.
வளவ. துரையன்
மாரியம்மன் கோயில்
வாசலில் வானம் தொட்டு
வளர்ந்திருந்த வேப்ப மரங்கள்
தான் பூத்த மகிழ்ச்சியைத்
தலையாட்டிக் காட்டி வரவேற்கும்
கரும்புச் சோலைகள்
மேதிகள் கூட்டம்
குளித்துக் கலக்குகின்ற
குளம் போன்ற குட்டைகள்
கதிரவனை மறைத்து மறைத்துக்
கண்ணாமூச்சி காட்டும்
சிறு குன்று
களத்தில் தூற்றிய
நெல் மூட்டைகளைக்
கழுத்தொடிய இழுக்கும்
காளைகள்
மேலிருந்து பட்டென்று
விழுந்து வாவி மீனை
வாரியெடுத்துச் சென்று
வட்டமிடும் கருடன்கள்
இப்பொழுது எல்லாம்
இவற்றை வரைந்து பார்த்தால்
வண்ண மயம்தான்
காத்திருக்கின்றன
கானல்நீராய்