வளவ. துரையன்
மீண்டும் மீண்டும்
கூடு கட்ட நல்ல
குச்சிகள் தேடும் காகம்
எத்தனை பேர் வந்தாலும்
ஏறச்சொல்லி
முன்னாலழைக்கும்
நகரப் பேருந்து
கொடுத்ததைப் பாதுகாத்து
அப்படியே அளிக்கும்
குளிர்சாதனப் பெட்டி
குழல்விளக்கினைக்
கருப்பாக்க நினைக்கும்
கரப்பான பூச்சிகள்
பெட்டியைத் திறந்தாலே
ஆள்கடத்தல் தீவிபத்து
அரசியல் கூச்சல்கள்
ஒழுகும் தூறல்களுக்கிடையே
ஒதுங்க இடம் தேடும்
ஒரு நாய்க்குட்டி
கிழக்கின் மருத்துவமனைக்கும்
மேற்குக் காட்டிற்கும்
இடையில்தான் மெதுவாக
நகர்கிறது வாழ்வு