்புத்துணியைக் கட்டியிருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு வேலைக்குப் போனால் எல்லாம் ஆபத்தாகவே முடிகிறது என்று நானும் சொல்லலாமே.’
‘சரியாகச் சொன்னீர்கள். இதை அவரிடம் சொல்லாதீர்கள். நீங்கள் காயப்போடுங்கள். மீண்டும் புகார் தந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். ஹ..ஹ்..ஹா’
சிரித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
அதற்குப் பிறகு எதிர்வீட்டுக்காரர் மேல்முறையீடு எதுவும் செய்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும், என்னை சந்திக்க நேரும்போதெல்லாம் ஒரு கம்பளிப்பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார். பட்டாசுவெடியாய் கதவைச் சாத்துகிறார். என் மாடியும் ஒரு பொது வராண்டா. மின்தூக்கியிலிருந்து வெளியேறும்போது, இரண்டு பக்கமும் என் தொட்டிச்செடிகளை வரிசை கட்டியிருந்தேன். நான் வரும்போது அந்த இரண்டு பக்கமும் காலியாகத்தான் இருந்தது. ஏற்கனவே இருந்தவர் அந்த இடங்களில் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். என் தொட்டிகளைத் தாண்டியதும் என்வீடும் எதிர் வீடும். மற்ற வீடுகளுக்கு அந்த நீண்ட வராண்டாவைக் கடக்கவேண்டும். எதிர்வீட்டுக்காரரின், கூடம் படுக்கை அறைச் சாளரங்களைக் கடந்து அந்த வராண்டாவில் செல்லவேண்டும். அந்த வராண்டாவில் பாதி நீளத்திற்கு அவருடைய தொட்டித் தாவரங்களை வைத்திருந்தார். அவருடைய செடிகளின் பெயர் எதுவுமே எனக்குத் தெரியாது. சோற்றுக்கற்றாழை தவிர. பாதி வராண்டா காலியாகவே இருந்தது.
ஒரு செம்பருத்திச் செடியைப் புதிதாக வாங்கினேன். பேர்தான் செம்பருத்தி. அடுக்குமஞ்சள் பூக்களின் அழகு நின்று பார்க்கவைத்தது. எதிர்வீட்டுக்காரர் விட்டுவைத்திருந்த அந்த மீதி வராண்டாவில் ஒரு முனையில் அதை வைத்தேன்.
முதல்முறையாக அவர் என்னிடம் நேருக்குநேராய்ப் பேசினார்.
‘இந்த சன்னல் என் படுக்கை அறையில் இருக்கிறது. இங்கே செடி வைத்தால் கொசு வரும். அதனால்தான் நானே விட்டுவைத்திருக்கிறேன். உடனே உன் செடியை தூக்கிப்போய் உன் இடத்தில் வைத்துக்கொள்.’
என்றார். என் பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. உடனே நான் அந்தத் தொட்டியை எடுத்துவந்து, என் பழைய தொட்டிகளை இங்கும் அங்குமாக நகர்த்திவிட்டு அதைத் திணித்துவிட்டேன்.
காலை நேரத்தில் ஒருவாளியில் தண்ணீர் எடுத்துவந்து குவளையால் ஒவ்வொரு செடிக்கும் தரையில் சிந்தாமல் தண்ணீர் ஊற்றுவேன். அவர் இரண்டு நெகிழிப்போத்தல்களில் தண்ணீர் கொண்டுவந்து அப்படியே குப்புறக் கவிழ்த்து கொடகொடவென்று கொட்டுவார். பாதித்தண்ணீர் தொட்டியில் விழும். பாதித்தண்ணீர் தரையில் ஓடும்.
‘இந்த மனுஷன் ஏன் இப்படிச் செய்கிறார். இவரால் ஏன் எதையுமே பொறுமையாக அழகாகச் செய்யமுடியவில்லை.’
பதிலில்லாத கேள்வி. மனிதநேயமோ, நல்லிணக்கமோ இல்லாத அண்டை வீட்டாரோடு இருப்பது ஆயுள்தண்டனை. அந்த தண்டனை இப்போது எனக்கு. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். வீடு வாங்கும்போது எல்லாவற்றையும் யோசித்தேன். எதிர்வீட்டுக்காரரைப் பற்றி நான் சிந்திக்கவேயில்லை. இவருக்காக என்னால் மீண்டும் வீடு மாறமுடியாது. சகித்தேன்.
ஒரு நாள் அவரின் ஒரு தொட்டிச்செடியை என் தொட்டிகளில் இடித்துபடி கொண்டுவந்து வைத்தார். இரண்டாவது முறையாக என்னோடு பேசினார்.
அந்தச் செடிக்கு சூரிய ஒளி தேவை என்றார். நான் சரியென்றேன். சிலநாட்களில் நான் தண்ணீர் ஊற்றும்போது அவரைப் பார்ப்பேன். அவர் செடிகளை அவர் கவனிப்பார். என் செடிகளை நான் கவனிப்பேன். புதுப்பிரச்சினை ஒன்றும் முளைக்கவில்லை. ஆனால் வேறு ஒன்று முளைத்தது.
அவர் அந்தச் செடியை அந்த இடத்தில் வைத்து சில மாதங்கள் ஓடிவிட்டன. அதில் ஓர் இலைகூட புதிதாய்த் துளிர்க்கவில்லை. ஆனால் அந்தச் செடிக்கு அடியில் என் நித்தியகல்யாணி செடி நிறைய பூக்களை உதிர்த்ததில் நித்தியக்கல்யாணி கன்றுகள் அந்தத் தொட்டியில் மண்டிவிட்டன. சின்னதாய் வளர்ந்து இரண்டு இலைகளால் சிரித்தன. மண்ணே தெரியவில்லை. ஒரு நாள் மூன்றாவது முறையாக என்னோடு பேசினார்.
‘இந்தச்செடியோடு வேறு எந்தச் செடியும் வளரக்கூடாது. புதிதாக முளைத்த அந்த குட்டிச்செடிகள் உன் தொட்டியிலிருந்து விழுந்த விதைகள்தான். அதை உடனே பிடுங்கிவிடு’
என்று சொல்லிவிட்டு என் பதிலை இப்போது எதிர்பார்த்தார்.
‘கொஞ்சம் வளர்ந்துவிட்டால் பிடுங்கலாம். இப்போது பிடுங்கினால் வேர் அறுந்துவிடும். முளைக்காது. இரண்டு வாரம் பொறுங்கள்’
என்றேன். மீண்டும் பூச்சியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டு கதவை பட்டாசாய் வெடித்தார். இப்படியே இவரால் எப்படி வாழமுடிகிறது. எங்கேயோ ஏதோ ஒரு கோளாறு.
அவருக்கு இரண்டு மகள்கள். மனைவி இருக்கிறாரா என்று தெரியாது. காலை 9மணிக்கு சூரிய உதயம்போல் அழகான ஒப்பனையுடன் கருப்பு உடையில் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப்பார்த்தால் ‘ஹாய்’ என்பார்கள். நானும் அதையே சொல்வேன். புன்சிரிப்பால் விடைபெறுவார்கள். இவர்களின் அப்பாவா அவர். சில நேரங்களில் சில உண்மைகளை நம்பமுடிவதில்லை. எங்களுக்குள் நடக்கும் குளிர்யுத்தம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. அவருடைய தொட்டிச்செடிகள், அவர் மகள்களுக்கு குப்பைத்தொட்டிகள் மாதிரிதான். அதைப்பற்றிய கவலையே அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு வாரமாக அவரை நான் சந்திக்கவே இல்லை. ஒருநாள் காலை வழக்கம்போல நான் தண்ணீர் ஊற்ற வந்தேன். என் நித்தியகல்யாணித் தொட்டியில், அவர் தொட்டியில் முளைத்த கன்றுகள் வேரோடும் வேரறுந்தும் பிடுங்கப்பட்டு நூல்களாகக் கிடந்தன. குழந்தைச்சவங்களைப் பார்த்ததுபோல் குமுறினேன். இது ஏன் என்னை இவ்வளவு பாதிக்கிறது. என் வேரே பிடுங்கப்பட்டதாய் உணர்ந்தேன். யாருக்கும் தெரியாமல் அழுதேன். அறுத்துப்போட்ட கன்றுகளை அந்த மண்ணோடு அள்ளி, மெதுவாக மண்ணை விலக்கி, அந்தத் தாயின் மடியிலேயே புதைத்துவிட்டேன். முட்டிக்கொண்டு அழுகை வந்தது. அவரைப் பார்த்தால் ‘ஏன்டா இப்படிச் செய்தாய்? உன் இதயம் சதையா சக்கையா?’ என்று நான் கோபத்தில் எனக்குள்ளேயே கொந்தளித்தாலும் சகித்துக்கொண்டேன்.
‘மனிதநேயம் வளரும் மண் இந்த சகிப்புதானே. சகிப்பு என்பது ஊட்டமுடியாதது. அது இரத்தத்திலுள்ள சிவப்பு அணு. தானாக ஊறவேண்டும். ஊறாவிட்டால் என்ன செய்யமுடியும்? நல்லிணக்கம் இல்லாதவனிடம் மனிதநேயம் ஏது? அவன் பட்டுத்தான் ஆகவேண்டும். இத்தனை வயதாகியும் இவர் ஏன் இப்படி? சே…
இயற்கையாகவே எதையும் சகிக்கும் பிறவி நான். சகித்தேன். என் சகிப்பு என்னை மௌனமாக்கிவிட்டது. அந்த நிகழ்வுக்குப் பிறகு செடிகளுக்கு நான் மட்டும்தான் தண்ணீர் ஊற்றினேன். அவரைப் பார்க்கவே முடியவில்லை. அவருடைய தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றியதாய்த் தெரியவில்லை. அவர் வெளியூர் சென்றிருக்கவேண்டும். அவர் தொட்டிமண் காய்ந்து வெடித்திருந்தன. செடிகள் வாடியிருந்தன. திரும்பி எப்போது வருவாரோ?
என் செடிகளுக்கு நான் தண்ணீர் ஊற்றும்போது, அவர் செடிகள் என்னைப் பாவமாய்ப் பார்த்தன. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவர் செடிகளுக்கும் நானே தண்ணீர் ஊற்றினேன். அடுத்தநாளும் ஊற்றினேன். அவர் வந்ததாகத் தெரியவில்லை. இப்போது எல்லாச் செடிகளுமே என்னை மட்டுமே எதிர்பார்த்திருந்தன.
கீழ் வீட்டில் அவருடைய நண்பர் இருக்கிறார். அவரை எதேச்சையாக சந்தித்தபோது அவர் சொன்னார்.
இந்த வீடு அவர் மகள்களின் வீடாம். அவருடைய சொந்தவீடு தெம்பனீஷில் இருக்கிறதாம். ரொம்ப காலமாக அந்த வீட்டை வாடகைக்குத்தான் விட்டிருக்கிறாராம். இவர் மகள் வீட்டில் தங்கிக்கொண்டு க்ராப் ஓட்டுகிறாராம். நல்ல வருமானமாம். தன் வருமானத்திலும் வாடகையிலும் மகள்களுக்கு எதுவும் தருவதில்லையாம். சூதாடியே காசை அழிக்கிறாராம். அப்பாவாகவே இருந்தாலும் ஒரு சூதாடியை யார்தான் சகிப்பார். சில நாட்களுக்கு முன் அப்பாவுக்கும் மகள்களுக்கும் பெரிய சண்டையாம். இங்கே இருக்கவேண்டுமென்றால், மாதம் இவ்வளவு தரவேண்டுமென்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம். அந்தக் காசையாவது காப்பாற்றலாம் அல்லவா. காசு கொடுத்துத் தங்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் இனி உன் வீட்டுக்கு வரவேமாட்டேன் என்றும் கத்திவிட்டு, அந்தத் தெம்பனீஷ் வீட்டிலேயே தற்போது ஓர் அறையில் இருக்கிறாராம். இத்தனை சேதியும் அவரே அவரிடம் நேரில் சொன்னதாம்.
இப்போது எல்லாச் செடிகளுக்கும் நானே பொறுப்பாகிவிட்டேன். தினமும் தண்ணீர் ஊற்றுகிறேன். அந்தச் செடிகளைப் பார்க்கவாவது எப்போதாவது அவர் வருவார் என்று நான் எதிர்பார்ப்பதுண்டு. அவர் வருவதேயில்லை.
உண்மையில் அவரை விரட்டியது அவர் மகள்களா அல்லது அவர் குற்றுயிரும் குலையுயிருமாய்ப் பிடிங்கிப்போட்ட என் நித்தியகல்யாணிக் கன்றுகளா?
யூசுப் ராவுத்தர் ரஜித்