ஜெ. ஜெயகுமார்
ஆஸ்திரேலியா நியூஸ் சேனலின் “செய்திகள்” வாசிப்பில் வந்த கொலை வழக்கு தன்னை ஆஸ்திரேலியா முழுக்க அறியச் செய்யும் என்று ரம்யா சற்றும் நினைக்கவில்லை.
வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று அறுபதாம் அகவையை எட்டிவிட்ட ரம்யா, முரளி தம்பதியினர் மூன்றாவது முறையாக சென்னையிலிருந்து மெல்போர்ன் வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.
ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான ஒரு தினசரி வாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
ரம்யா அதிகாலை ஐந்து மணி அளவில் எழுந்து மகன், மருமகள் இருவருக்கு புதிதாக சமைத்து மகன் ஆறு மணிக்கும், மருமகள் ஏழு மணிக்கும் அவரவர் கார்களில் வேலைக்கு கிளம்பி விடுவர்.
பேரனை ஏழு மணி வாக்கில் எழுப்பி, குளிப்பாட்டி, உணவூட்டி, எட்டு மணிக்கு அருகில்உள்ள பிரைமரி பள்ளியில் டிராப் செய்து விட்டு ரம்யாவும் முரளியும் மெல்போர்ன் நெடுகிலும் உள்ள பிரத்யேக அழகிய நடைபாதைகளில் முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்.
அன்று செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை என்றாலே ரம்யாவுக்கு சற்று அலர்ஜி. பேரனை ரெடி பண்ணி பள்ளிக்கு கொண்டு செல்வதற்கு சற்று லேட் ஆகிவிட்டது. சமையலறையில் சகல கலா வல்லியான ரம்யாவுக்கு அவசரப்பதட்டம் ஒரு வீக்னஸ். கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டு விட்டால் அவள் டென்ஷன் ஆகிவிடுவாள்.
அவர்கள் வசித்த “சவண்ணா லே அவுட்” ஏரியாவில் வீடு, தோட்டம், புல் தரை என்று விஸ்தாரமான வீடு. கிட்டத்தட்ட பங்களா என்று சொல்லலாம். கதவை வெளிப்புறமாக சாத்தினாலே தானாகவே வீட்டுக்கதவு லாக் ஆகிவிடும்.
கையில் சாவி, ஸ்கூல் பேக் எடுத்துக்கொண்டு மூவரும் வெளியே வந்து வாசல் கதவை சாத்தியவுடன் ஆட்டோமாட்டிக்காக லாக் ஆனவுடன்தான் ரம்யாவுக்கு தான் செய்த தவறின் விபரீதம் புரிந்தது.
சரியான சாவிக் கொத்தை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக அவசரத்தில் தவறான சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு வீட்டை வெளியே பூட்டி விட்டாள்.
ஒரு கணம் ரம்யாவும் முரளியும் திகைத்து நின்று விட்டனர். ஒரு பக்கம் பேரனை பள்ளியில் விட்டு விட்டு வரவேண்டும்; அதன் டைம் பாம் டிக் டிக் என்று அடித்துக்கொண்டிருந்தது. மறுபக்கம் வீட்டிற்குள் மீண்டும் எப்படி நுழைவது என்ற தவிப்பு.
மகன், மருமகளிடம் வீட்டு சாவி இருந்தாலும் அவர்கள் “பெண்டிகோ” என்னும் தொலை தூர நகரில் பணியில் ஆழந்திருந்தார்கள். அவர்களுக்கு ஃபோன் செய்து வரச்சொன்னாலும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வீட்டு வாசலின் வெளியேதான் குளிரிலும் அவ்வப்போது பெய்யும் மழையிலும் நிற்க வேண்டும்.
மெல்போர்ன் நகரில் ஒரே நாளில், கோடைக்காலம், குளிர்காலம்,வசந்த காலம், மழைக்காலம் என அனைத்தையும் பார்த்து விடலாம் என்றொரு வசனம் உண்டு. “மொபைல் ஆப்” பார்த்தாலே இன்று மழையா என்பதை நிச்சயமாக அறிந்து முன்னேற்பாடுகளை செய்துகொள்ளலாம்.
பதட்டம் அடைந்தாலும் ரம்யா புத்திசாலி. வெறுமனே கையை பிசைந்து கொண்டு நிற்காமல் அந்த வழியே தன் மகளை பள்ளியில் விட வந்து கொண்டிருந்த ஈரோடு தமிழர் அசோக்குமாரிடம் விஷயத்தை விளக்கி, அவர் சாவிக் கொத்தை ரம்யா வாங்கி தன் வீட்டு பூட்டில் நுழைத்து சாமர்த்தியமாக துழாவ, மாந்துரை ஆம்பரவனேஸ்வர் அருளால், “ஒண்டர் ஆஃப் ஒண்டர்ஸ்” திறந்து கொள்ள அங்கே நிம்மதி பெருமூச்சு கலந்த மகிழ்ச்சி வெள்ளம்.
அந்த சம்பவத்தால் அந்த வீட்டில் விரைவில் ஒரு கொலை நிகழும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
வாழ்க்கை வழக்கமான தண்டவாளத்தில் ஓடியது. சில நாட்களில் மகன் வெஸ்டன்பரியில் இன்னொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தான்.
“சவண்ணா லே அவுட்” பழைய வீட்டிற்கு இன்னொரு தமிழர் சித்ரா & பாரத் திருச்சி தம்பதியினர் குடிவந்ததால் சித்ராவும் ரம்யாவும் சினேகிதர்கள் ஆகிவிட்டனர்.
சில நாட்கள் கழித்து, பேரன் பிறந்தநாள் வைபவம் புது வீட்டிற்கு அருகில்உள்ள பூங்காவில் விமரிசையாக நடைபெற்றது. சினேகிதி சித்ராவும் வந்திருந்தாள். பேச்சு வாக்கில் சித்ரா ரம்யாவிடம் “உங்கள் பழைய வீட்டில் உங்களுக்கு காஸ்ட்லி ஐட்டம் ஏதேனும் காணாமல் போயிருக்கிறதா” என்று வினவினாள்.
“இல்லையே! ரொம்ப ராசியான வீடல்லவா அது! என் பையனுக்கு நல்ல ப்ரமோஷனும் மருமகளுக்கு நல்ல இங்க்ரிமெண்ட்டும் அந்த வீட்டில்தான் கிடைத்தது; ரொம்ப ராசியான வீடு; காலி செய்யவே மனசில்லை”; என்று ரம்யா பதில் சொல்லிவிட்டு புதிதாக நுழைந்த விருந்தாளிகளை வரவேற்க சென்று விட்டாள்.
பின்னர் மீண்டும் சித்ராவிடம் உரையாடியபோது, “ சவண்ணா லே அவுட் “ வீட்டில் ஒரு நாள் ஆஸ்திரேலிய டாலர்கள் கொஞ்சம் காணோம்; கொஞ்ச நாள் கழிச்சு ஒரு தங்க செயின் மிஸ்ஸிங்;, அப்பறமா ஒரு கைக்கடியாரம் போன இடம் தெரியல” என்று குறைப்பட்டுக்கொண்டாள் சித்ரா. ரம்யாவின் மனதில் ஒரு சிறு கீறல்.
ஒரு வாரம் போய், சித்ராவிடமிருந்து ரம்யாவுக்கு ஃபோன்.
“மாமி! இந்த ஊர் எங்களுக்கு செட் ஆகலை; குளிர் ஒத்துக்கல, என் வீட்டுக்காரருக்கு, சிங்கப்பூரில் வேற வேலை கிடைச்சிருக்கு; நாங்க சனிக்கிழமை போறோம், “தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்” “குட் பை” என்று விடை பெற்றுக்கொண்டாள் சித்ரா.
“ஒரு நல்ல தமிழ் குடும்பம் ஊரை விட்டு போகிறதே” என்ற வருத்தம் ரம்யாவுக்கு. வாழ்க்கை என்பதே ரயில் பயணம்தான், பல பேர் பல இடங்களில் ஏறி இறங்கி மறைகிறார்கள் என்று ரம்யா ஆறுதல் பட்டுக்கொண்டாள்.
“ஆச்சு; ஒரு வருஷம் விசா முடிஞ்சு, வரும் ஆகஸ்டில் நாமும் மெட்ராஸ் திரும்பவேண்டியதுதான்” என்று நினைத்துக் கொண்டே பேரனுக்கு நூடுல்ஸ் கொடுக்க ஆரம்பித்தாள் ரம்யா.
இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் சீரிஸ் ஆரம்ப டெஸ்ட் “பெர்த்” தில் நடை பெற்றுக்கொண்டிருந்ததால் முரளி தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆட்டத்தின் நடுவே வழக்கம் போல் “செய்திகள்” ஒளிபரப்பு. பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த முரளி கூக்குரலிட்டு “ரம்யா! ரம்யா! ஓடி வா! என்று மனைவியை அர்ஜண்ட்டாக அழைத்தார்.
“என்ன! என்ன!” என்று கேட்டுக்கொண்டே ரம்யா ஓடி வந்தாள்.
முரளி மவுனமாக டி. வி. யை நோக்கி கைகாட்டினார்.
பாக்ஸர் போன்ற பர்சனாலிட்டியுடன் இருந்த கோட்சூட் அணிந்த செய்தி வாசிப்பாளர் அதிரும் குரலில்,
“சவண்ணா லே அவுட்”டில் ஒரு கொலை என்று ஆரம்பித்து “ஒரு ஐரோப்பிய பெண் படுகொலை” என்று விவரித்து காமிராவை கொலை நடந்த நிகழ்விடத்திற்கு திருப்பினார்.
முரளிக்கும் ரம்யாவுக்கும் தூக்கி வாரிப் போட்டது. அவர்கள் முன்பு தங்கியிருந்த வீட்டில் ஒரு மர்டர்.
“கொலையாளி எந்த வித வன்முறையும் செய்யாமல் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த முப்பத்தி ஐந்து வயது ப்யூட்டி பார்லர் பெண்ணை கொலை செய்துவிட்டு வந்த வழியே தப்பி விட்டான்” என்ற முதல் கட்ட விசாரணை.
சித்ரா தம்பதி சிங்கப்பூர் சென்ற பிறகு குடியமர்ந்த ஐரோப்பிய அழகி கொலை செய்யப்பட்டது ஏனோ ரம்யாவை முள்ளாய் உறுத்திக் கொண்டே யிருந்தது.
மறுநாள் “செய்திகள்” வாசிப்பில்” ஐரோப்பிய பெண்ணுக்கு தெரிந்த நபர்தான் கொலை செய்திருக்கவேண்டும் என்பது காவல் துறை சந்தேகம்” என்று காட்டிவிட்டு மிருக காட்சி சாலையில் முதலைகளின் சண்டையை ஒளிபரப்ப ஓடி விட்டனர்.
இன்னும் சில நாட்கள் கடந்து, “செய்தி”களில் “சவண்ணா லே அவுட் கொலையில் இன்னும் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல் என்று சுடச் சுட கடலை வறுத்தனர்.
ரம்யாவுக்கு ஏனோ நிலை கொள்ளவில்லை. வந்த ஊரில், வசித்த இடத்தில், ஒரு பெண் அனாதையாக கொலை செய்யப்பட்டது அவளை கலங்கச் செய்தது.
தீவிர யோசனை, தீவிர ஆலோசனைக்குப் பிறகு அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அன்று மாலை மகனுடன் அருகில்உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தாள்.
நம் ஊர் திரைப்படங்களில் வருவது போல் செங்கல் மைசூர்பாக்குகளால்
கட்டப்பட்டு “பான் பராக்” கறையுள்ள கட்டிடம் அல்ல அந்த போலீஸ் ஸ்டேஷன். முரட்டு காக்கி டிரஸ்ஸும் இல்லை; முறுக்கிய மீசையும் இல்லை; வீண் விறைப்பு இல்லை; கோபத்தில் கொந்தளிக்கும் குருதி விழிகள் இல்லை;
மாறாக ஒரு ஐ. டி. கம்பெனியின் கார்ப்பரேட் ஆபீஸ் போன்ற சூழல்;
“மலேஷியன் ஏர்லைன்ஸ்” ஏர் ஹோஸ்டேஸ் போன்ற இதயம் மலர்ந்த சிரிப்புடன் வரவேற்ற சிப்பந்தி; சினேகித உபசரணையுடன் உரையாடி உண்மையை துலக்கும் ஊழியர்கள்; யார் சீனியர், யார் ஜூனியர் என்ற அடையாளம் தெரியாவண்ணம் அதிகார தோரணை அறவே இல்லாத அதிகாரிகள்; ஆனால் கல்லுக்குள் ஈரம் போல் அவர்கள் நெஞ்சுக்குள் நிர்வாக நெருப்புப் பொறி.
“எஸ்பிரஸ்சோ“ காபியை ரம்யாவுக்கும் அவள் மகனுக்கும் அளித்துக்கொண்டே “எனி ஹெல்ப்” என்று அவர்களை சௌகரியமான சோபாவில் அமரச் செய்தனர்.
கலவர பூமியாக இருந்த ரம்யாவின் முகத்தைப் பார்த்தே அவள்தான் தலைமை பேச்சாளி என்று அவர்களின் போலீஸ் முகமூடி முடிவுக்கு வந்தது.
நடுங்கும் குரலில், ரம்யா “1008 சவண்ணா லே அவுட்”டில் என்று ஆரம்பித்தவுடனேயே அதிகாரிகள் முகம் அலர்ட் ஆனது.
படபடக்கும் அவள் இதயத் துடிப்பை அவர்கள் கேட்கும் அளவுக்கு அங்கே அசாத்தியமான மவுனம்.
கரகரத்த குரலில், கண்ணீர் எட்டிப் பார்க்கும் கண்களால் அனைவரையும் நோக்கியவண்ணம், சில வாரங்கட்கு முன்பு அவள் அங்கே குடியிருந்தபோது வீட்டுச் சாவியை மறந்து, தவித்து அந்தப்பக்கம் வந்த அண்டை வீட்டுக்காரர் அசோக்கின் சாவியை வாங்கித் திறந்து வீட்டிற்குள் சென்றது குறித்து சற்று தடுமாறி ஆங்கிலத்தில் சொன்னபோது அங்கிருந்த அதிகாரிகட்கு அதிர்ச்சி.
துப்புத் துலக்கத் தவித்த இந்தக் கொலையில் இப்படிப்பட்ட ஒரு கோணமா என்று வியந்ததை வெளியே காட்டிக்கொள்ளாமல் அனைத்தையும் தீர விசாரித்து, கேள்விகள் கேட்டு தெளிந்து “ரம்யா & கோ “ வின் விலாசம், ஃபோன் நம்பர் களை குறித்துக் கொண்டு ”வந்ததற்கு மனமார்ந்த நன்றிகள்” என்று வழியனுப்பி வைத்தனர்.
காரில் வீடு திரும்பியபோது அன்று தக்க சமயத்தில் உதவி பண்ணின அசோக் குமாருக்கு துரோகம் செய்து விட்டோமோ என்று ரம்யா மனம் வருந்தியது; பேரன் பிறந்த நாளுக்கு “வாட்ஸ் ஆப்” வழியே அழைத்தும் அவர் வரவில்லை. ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது.. ஒருக்கால் இந்தியா சென்றுவிட்டாரா என்ற சந்தேகம் வேறு உறுத்தியது. இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே “எக்ஸ்ட்ராடிஷன் டிரீட்டி” (ஆட்கொணர்வு ஒப்பந்தம்) உண்டா என்றெல்லாம் அவள் மனம் அலைபாய்ந்தது.
இருந்தாலும் இரும்பு பாரம் இதயத்திலிருந்து இறங்கியதைபோல நிம்மதியுணர்வுடன் ரம்யா அன்றிரவு ஆழ்ந்து உறங்கினாள்.
நாட்கள் நகர்ந்தன. கிணற்றில் போட்ட கல்லாக இன்னும் இருந்தது அந்தக் கொலைவிசாரணை.
பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்தியா அடுத்து அடிலய்டில் விளையாடியாது.
கிரிக்கெட் ஒளிபரப்பின் இடையே “செய்திகள்” பார்த்துகொண்டிருந்த முரளி “ரம்யா! ரம்யா! என்று கூவி அழைத்தார். மின்னலாய் ஓடி வந்த ரம்யா தொலைகாட்சியின் முன் சிலையாக நின்றாள்.
ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட் அணிந்த செழுமையான பெண் செய்தி வாசிப்பாளர் “ சவண்ணா “லே அவுட்” மர்டர் மர்மம் முடிவுக்கு வந்தது; கொலையாளி பிடிபட்டான்” என்று முகமூடி அணிந்த பின்புறம் இரு கைகளிலும் விலங்கு பூட்டப்பட்ட மனிதனை காமிரா சுட்டியது.
ரம்யாவுக்கு இன்னொரு அதிர்ச்சி, அது அசோக் குமார் அல்ல என்பது அறிந்து சற்று நிம்மதி;
நியூஸ் ரீடர் தொடர்ந்தாள்.
“ கொலையாளியின் பெயர் அப்துல் ரஹ்மான். ஆப்ரிக்கா தேசம். கொலை செய்யப்பட்ட பெண்மணியின் பக்கத்து வீட்டுக்காரர். தன் வீட்டு சாவியால் ஐரோப்பிய பெண் வசித்த வீட்டை அடிக்கடி திறந்து டாலர்கள், தங்க செயின் என்றெல்லாம் திருட ஆரம்பித்து அந்த குடும்பம் நாட்டை விட்டு சென்ற பிறகு குடியேறிய ஐரோப்பிய பெண்ணிடமும் அவ்வப்போது கைவரிசையை காட்டி வந்தவன், ஒரு நாள் அவள் விழித்துக்கொண்டு கூச்சலிட அவளை ஒரேயடியாக அமைதிபெறச்செய்து விட்டான்” என்று விவரித்த நியூஸ் ரீடர், இந்த வழக்கில் இரண்டு முக்கிய சாட்சிகள் என்று கூறி , முதலாவது சாட்சியாக ரம்யா முரளியின் புகைப்படத்தை காண்பித்தனர். ரம்யாவுக்கு மூச்சு முட்டியது. அன்றைய தினம் போலீஸ் ஸ்டேஷனில் நமக்கு தெரியாமலேயே போட்டோ எடுத்துள்ளனர் என்று திகைப்படைந்தாள்.
நியூஸ் சேனல் இரண்டாவது சாட்சியாக அசோக் குமார் போட்டோவை காண்பித்தது. ரம்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. வாசிப்பாளர் தொடர்ந்தார். “ சிட்னிக்கு இடம் பெயர்ந்த அசோக்குமார் அதுவரை வாழ்ந்த வீட்டின் சாவி பக்கத்து வீட்டின் பூட்டையும் திறக்கிறது என்று வெள்ளந்தியாக போகிறபோக்கில் வீட்டு உரிமையாளர் அப்துல் ரஹ்மானிடம் சொல்லிவிட்டு போய்விட்டார். அது கொலையாளிக்கு வசதியாய் போய் விட்டது. “வழக்கு முடிந்து தங்க செயின் மற்றும் ரிஸ்ட் வாட்ச் உரிமையாளரிடம் அளிக்கப்படும் என்று முடித்துக் கொண்டு வேறொரு செய்திக்கு போய் விட்டார் வாசிப்பாளர்.
உச்ச கட்ட டென்ஷனிலிருந்த ரம்யாவுக்கு உணர்ச்சி வெள்ளம் வடிந்து உன்னத விடுதலை.
வாசலில் ஏதோ பலத்த சப்தம் கேட்டு முரளி கதவைத் திறந்தார்.
“செய்திகள்” டி. வி. சேனல் குழு, ஒரு சில போலீஸ் அதிகாரிகளின் துணையோடு ரம்யாவை பேட்டிகாண பர்மிஷன் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தது.
ஜெ. ஜெயகுமார்
சென்னை
98842 51887 26.11.2024
- மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு
- பூர்வீக வீடு
- பருகியதன் பித்து.
- விளக்கு விருது. – விட்டல்ராவ், வைதேகி ஹெர்பர்ட்.
- சாவி
- பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- கடைசி ஆள்
- ரொறன்ரோவில் பனிக்கால உள்ளக விளையாட்டுகள்
- நேரலை
- அகழ்நானூறு 91