சசிகலா விஸ்வநாதன்
பதினெட்டு வயது
இளந்தாரி பையன்
பல வண்ணங்கள் தெறித்து,பழசான
ஆங்காங்கே நைந்து போன கால்சராய்;
என்றோ மஞ்சள் வண்ணத்தில் இருந்து
இன்று பல வண்ண தெறிப்புகளின் கோலம்
வண்ணக் கலவையில் அவசரமாய் முக்கியெடுத்து
பிழிந்தும், பிழியாமலும் உலர்த்தினாற் போல்,
மேற்சட்டை அவன்
மார்பு கூட்டை
மறைக்க;சட்டையின் நீண்டு தொங்கும் பாகம்
கையைத் துடைக்க அவன் மேலிழுக்க
ஒட்டிய வயிற்றின் வறுமை காட்டியது.
சுவரில் பல்லி போல் ஒட்டிக்கொண்டு,
பூரான் போல் உரு மாறி
கொள்ளையன் போல் முகத்தை
மூடி,வண்ணம்
பூசிக்கொண்டிருந்தவன்;
ஏணி முறிந்து
கீழே விழ,
என் கண் முன்
கரப்பான்பூச்சி
போல் விழுந்தான்.
தன் தலையை சற்றே
உயர்த்திய வண்ணம்;
விழுந்து எழுந்து பழக்கம் போலும்!
கை கொடுத்து தூக்க முயற்ச்சிக்க;
கண்ணடித்து தவிர்த்தான்;
கண்மூடி படுத்தான்; அப்படியே.
திகைப்புற்று நான் நிற்கும் நேரம்;
அரவம் கேட்டு வந்த
அவர்” என்னடா! என்க;
பேசாமல் கண்மூடி படுத்தே இருந்தான்.
“சரி! போயிட்டு நாளைக்கு வாடா” என்றதும்,
நான் அளித்த தேநீரை பருகி விட்டு,
என்பக்கம் ஒரு சிமிட்டல் வீசி,
பதினெட்டு வயது பாலகனாய்,
ஓடியே போனான்; ஓரே நொடியில்.
சசிகலா விஸ்வநாதன்
- சென்றிடுவீர் எட்டுத் திக்கும்!
- உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?
- பெயின்ட் அடிக்கும் விடலை
- சாம்பல்
- ஆறுதலாகும் மாக்கோடுகள்