உங்களிடமிருந்து
நான்
நிறையக்கற்று
கொள்கின்றேன்.
மனம் நிறைந்த
அன்பைத்தருகின்றீர்கள்.
மற்றவர்களின்
இதயத்தை திறக்க
சாவியைத்தருகின்றீர்கள்.
கள்ளத்தனங்களின்
கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள்
அறிவுப்பாதைகளின்
ரேகைகளில் ஒளிந்துள்ள
ஒளியை காண்பித்தீர்கள்.
தில்லுமுல்லு நிறைந்த
உலகைக்காண்பித்து
ஏமாந்த
எழுத்தாளர்களின்
கண்ணீர் காவியங்களை காண்பித்தீர்கள்.
பதிவிரதா தர்மத்தை காண்பித்து
கூடவே
பரத்தையர் தெருக்களில்
நுழைந்த
சீமான்களின் கதைகளையும் சொல்கின்றீர்கள்.
நாலு வர்ண தெருக்களை சொல்லி
நந்தன் கதையையும் சொன்னீர்கள்.
மிட்டு மிராசுகளின்
ஜல்லிக்கட்டு வண்டிகளையும் காட்டி
தாசிகள் சதைகளின்
சரித்திரத்தை சொல்லி
அழிந்து போகும் சதைகளில்
தொங்கும்
வவ்வால் காம ரூபனின்
விகாரத்தையும் காண்பித்தீர்கள்.
வெகுண்ட எழுந்த
சிவப்பு மனிதர்களின்
வியர்வையில் சொல்லிய
காவியத்தை
இரத்தத்தில் எழுதிய
இஸங்களை சொன்னீர்கள்.
ஆறுகளையும்,மலைகளையும்
காண்பித்து
ஆனந்தமாய் பறந்துப்போகும்
பட்டாம்பூச்சிகளின்
பாடலையும் சொன்னீர்கள்.
எல்லாம்
கேட்டுவிட்டு
ஒன்றும் தெரியா
உள் மனிதனாய் வாழ்ந்த
துறவிகளை காண்பித்து
இது அல்லடா வாழ்க்கை
எல்லா வற்றிலும்
எல்லாமாய் வாழ
வழியைக்காண்பித்தீர்கள் .
வழியெங்கும்
நீங்கள்தான்.
-ஜெயானந்தன்.