வளவ. துரையன்
சிவன் கோயில்மணி கேட்டு
விழிப்பு வந்தது; இனி
சிவனே என்றிருத்தல் ஆகாது
என்றெழுந்தேன்.
காப்பி கொடுக்கும்போதே நாளை
காப்பிப்பொடி இல்லை;
மனைவியின் அவசரத் தீர்மானம்.
செய்தித்தாள் படிக்கப் படிக்கச்
செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;
பாலியல் வன்முறை, கடத்தல்,
கொலை கொள்ளை, இலஞ்சம் கைது
வாகனவிபத்து எனக் கவன ஈர்ப்புகள்
தலையில் தண்ணீர் ஊற்றி
மனத்தை உடலைக்
குளிரச் செய்தேன்.
பெட்ரோல் விலை ஏறுவதால்
இருசக்கர வாகனமில்லை;
பேருந்தில் பிதுங்கி வழிந்து
அலுவலகம் அடைதல்
அதிகாரத்திடம் மல்லுக்கட்டிவிட்டு
கோப்புகளில் மூழ்கிவிட்டுக்
கரையேறி இல்லறக் கரையில்
தரை தட்டினேன்.
வீடுவந்தால்
மனைவி நினைவூட்டினாள்
தான் கொடுத்த
அவசரத்தீர்மானத்தை
ஆளும் கட்சியால்
தள்ளுபடி என்றேன்.
இப்படித்தான் இன்று
இல்லறப் பேரவை நிகழ்ச்சிகள்
இனிதே நிறைவு