கறுப்பின வரலாற்று மாதம்

This entry is part 4 of 5 in the series 2 மார்ச் 2025

குரு அரவிந்தன்

சென்ற தை மாதம் முழுவதும் கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாடப்பட்டது. பல்லின மக்களும் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இது உதவியாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த பெப்ரவரி மாதம் பல்கலாச்சார நாடான கனடா முழுவதும் உள்ள மக்கள் கறுப்பின வரலாறு, அவர்களின் சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் நாட்டிற்கான பங்களிப்புகளை மதிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர். ஒரு இனத்தின் வரலாறு ஆவணப்படுத்தப் படவில்லை என்றால், அந்த இனத்தின் மதிப்புமிக்க பாரம்பரியம் இல்லாமல் போய்விடும். அது இன்றைய உலகின் சிந்தனையில் ஒரு புறக்கணிக்கக்கூடிய காரணியாக மாறி, மெல்ல அழிந்து போய்விடக்கூடும்.

முதலில் அமெரிக்காவில் தான் 1926 ஆம் ஆண்டு கறுப்பின மாதமாக அறிவிக்கப்பட்டது. கனடாவில் பிப்ரவரி மாதத்தை ‘பிளாக் ஹிஸ்டரி’ மாதமாக ஒருமனதாக ஒப்புதல் பெற்று, மார்ச் மாதம் 4 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் கறுப்பின வரலாற்று மாதமாக ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் நினைவு மாதமாக இருக்கின்றது. அமெரிக்காவிலும், கனடாவிலும் பெப்ரவரி மாதத்திலும், ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் அக்ரோபர் மாதத்திலும் அனுசரிக்கப்படுகின்றது. வேறு சில நாடுகளும் வெவ்வேறு மாதங்களில் இதைக் கொண்டாடுகின்றன.

அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தேசிய அருங்காட்சியகம் ஒன்று இருக்கின்றது. மேற்கு ஆபிரிக்க யோறூபன் (Yoruban) கலையின் மூன்றடுக்கு கிரீடங்கள் போல இந்தக் காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் காட்சியகத்தை 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார். இங்கு சென்ற போது, நான் அறிந்திராத கறுப்பின மக்களைப் பற்றிய பல வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது.

1619 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக ‘வைட்லயன்’ என்ற கப்பலில் அடிமைகள் அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இருந்தும், 45 க்கும் மேற்பட்ட கறுப்பு இனக்குழுக்களில் இருந்து பல கறுப்பினத்தவர் அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அமெரிக்க அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின்படி, 1863 ஆம் ஆண்டில், ஜனாதிபதி லிங்கன் அடிமைகளின் விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார். சுமார் 250 ஆண்டு காலமாக அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமைமுறை சட்டப்படி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்ததால், கலாநிதி மக் ஜேமிசன்  (னுச. ஆயந துநஅளைழn) என்ற பெண்மணி 1992 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற முதலாவது ஆபிரிக்க அமெரிக்கன் என்ற சாதனையைப் படைத்திருந்தார். இவரைப்போலவே, மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டெலா, பராக் ஒபாமா, டெஸ்மண்ட் டுட்டு, முகமட் அலி, மால்கம் எக்ஸ், பீலே, மைக்கல் ஜோடன், மைக்கல் ஜாக்சன், யுசெயின் போல்ட், செரீனா வில்லியம்ஸ் போன்ற சாதனையாளர்கள் சிலரை இங்கே சுட்டிக் காட்டலாம். இவர்களைப் போலவே கறுப்பின மக்கள்; பலர் உயர் பதவிகளை இன்று வகிக்கின்றனர். அதுமட்டுமல்ல, அவர்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைத்தான் புலம் பெயர்ந்த தமிழ் மக்களான நாங்களும் இன்று அனுபவிக்கக் கூடியதாக இருக்கின்றது.

Series Navigationநிலாவில் நீலப்பிசாசுஶ்ருதி கீதை – 2
author

குரு அரவிந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    R.jayanandan says:

    ஒரு இனத்தின் எழுச்சியும் அதன்
    வரலாற்றுப்பார்வையும்
    சிறப்பாக வந்துள்ளது.
    யாதும் ஊரே யாவரும் கேளீர்.
    எல்லோரும் ஓர் குலம்.

    ஜெயானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *