ஜெயானந்தன்
வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம்.
இதில் கலைஞன் தப்பித்து சிறிது நேரம் இளைப்பாற, இலக்கியம் நிழல்தரும்.
ஏழை-எளிய மனிதர்களை எண்ணிப்பாருங்கள், எண்ணில் அடங்கா துயர் தருணங்கள்.
நடுச்சாமத்தில் பாலுக்காக அழும் குழந்தையின் வாயில், காய்ந்த
முலையின் காம்புகள்.
கதவே இல்லாத வீட்டில், எதற்காக சாவி
தேடி அலைகின்றான் குடிகாரன்.
அநாதையாக விட்டுச்சென்றவனின்
கையில் கபால ஓடும், காவியும் எதற்கு?
தப்பித்துக்கொள்ள, புத்த மடத்தையா தேடுவது.
சாமியார்தனங்களில், நைந்து போன,
சம்சாரங்கள் ஏராளம்.
நடு இரவில் பசியால் அலறும் குழந்தையின் அழுகை, மச்சு வீட்டுக்காரனுக்கு எரிச்சலை மூட்டூம்.
ஒரு கை சோற்றுக்காக, ஜானகிராமனனின், ” சிலிர்ப்பு “
சிறுகதையில், எட்டுவயது பெண், பாம்பேயில் வீட்டு வேலைக்கு ,
செல்லவில்லையா?
இந்த,
ரணங்களை, எந்த பாசுரத்தில் எழுதுவது.
ஆண்டாளுக்கு கிடைத்த வாழ்க்கை,
எல்லா பெண் பிள்ளைகளுக்கும் கிடைத்தால், வைகுண்ட வாசல் திறந்தே கிடக்குமா?
எல்லாவிதமான சங்கடங்களுக்கும், இலக்கியம் தான் பதில் சொல்ல வேண்டும்.தி.ஜா.வின், சிலிர்ப்பு கதையில், ஒரு சிறுமியை குறிப்பிடுகின்றார்.
அச்சிறுமியை, பெண் என எழுதுகின்றார், ஏன்?
அந்த சிறுமி, பஞ்சத்தில் அடிபட்டு, உள்ளூரில் பணக்கார வீடுகளில், வீட்டு வேலை செய்கின்றாள். பசியின் கொடுமை. வறுமை ஒட்டகம், அவள் வாழ்வை பாலைவனத்தில் ஓட விடுகின்றது.
சிறுமி எப்படி “பெண் “ஆனாள்.
அந்த ரசவாதத்தை தி.ஜா.வே எழுதுகின்றார்.
அந்த சிறுமி, ” பாத்திரம் துலக்குகின்றாள்.
துணி துவைக்கின்றாள், அவைகளை காயப் போடுகின்றாள்.
சமைக்கின்றாள்.
அடுப்படி வேலை செய்கின்றாள்.
குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடுகின்றாள்.
சாதம் ஊட்டுகின்றாள். கடைசியாக,
எஜமானர்களுக்கு, படுத்துறங்க,
படுக்கைகள் விரிகின்றாள்.
இத்தனை qualifications, எல்லாம் நிறைந்தவள் பெண் தானே.
அதற்காக தான், அவளை பெண் என எழுதினார்.
இதற்கு காரணம் வறுமை, பசியின் கொடுமை.
இலக்கிய மனம் நிறைந்த தி.ஜா.வின் மனதில், அந்த காட்சி ஆழமாக பதிந்து, அற்புதமான, ” சிலிர்ப்பு ” சிறுகதை.
இலக்கியம் என்ன செய்யும்.
இதனை, படிக்கின்ற நாம், இனி வறுமையில் வாடும் சிறுமிகளை, சிறுமிகளாகத்தான் பார்ப்போம்.
அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய, இளகிய மனதை, இந்த இலக்கிய வாசிப்பு உதவுகின்றது.
ஒரு நிலப்பரப்பின் வாழ்வியலை,
பேசுவது இலக்கியம்தான்.
வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள். அரசியல்வாதிகள் அரசியல் செய்வார்கள். ஆட்சி பிடிப்பார்கள். கல்வி விஞ்ஞானம், இன்னபிற துறைகள் அதனதன் வேலைகளை செய்யும்.
இந்த ஒட்டு மொத்த, பிரபஞ்ச ரகசியங்களையும், பிரதிபலிப்பது
இலக்கியம்தான்.
மனிதனை மனிதனாக வாழ கற்றுக்கொடுப்பது இலக்கியம்தான்.