சோம. அழகு
இவ்வார்த்தையை ஒரு முறையேனும் ஏதோவொரு சூழலில் உச்சரிக்கச் சொல்லிப் பணிக்காத வாழ்க்கை அமையப் பெற்ற யாரேனும் இவ்வுலகில் இருக்கின்றனரா? மனதிற்கு நெருக்கமான ஒருவரது கோபங்கள், புறக்கணிப்புகள்; தன்னை விடாது துரத்தும் தன் மீதான பிறரது புரிதல் பிழைகளினின்றும் அவர்களினின்றும் தப்பிக்க விடாமல் தடுக்கும் தவிர்க்க இயலாத (பணியிட/உறைவிட) கட்டமைப்புகள்; கனவுகளும் லட்சியங்களும் மெல்ல மெல்ல காற்றில் கலந்தும் கரைந்தும் போவதை வெறுமனே வெறித்து நோக்கக் கிடைக்கும் மணித்துளிகள்; இவையெல்லாம் ஒவ்வொரு முறையும் கொஞ்சமாகப் பழகிப் போகும் போது நம்மில் ஒரு பகுதி உடைந்து போவது – இவை தரும் வலிகளையெல்லாம் பெருமூச்சு கலந்த ஒரு ‘பழகிப் போச்சு’ல் புறந்தள்ளி கடந்து விடத் துடிக்கும் மனங்கள்தாம் எத்தனை எத்தனை?
பெரும்பாலும் பரிதாபத்தையோ சோகத்தையோ தேக்கி நிற்கும் இச்சொற்கள் சில சமயங்களில் வேறு உணர்ச்சிகளையும் அபாயகரமாகப் பூசிக் கொள்கிறது. முதன் முறை அங்ஙனம் உணர்ந்த தருணம்……
ஒரு முறை ஆச்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் தேறியிருந்தாலும் கண்காணிக்கப் பட வேண்டிய அவசியம் இருந்ததால் அவளுக்கான சிகிச்சை அங்கேயே தொடர்ந்தது. ஆனால் அவளுக்கான திரவ உணவை நாங்கள் அளிக்க அனுமதித்திருந்தார்கள். நானும் தங்கையும் மாறி மாறிச் சென்று பழச்சாறு, கஞ்சி, காய்கறிகளின் வடிசாறு எனக் கொடுத்து வந்தோம். அவ்வறையில் இன்னும் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவருக்கு வயது நிச்சயம் எழுபதுக்கு மேல் இருக்கும். நெஞ்சில் கையில் காலில் எல்லாம் ஏதோ பொருத்தப்பட்டிருந்தன. சுவாசக் குழாய் இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். மெதுவாகக் கையைக் கொஞ்சமாக உயர்த்தி அங்கிருந்த செவிலியரை அழைத்து ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் “ம்ம்… ம்ம்ம்..” என்று மட்டுமே சத்தம் வந்தது.
சிறிது நேரம் கவனிக்காததைப் போல் இருந்து விட்டுப் பின் ஒரு செவிலி அவரது அருகில் சென்று, “சரியாதான் மாட்டியிருக்கு. அது அப்படித்தான் இருக்கும்” என்றபடி மீண்டும் தன் இருக்கைக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்த இன்னொரு செவிலியிடம் “எவ்ளோ நேரமா இழுத்துட்டுக் கிடக்கு” என்று சலித்துக் கொள்ளவும் அந்த இன்னொருவரோ “அநேகமா இன்னும் ஒரு மணிநேரம் கூடத் தாங்காதுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் முடிஞ்சுரும்” என்றார். அவர்களது குரலிலோ முகத்திலோ எங்கேனும் ஓர் இடுக்கிலாவது பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் ஆகியவற்றின் சாயலோ சாயலின் நிழலோ தென்படுகிறதா எனத் தேடினேன். சலனமற்ற முகங்கள். கொஞ்ச நேரம் கூர்ந்து நோக்கியதில் லேசான எரிச்சல் மட்டும் தெரிந்தது.
‘பழகிப் போச்சு’ என்ற சொற்கள்தாம் அப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அம்முதியவரின் குடும்பத்திற்கே கூட அன்னாரது மரணம் பெரிய இழப்பாகவோ அதிர்ச்சியாகவோ இல்லாமல் இருக்கலாம். அம்மனிதர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் தெரியாது. ஒரு சாதாரண மனிதன் கூட முன்பின் தெரியாத ஒருவரது இறுதி நொடிகளில் இவ்வாறு நுண்ணுணர்வின்றி(insensitive) நடந்து கொள்ள மாட்டான். கருணையையே அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டிய செவிலியர் அவ்வாறு நடந்து கொண்டது நெருடியது.
பணிக்குச் சேர்ந்த புதிதில் நிச்சயம் சில உயிர்களின் கடைசி தருணங்களைத் தம் கைகளில் கதகதப்பாகப் பாதுகாத்தவாறே கனத்த இதயத்தோடும் மருண்ட அமைதியோடும் அம்மரணங்களை எதிர்கொண்டு அவ்வுயிரை வழியனுப்பி வைத்தவராகத்தான் இருப்பர் இவ்விருவரும். காலப்போக்கில் என்னவாயிற்று? “இவர்களும் மனிதர்கள்தானே?” என்று அந்த மரத்தலை நியாயப்படுத்திக் கடந்து செல்வதா? தெரியவில்லை.
அந்த நாளுக்குப் பிறகு இந்த மாதிரியான நெருடல்கள் நிறையவே மனதை ஆக்கிரமித்தன. வங்கிகளில் ஒரு படிவத்தை/காசோலையை/ரசீதை நிரப்பத் தெரியாமல், அரசு அலுவலகங்களின் விதிமுறைகள் நெறிமுறைகள் தெரியாமல் வெருவி நிற்கும் ஒரு மனிதனிடம் மேலும் தயக்கத்தையும் பதற்றம் கலந்த பயத்தையும் விதைக்கும் சில ஊழியர்கள் ‘உச்’ கொட்டியவாறே அதே ஆயுதத்தைக் கையிலெடுக்கின்றனர் – ‘பழகிப் போச்சு’. அதனால்தானோ என்னவோ பெரும்பாலான அதிகாரிகளிடம் உதாசீனமும் எந்திரத்தனமும் படிந்து கிடக்கிறது.
ஒரு சராசரி நாளின் எந்தச் சாதாரண நிகழ்வையும் கூட சமூக வலைதளத்திற்கான (பரபரப்பான) பொருளாகக் கருதி காணொளி தயாரிக்கும் மனநிலை; கண்ணெதிரே நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைக் கூட அலைபேசி/புகைப்படக் கருவியின் வில்லை வழியாகவே காணப் பழகியது – எல்லாம் எப்படி இயல்பாக இருக்க முடியும்?
சாக்கடையின் நாற்றம் ‘பழகி விட்டதாக’த் துப்புரவுத் தொழில் செய்யும் சக மனிதர்கள் கூறுவது நமக்கெல்லாம் ‘பழகிப் போனது’தான் ஆகப் பெரிய நாணக்கேடு. அவர்களைச் சுத்தமானதொரு வாழ்க்கையை வாழ விடாததற்கும் சுத்தம் செய்யும் எந்திரங்களைப் பயன்படுத்தாததற்கும் காரணம் ஆண்டாண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக அவர்களை அவ்விடத்திலேயே வைத்திருக்க விரும்பும் பழக்கம்தானே?
எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் பழகவே கூடாத வறட்டுத்தனங்கள் அல்லவோ இவை?
சக மனிதனின் மென் உணர்வுகளை உள்வாங்காமல் இருக்கவென ஒரு வடிகட்டியை மனதில் இருத்தி வைத்திருக்கிறார்கள் போலும் சிலர். ஒன்று அந்த வடிகட்டி கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது; அல்லது இயல்பிலேயே அனுதாபமற்ற பிறவிகளாக இருத்தல் வேண்டும். இரண்டுமே மனதின் குற்றத்தைத் தானே சுட்டுகின்றன?
கொஞ்சம் கூர்ந்து கவனித்து இன்னும் பட்டியலிடுவதாயிருந்தால் “பணம்லாம் வாழ்க்கைல முக்கியம் இல்ல. அன்பு, பாசம், நேசம்…” என ஒரு பக்கம் பிதற்றிக் கொண்டே தம் செலவுகளைக் கவனிக்கவென ‘சிரித்த முகம்’ ஒருவரைப் பிடித்து வைத்திருப்பவர்களின் வெக்கங்கெட்ட ‘பழகிப் போச்சு’; தாம் பயன்படுத்தப் படுவதைக் கூட உணராமல் அல்லது பொருட்படுத்தாமல் வலிந்து ஏமாளி பட்டத்தை சூடிக் கொள்வதைப் பெருந்தன்மையாகக் கருதும் அச்சிரித்த முகங்களின் மடமை கலந்த ‘பழகிப் போச்சு’….. என அடுக்கிக் கொண்டே போகலாம் போல!
******************************
எப்பணியாயினும் ஓய்வு பெறும் வரை மனிதத்தைக் கைவிட முடியாமல் இயங்குபவர்கள் ஆங்காங்கே வெகு சிலர் இருப்பதற்கு வண்ணதாசன் போன்றோரே சாட்சி. தமது பணிச்சூழலில் தம்முள் இருந்த அழகியலைத் தொலைக்காமல் பத்திரப்படுத்தி வைத்து கல்யாண்ஜியாகவும் ஆனதில் மென்மேலும் ஆச்சரியப்பட வைக்கிறார்.
பத்து ‘பழகிப் போச்சு’களுக்கு நடுவில் இதமான ஆறுதலாக ஒலிக்கும் ஒரேயொரு அக்கறையான குரல் எவ்வளவு பெரிய ஆசுவாசம்?
தாத்தாவின் இறுதி காலத்தில், “கவலைப்படாதீங்க! மருந்து குடுத்துருக்கு. பார்ப்போம். கொஞ்ச சரி ஆக வாய்ப்பிருக்கு” என்று மிகவும் கரிசனத்தோடு எங்களைச் சமாதானம் செய்ய முயன்ற செவிலி அவர்களை இன்றும் நினைவிருக்கிறது. அச்செவிலி உட்பட எங்கள் அனைவருக்கும் ஓரளவு உண்மை நிலைமை தெரியும். மறுநாள் காலையே தாத்தாவின் உயிர் பிரிந்தது. ஆனாலும் அக்கொடுமையான நொடியை எதிர்பார்த்திருக்கப் பணிக்காமல் என் தாத்தாவின் உயிருக்கும் எங்கள் உணர்வுக்கும் அவர் தந்த மரியாதையையும் காட்டிய பரிவையும் மறக்க இயலாது.
பல ஊழியர்கள் இருப்பினும் அவ்வங்கிக்கு வரும் கிராம மக்கள் அனைவரும் திரளாக ஒரு குறிப்பிட்ட பமுகத்தைத்தான் சூழ்ந்திருப்பார்கள். ஒவ்வொருவரின் கேள்விக்கும் பொறுமையாகப் பதிலளித்து அவர்களுக்கு இயன்ற உதவியைச் சிரித்த முகத்தோடு செய்யும் தாரணி அக்காவைச் சுற்றித்தான் தரணியே இயங்குவது போலிருக்கும்.
இவ்வாறாகப் பரபரப்பாக அழுத்தும் சூழலில் கூட கரிசனத்தை விட்டுத் தராத மன்னுயிர் ஓம்பும் அருளுடையோரால்தாம் ஒவ்வொரு சூரிய உதயமும் பொருள் கொள்வதாகத் தோன்றுகிறது.
- சோம. அழகு