வளவ. துரையன்
எங்கள் வீட்டு
நாய்க்குட்டி
சேற்றில் புரண்டு
வந்தது.
அதைக்குளிப்பாட்டினேன்
எங்கள் வீட்டு
பூனைக்குட்டி
அணிலைப் பிடித்துத் தின்று
வாயில் குருதிக் கறையுடன்
வந்தது.
கையிலெடுத்துத்
துடைத்து விட்டேன்
எங்கள்வீட்டு
மல்லிகைக் கொடி
நேற்றடித்த காற்றில்
அலைபாய்ந்தாட
அதற்கு ஒரு
கொழுகொம்பு நட்டேன்.
என் கடைசிப் பையன்
கந்தக்குமாரன்
கபடி விளையாடிவிட்டுக்
கால்முட்டியில்
ரத்தத்துடன் வருகையில்
காயம் துடைத்து மருந்திட்டேன்.
எனக்கு எல்லாம் ஒன்றுதான்.