முனைவர் ந.பாஸ்கரன்
போகி
பொங்கல் திருநாளை வரவேற்கும்
முன்தீ நாள்.
மன மாசுகளையும்
மனை மாசுகளையும்
இரு மாசுகளையும்
தின்றொழிக்கத்
தீநாக்குத் தொங்கும்நாள்.
பழையனவற்றைப்
புதியன
எரித்து விரட்டும் எரிநாள்.
அழுக்கு அஃறிணைகளைக்
கழட்டியெரித்தெறிய
உயர்திணைக்கு வாய்ப்புநாள்.
நெருப்புநீரில்…
மனப்பந்தலில்
பூத்துக்குலுங்க
மல்லிகைப்பூக்கள் பூக்கும்நாள்.
பயன்பாட்டு ஒட்டடைகளில்
புதையுண்ட பொருள்கள்
புதைபொருள்கள் அல்ல
புதைக்கவேண்டிய பொருள்களாக்கிப்
போகியோபோகியென்று
உரக்கச்சொல்லும் வெளிச்சநாள்.
போகியின்
முடிக்கும்நெருப்பு
எடுக்கும்.
பொங்கலின்
அடுப்புநெருப்புக்
கொடுக்கும்.
—
முனைவர் ந.பாஸ்கரன்
இணைப்பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பெரியார் கலைக்கல்லூரி
கடலூர்-1