தன்னார்வத் தொண்டர் இலக்கியவாதியான கதை !!
முருகபூபதி
இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம்.
பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு வாழ்வளித்தன.
ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம் கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள் இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும் இருந்தன.
எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து, படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தான் பிறந்த ஊருக்குப்பெருமை சேர்த்தவர்தான் விலங்கு மருத்துவர் நடேசன்.
இம்மாதம் இவருக்கு 70 வயதாகிறது. அதனை முன்னிட்டு, இவரது வாழ்வையும் பணிகளையும் பற்றிய எனது அவதானக்குறிப்புகளை இங்கு பதிவு செய்கின்றேன்.
ஒருவரது வாழ்வு கனவுகளுடன்தான் ஆரம்பிக்கின்றது. இளமைக்காலக்கனவுகள் , வளரும் பருவத்தில் நனவாவது குறிப்பிட்ட பலருக்கு மாத்திரமே சாத்தியம்!
மருத்துவமனை வசதியே இல்லாதிருந்த எழுவைதீவு மக்கள் ஒரு காலத்தில் படகில்சென்று, அயலூர் மருத்துவமனைகளில்தான் சிகிச்சைபெற்றுவந்தனர்.
கர்ப்பிணிப்பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அவ்வாறு அவதியுற்ற காலத்தில் அங்கு பிறந்த நடேசனின் கனவு, அவர் கடல் கடந்து அவுஸ்திரேலியா வந்ததன் பின்னர்தான் நனவாகியது. அதற்கான வழித்தடத்தை வழங்கிய கங்காரு தேசத்திற்கு நன்றி விசுவாசமாக வாழ்ந்தவாறு, இங்கும் பல சமூகப்பணிகளை முன்னெடுத்தவாறு இலக்கியவாதியாகியிருக்கும் நடேசன் தமிழ்நாட்டில் தஞ்சையில் தனது நாவலுக்காக கரிகாற்சோழன் விருதையும் பெற்றிருக்கிறார். அத்துடன் மேலும் சில இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
எழுவைதீவு மக்களுக்காக ஒரு மருத்துவ மனையையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இலங்கையில் நீடித்த யுத்தம் முடிவுற்றதும், 2010 ஆம் ஆண்டு முற்பகுதியில் எழுவைதீவுக்கு இவர் சென்று குறிப்பிட்ட மருத்துவமனைக்கான தமது பூர்வீக காணியை வழங்கினார். அந்தப்பயணத்தில் நானும், இங்கிலந்திலிருந்து வருகை தந்திருந்த பொறியியலாளர் திரு. சூரியசேகரம் அவர்களும் இணைந்துகொண்டோம்.
இந்தப் பயணம் குறித்து, ஏற்கனவே எனது பயணியின் பார்வையில் தொடரில் எழுதியிருக்கின்றேன்..
எழுவைதீவில் தனது ஆரம்பக்கல்வியை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் மேலும் தொடர்ந்த நடேசன், உயர்தர வகுப்பில் தேர்ச்சிபெற்று பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு மருத்துவ பீடத்தில் தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார்.
இலட்சிய நோக்கத்துடன் வாழும் ஒவ்வொருவரது வாழ்விலும் மூன்று அம்சங்கள் தவிர்க்கமுடியாமல் இரண்டறக் கலந்துவிடும்.
அவை:- கனவு ( Dream) போராட்டம் ( Struggle) வெற்றி ( Success) நடேசனின் வாழ்வை கூர்ந்து நோக்கும்பொழுது இந்த அம்சங்கள் தவிர்க்கமுடியாதவையாக இருந்துள்ளன.
ஒரு நோக்கத்தை கனவுகாண்பது. அதனை நனவாக்க கடுமையாக உழைப்பது. இறுதியில் வெற்றிபெறுவது.
முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான பாரதரத்னா அப்துல்கலாம், இளைய சமுதாயத்தைப்பார்த்து அடிக்கடி உதிர்த்த வார்த்தையே “ கனவு காணுங்கள் “ என்பதுதான்.
பேராதனைப்பல்கலைக்கழகத்தின் விலங்குமருத்துவ பீடத்திலிருந்து ஒரு பயிற்சிபெற்ற மருத்துவராக வெளியே வந்த நடேசனை, முதலில் தொழில் நிமித்தம் வரவேற்றது சிங்கள மக்கள் செறிந்துவாழும் புறநகரப்பிரதேசம் மதவாச்சி.
அதனைத்தொடர்ந்து மலையகத்தின் எழில்கொஞ்சும் ராகலை அவரது சேவையை உள்வாங்கியது.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த வடபகுதியிலிருந்து கடலை அண்டியிருந்த ஒரு பின்தங்கிய, மண்ணையும் கடலையும் நம்பிவாழ்ந்த உழைக்கும் மக்கள் கூட்டத்திலிருந்து வந்த இவருக்கு, பரந்த மனப்பான்மையும் சேவை உணர்வும் ஏனைய பிரதேசங்களில் பணி நிமித்தம் வாழ நேரிட்டதனால் கிடைக்கப்பெற்ற அனுபவமும் புத்திக்கொள்முதல் என்றுதான் கூறவேண்டும்.
அதனால்தான் தனது வாழ்வின் தரிசனங்களை பின்னாட்களில் அவரால் இலக்கியத்தில் படைக்க முடிந்திருக்கிறது.
தமிழ்ப்பிரதேசத்தில் பிறந்து, மத்திய பகுதியில் பல்கலைக்கழகப் பட்டம்பெற்று, முற்றிலும் அந்நியமான வேறிடத்தில் ஏனைய சமூகத்தவருடன் தொழில் நிமித்தம் வாழ்ந்த நடேசன், 1983 இல் நிகழ்ந்த வன்செயல்களினால் நாட்டைவிட்டுச் செல்லநேர்ந்தது.
தமிழ்நாட்டில் சில வருடங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தவேளையிலும் சமூகத்தின்பால் அவருக்கிருந்த அக்கறை குறையவில்லை. அவரது மனைவி சியாமளா பயிற்றப்பட்ட மருத்துவர். இருவரும் இணைந்து தமிழ்நாட்டிலிருந்த இலங்கை தமிழ் அகதிகளுக்காக மருத்துவ முகாம் நடத்தினார்கள்.
குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைப்பணிகளை முன்னெடுப்பதற்காக (Medical Unit for Service of Tamils – MUST) என்ற அமைப்பினை உருவாக்கினார்.
அத்துடன் தமிழ்நாட்டில், செங்கல்பட்டுவில் ஒரு பண்ணையிலும் நடேசன் பணியாற்றியிருக்கிறார். அதன் பெறுபேறுதான் அவர் எழுதியிருக்கும் பண்ணையில் ஒரு மிருகம் என்ற நாவல்.
தேடல் மனப்பாங்கு, மனிதநேய இயல்புகள் , ஊர்சுற்றிப்பார்க்கும் பழக்கம் முதலான குணாதிசயங்களை இயல்பிலேயே கொண்டிருந்த நடேசன், 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்த பின்பும், விலங்கு மருத்துவ பணியையும் சமூகப்பணிகளையும் தொடர்ந்தார்.
சிட்னியில் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் MSc பட்டத்தை பூர்த்தி செய்துகொண்டு தென் அவுஸ்திரேலியா மாநிலத்திலும் விக்ரோரியா மாநிலத்திலும் தனது தொழில் வாழ்வைத் தொடங்கினார்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்த காலம் முதல் அறிவுபூர்வமான தெளிவான நிலைப்பாட்டுடன் சமாதான சகவாழ்வு குறித்தும் இன நல்லிணக்கம் தொடர்பாகவும் சிந்திக்கவும் செயற்படவும் முன்வந்தார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் நலன்குறித்து அக்கறையுடன் இயங்கிய இவருக்கு அந்த உணர்வு , அவுஸ்திரேலியா வந்தபின்னர் வேறு ஒரு திசையில் வளர்ந்தது. அவுஸ்திரேலியாவில் இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக வந்து குடியேறத்தொடங்கியதும் அவர்களின் நலன்குறித்தும் அக்கறை காண்பித்தார்.
அதனால் அந்தப்புரிதல் உள்ள சில நண்பர்களுடன் இணைந்து தமிழ் அகதிகள் கழகம் என்ற அமைப்பை தோற்றுவிப்பதற்கு முன்னின்று உழைத்தார். அந்த அமைப்பு பல நல்ல பணிகளை மேற்கொண்டது. இந்த நாட்டில் அகதிகளாக வந்து குடியுரிமை பெறுவதில் சிரமப்பட்ட பலருக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கினார்.
அத்துடன் இங்கு உருவாக்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பினதும் ஸ்தாபக உறுப்பினாராக செயல்பட்டார். இந்த அமைப்பு இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த ஏழைப்பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடகாலமாக உதவிவருகிறது.
உதயம் என்ற இருமொழி ( தமிழ் – ஆங்கில ) மாத இதழையும் சில வருடங்கள் வெளியிட்டார். இவ்விதழில், தமிழக , இலங்கை மற்றும் புகலிட படைப்பாளிகளும் எழுதினர். குறிப்பாக ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாவண்ணன் ஆகியோரும், கவிஞர் அம்பி, மூத்த பத்திரிகையாளர்கள் எஸ்.. எம். கார்மேகம், டீ. பி. எஸ். ஜெயராஜ் ஆகியோரும் எழுதினர்.
கடந்த சில வருடங்களாக தமது மனைவி மருத்துவர் சியாமளாவுடன் இணைந்து மற்றும் ஒரு மருத்துவத்துறை சார்ந்த தன்னார்வத் தொண்டுப்பணிகளையும் மேற்கொண்டுவருகிறார்.
புற்றுநோய் தாக்கத்தினால் பாதிப்புற்ற ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வசதிகளுக்கு உதவும் இந்த அமைப்பின்பெயர்: Shiyamala Nadesan Cancer Welfare Foundation.
மெல்பனில் நடேசன் குடியேறி மூன்று தசாப்த காலமாகிவிட்டது. இக்காலப்பகுதியில் அவர் மேற்கொண்ட சமூகப்பணிகளை இவ்வாறு பட்டியலிடலாம்.
அகதிகள் புனர்வாழ்வு.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சி.
இலக்கியத்துறை ஈடுபாடு,
ஊடகத்துறை செயற்பாடு.
சமாதான சகவாழ்விற்கான புரிந்துணர்வு அரசியல் பணிகள்.
.இவரது தீவிரமான வாசிப்பு அனுபவம் இவரை ஒரு எழுத்தாளராக்கியிருக்கிறது. தனது தொழில் சார்ந்த அனுபவப் பதிவு, மற்றும் பயண இலக்கியம், நாவல், சிறுகதை , அரசியல் பத்தி எழுத்து முதலான துறைகளில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வரவாக்கியிருக்கிறார்.
அவரது வண்ணாத்திக்குளம் நாவல், ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரிலும் சிங்களத்தில் சமணல வெவ என்ற பெயரிலும் வெளியாகி, வாசகர் கூட்டத்தை அவருக்கு சம்பாதித்துக்கொடுத்துள்ளது.
ஆங்கில மொழிபெயர்ப்பு அவுஸ்திரேலியா அமெரிக்கா நூலகங்களிலும் வாசிக்கக்கிடைக்கின்றன. இந்த நாவலுக்கு தமிழ்நாட்டைச்சேர்ந்த திரைப்பட இயக்குநர் ‘ ‘முள்ளும் மலரும் ‘ மகேந்திரன் திரைக்கதை வசனம் எழுதி திரைப்படமாகத் தயாரிக்கவும் முயன்றார்.
ஆனால், இலங்கையில் அதனைத் திரைப்படமாகத் தயாரிக்கும் சூழ்நிலை இருக்கவில்லை. அந்த நாவல் தற்பொழுது சிங்கள மொழியிலும் கிடைப்பதனால், சிங்கள தொலைக்காட்சி நாடகமாக்குவதற்கு எவராவது முயற்சிக்கலம். காதலையும் அரசியலையும் இந்நாவல் சித்திரிக்கிறது.
உனையே மயல்கொண்டு ( நாவல் ) ஆங்கிலத்தில் Lost In You என்ற பெயரிலும் அசோகனின் வைத்தியசாலை (நாவல் ) King Asoka’s Veterinary Hospital என்ற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவரது சிறுகதைகளும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலுருப்பெற்றுள்ளன. இவரது நூல்கள் :
சிறுகதை தொகுப்புகள்: மலேசியன் ஏயர்லைன் – 370 , அந்தரங்கம், பிள்ளைத்தீட்டு,
நாவல்கள்: வண்ணாத்திக்குளம் , உனையே மயல் கொண்டு, அசோகனின் வைத்தியசாலை, கானல் தேசம், பண்ணையில் ஒரு மிருகம், தாத்தாவின் வீடு
பயண இலக்கியம் : நைல் நதிக்கரையோரம்.
கட்டுரைத் தொகுப்புகள்: வாழும் சுவடுகள் ( மூன்று பாகங்கள் ) –
எக்ஸைல் – கரையில் மோதும் நினைவலைகள்..
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான நடேசன், ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வருடாந்தம் இலக்கியப்போட்டிகளை நடத்தும் எண்ணத்தையும் இச்சங்கத்தில் விதைத்தார். இந்தத் திட்டம் கடந்த சில வருடங்களாக நடைமுறையிலிருக்கிறது.
சிறந்த நூல்களை தெரிவுசெய்து, அவற்றுக்கு தலா ஐம்பதினாயிரம் ரூபாவை ( இலங்கை நாணயத்தில் ) வழங்கும் திட்டமே அது.
எழுத்தாளர் நடேசனின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இம்மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடேசனின் படைப்புலகம் என்ற தொனிப்பொருளில் இவரது படைப்புகள் குறித்த வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில், இலங்கை, தமிழ்நாடு, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனியைச்சேர்ந்த சில எழுத்தாளர்கள் உரையாற்றவுள்ளனர்.
சமூகப்பணிகளுடன் .இலக்கியப்பணிகளையும் தொடரும் எழுத்தாளர் நடேசனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
—0—