வெங்கடேசன் நாராயணசாமி
[ஶ்ரீம.பா.10.87.18]
முனிகள் காட்டிய பல வழிகளுள்
அடிவயிற்று அக்கினியில் தூலமாய்
நும்மைத் தொழுவர் சிலர்.
சூக்கும நோக்குடை ஆருணிகள்
உயிர் நாடிகளின் பிறப்பிடமாம் நுண்ணிய
இதயவெளியில் நும்மைத் தொழுவர்.
முடிவிலியே! அதிசூக்கும யோகிகள்
சுழுமுனை நாடி வழி உயிரை மேலேற்றி
பரமனுமது உன்னத இடமாம்
பிரும்மரந்திரக் கபால வெளியில் கலப்பர்.
அங்ஙனம் அடைந்தோர் மீண்டும்
வீழார் இப்பிறப்பிறப்பு சுழலில்.
[ஶ்ரீம.பா.10.87.19]
பற்பல விசித்திர யோனிகள் பிறப்பித்து
அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்து
நீக்கமற ஸமமாய் நிறைந்து வெவ்வேறு
உருவில் பற்றியெரி ஜ்வாலையாய்
வியாபித்துத் தோன்றினீர் ஜீவேஶ்வர ஜகங்களாய்.
உயிர்களனைத்துள் உறையும் இவ்வொருமை
உணர்வாம் நுமதிருப்பை ஒரேயமுதமாய் உள்ளபடி
உள்குவர் தூமனம் படைத்த பற்றற்ற துறவியர்.
[ஶ்ரீம.பா.10.87.20]
அவரவர் செய்வினைக்கேற்ப உடலீந்து,
அவ்வுடலில் உறையும் தூய உயிரீந்து,
அவ்வுயிர்க்கும் நும் கூறாம் ஒருமை உணர்வீந்து,
உள்-வெளி மறைப்பற்ற அவ்வுணர்வெனும் பெரும்பதத்தில்
அண்ட ஆற்றலனைத்தும் ஆய்ந்தளித்து
அறிவூட்டிச் சீராட்டிப் பாராட்டி
ஜீவனை ஶிவமாக்கும் நும் திருவடிப்
புகல் திறன் உணர்ந்த செழுமறையோர் தொழுதேத்தும்
நும் செங்கமலத் தாளிரண்டும்
பிறப்பிறப்பறுக்கும் பெரும்பேறன்றோ
பெம்மானே! பேரருளாளா!
[ஶ்ரீம.பா.10.87.21]
அறிதலரிது ஆத்ம தத்துவம் ஆகை
ஆன்ம போதம் ஆர்த்திட அவனியில்
அவதாரம் பற்பல அலர்ந்து திருவிளை-
ஆடற்க் கூத்து ஆற்றினாய் ஈஶனே!
அக்கதையமுதக் கடலுள் மூழ்கி
பிறவிக் களைப்பாறுவர் நினதடியார்;
நினது செந்தாமரைச் சேவடி பூத்த
திருக்கதையமுத வாவி வாழ் புட்கள்
குழாமுடன் வாழ்ந்திருப்பாரவர் வாழ்வாங்கு!
மண்ணாளப் பெறினும் வேண்டார்,
விண்ணாளப் பெறினும் வேண்டார்,
வீடு வாசல் துறந்தார்,
விருப்பமிலார் வீடுபேற்றிலுமே!
[ஶ்ரீம.பா.10.87.22]
உற்றோனேயாகி உமக்கே ஆட்செய்யின் இம்மானிட உடல்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதமாய்
ஆபத்தில் உதவும் ஆப்த நண்பனாய் அன்புத் துணையாய்
இதம் பல புரியும் நற்பண்புச் சுற்றமாய் விளங்கிடும்மே!
உண்மையில், ஒவ்வோர் ஜீவனின் உற்ற
நண்பர், நலம் நாடி, அவனையே
தனதாக்கத் துடிக்கும் தயாபரன்
அவ்வவ்வற்றுள் அன்பே ஶிவமாயுறை
ஆன்மாவாம் தாங்கள்தானே?
இத்துணை பெற்றும், இதற்கு மாறாய்,
ஊனுடலே பெரிதெனப் பேணி
புலன் நுகர்ச்சியே இன்பமெனக் கருதி
ஆசைக்கு அடிமைசெய்து சிற்றின்பம் திளைத்து
மாயையில் சிக்கி மதிமயங்கி
மோகமுள்ளில் புழுவாய்த் துடித்து
தீமை வழி சென்று பொய்மை தொழுது
மெய்மை கொன்று தன்னையே அழித்து ஐயகோ!
அச்சமூட்டும் பற்பல இழி பிறப்பெடுத்து
உழன்று திரிவரே கீழுலகங்களெல்லாம்!
[ஶ்ரீம.பா.10.87.23]
உயிர் மனம் பொறி புலனடைத்து
திடயோகம் தினம் பயின்று
தவமுனிவர் உருகி எதை உள் வைத்துத்
தொழுது நினைந்தனரோ அதையே,
அஞ்சி வெறுத்துப் பதைத்து
நைந்து கொடும் பகையால்
நினைந்தே அடைந்தனர் மாற்றாரும், அதையே,
பாய்விரித்த பைந்நாக மேனி போல்
பருத்துருண்டு திரண்ட திருப்புயங்களழகு கண்டு
மையல் செய்து தையலார் மகிழ்ந்தடைந்தாரெனின்,
அதையே, அத்திருவடித் தாமரை மகரந்த மதுவே பருகி
மறைகள் யாமும் மதர்த்து முரல்கின்றோம்!
நின்னையே நினைப்பவர் யாராகினும் எவ்வாறாயினும்
நின் ஸம நோக்கில்
அவர்கள் அனைவரும் ஒன்றே அன்றோ?
[ஶ்ரீம.பா.10.87.24]
படைப்பின் முன்னரே நிலைத்திருந்ததெதுவோ அதை
அண்மையில் பிறந்து மறைந்து
காலத்திற் ஆட்பட்டோர் அறிவதெங்ஙனம்?
அவ்வித்திலிருந்து தோன்றிய அயனை
அடியொற்றியே ஏனைய படைப்புகள் பின் தோன்றின!
பிரளய இறுதியில், அனைத்தையும் தன்னுளொடுக்கி அரவணைமேல் அறிதுயில் பள்ளிகொண்ட
ஆனந்த ஶயனமதில் தூலமுமில்லை, சூக்குமமில்லை,
தூல-சூக்குமம் கலந்த பருப்பொருள் அண்டமுமில்லை, வெளியுமில்லை, காலமுமில்லை, கால ஓட்டமுமில்லை!
வேத சாத்திரங்களுமில்லை! துரியமுமில்லை! துரியாதீதமுமில்லை! ஸத்யம் ஞானானந்தமயம்! ஸர்வம் விஷ்ணுமயம்!
[ஶ்ரீம.பா.10.87.25]
இறையாமும்மை உள்ளபடி அறிவதரிதாமே.
இதுபற்றி உரைப்போரும் ஒன்றுபடார் அவரவர் கருத்தில்.
நாத்திகர் சொல்வார் ஜடத்தில் தோன்றியது இவ்வுலகம்,
எதுவும் நிலையில்லை, ஏன் ஆத்மாவுமே என்று!
வைஶேஷிகர் உரைப்பர் காரணமேயில்லா அணுக்கலின் புதிய சேர்க்கையே இவ்வுலகம், அச்சேர்க்கை அழியின் இவ்வுலகமழியும், அணுக்களழிவில்லாதவையே!
பாதஞ்ஜலமுரைப்பர் பிரும்மபாவமற்ற ஜீவன் அமிர்தனாகிறான் யோகப் பயிற்ச்சியினால், எவ்விதம் ரஸவாதத்தால் செம்பு ஸுவர்ணமாவது போல்.
நையாயிகர்கள் உரைப்பர் மனதுடன் கூடிய ஐம்பொறிபுலன்கள், உடல் மற்றும் விடய வாஸனைகள் எனும் இருபத்தியொருவித துன்பங்களின் அழிவே முத்தியென்று.
ஆன்மா ஒன்றல்ல, ஒவ்வோருடலிலும் வெவ்வேறு ஆன்மா உளதாய் வேற்றுமை காண்கிறார் ஸாங்கியர்.
கர்மமும் அதன் பயனும் ஸத்தியமே, அழியாதது
என்று உரைப்பர் மீமாம்ஸகர்.
வியாவஹாரிகமே ஸத்தியம் என உபதேசித்தல்
மாயையை ஆரோபித்தே!
முக்குணத்தால் ஆனவன் ஜீவன் எனும்
இரட்டை வாதம் செய்வர் சிலர்.
அவரவர் அறிவில் குணங்கள் ஏற்றி வாதிடுவர்.
இவையனைத்தும் அஞ்ஞானத்தின் விளைவே!
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்!
தூயவுணர்வெனும் பெரும்பத ரஸமாம்
உம்மிடம் இல்லவே இல்லை அஞ்ஞானமும் குழப்பமும்!
உம்மின் ஒரு பொறியாம் ஜீவனும் உணர்வு மயமே!
மாயப்பிரகிருதி பாற்பட்டு தன்னிலை மறந்து சிக்கித் தவிக்கின்றான் ஜீவன் பிறப்பிறப்பு சுழலில்.
இதனால் வந்த குழப்பமே இவ்வளவும்!
[ஶ்ரீம.பா.10.87.26]
முக்குணத் திரிபால் பலவாய்த் தோன்றும் இவ்வுலகம்
மனம் காணும் ஸொப்பனமே!
உம்மையே மூலமாய்ப் பெற்று உம்மிலே உதித்த இவ்வுலகமதில்
கணுக்கணுவாய் பரமனாம் நீரே புகுந்து பரவிட
ஜீவனுட்பட இவ்வுலகமனைத்தும் மெய்யாய்த் தோன்றியதே!
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்,
மரத்தை மறைத்தது மாமத யானை,
தன்னை மறைத்தது தன் கரணங்களாம்,
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்.
உம்மிலே உதித்து வளர்ந்தொடுங்கி
உம்மையே ஒவ்வோரணுவினுள் கொண்டு
உய்வதால் இவ்வுலகமும் பரமனாம் நீயே!
இதுவே தீர்ந்த முடிவு!
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்,
மரத்தின் மறைந்தது மாமத யானை,
தன்னின் மறைந்தது தன் கரணங்களே,
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே!
[ஶ்ரீம.பா.10.87.27]
அனைத்துயிரின் அகத்தே
அந்தர்யாமியாய் அமர்ந்திட்ட ஆதிமூலமாமுனை
அனைத்துயிரின் உயிராய் ஏற்றிப் பணிந்து உன்
நாமம் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும்
சாற்றியுரைக்கும் பத்தர் சாவைத் துரும்பென எண்ணி
அடியிட்டுத் திரிகின்றார் நமன் தலை மீதே!
மறை கூறும் கர்ம பலனே கண்ணாய்
பரமனாமுன்னிடம் பாராமுகமாய்
பத்தி நெறியறியாப் படித்தவராகினும்
கறவைக் கணங்களைப்போல் கர்ம
வினைக் கயிற்றால் கட்டுண்டு
பிறப்பிறப்பு சுழலில் உழன்று திரிவரே!
பழவடியார் பத்தர் படிப்பறியாப் பாமரராகினும்
அவரையும் சார்ந்தோரையும் தூய்மையாக்கி
உன்தன் பதத்தினில் பணித்து இணைத்திடுவாயே!
[ஶ்ரீம.பா.10.87.28]
பரமனே! அகரணா! ஸுயம் பிரகாஶா!
அனைத்துப் பொறிபுலன் ஆற்றலின்
தோற்றுவாய் ஊற்றுக்கண் ஊழியானே!
உன் படையலையே உனக்கிட்டும்
பிரித்துக் கொடுத்தும் உண்டு உயிர்
வாழ்ந்துமிருப்பர் மாயையால் அமரரும்!
இஃது, திறை வசூல் செய்த சிற்றரசு
அதில் பெரும்பங்கைப் பேரரசிற்குச் செலுத்தி
மீந்ததை தானுண்டு தமக்கிட்ட கட்டளைப்படி
தத்தம் பணியை அஞ்சிப் பணிந்து
பொறுப்புடன் ஆற்றுவது போலத்தானே!
[ஶ்ரீம.பா.10.87.29]
முத்தளை முறிக்கும் மூவா முதல்வோனே! மாமாயோனே! உனதருட்க் கடைக்கண்ணாடலால் காளியைக் கிளறி
முன்வினைப் பயனாம் வாஸனை வயத்து
அசைவசையாதன அண்டமும் பிண்டமும் ஒன்றினுள் மற்றொன்றாய்ப் பின்னிப் பிணைத்து
அவையனைத்தையும் உமிழ்ந்து உண்டு காத்து
அலகிலா விளையாட்டுடை
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனாய்
மன வாக்கு ஏகா உன்னத உணர்வின் ஊற்றொளியாய்
காரண-காரிய அருவுருக் காட்சியின் அதிட்டான ஸத்தியமாய்
அடிமுடி காணா நெடுமலை வானாய்
அங்கிங்கெனாதபடி அந்நியம் ஏதுமற்ற ஏகமாய்
வேண்டுதல் வேண்டாமையிலானாய்
வெறுமை வெறித்த வெற்றிடமாய்
நீள் விசும்பென நீக்கமற நிறைந்து நடுநிலை நின்று
அதையுமறி கண்ணாகி அக்கண்ணிற்கோர் மணியுமாகி
அம்மணியின் மதியாகி அம்மதியின் ஸாக்ஷியாம்
அந்தமிலாக் கண்ணாகி அப்பரமோன ஆன்மாவாய்
அவ்வந்தரங்க அம்பலத்துள் ஆனந்தக் கூத்தாடும்
ஆதிமூலப் பரம்பொருளே போற்றி! போற்றி!
[ஶ்ரீம.பா.10.87.30]
எங்கும் எப்போதும் எதிலும் ஒருபுடையாய்
அகண்ட ஏகரஸமாய் அமர்ந்தொளிரும்
அமரரும் அறியா அரிதினுமரிதாமரியமுதே!
எண்ணற்ற உயிர்களும், முற்றிலும் மாறிலியாய்,
அழிவிலியாய், எங்கும் எதிலும்
எப்பொழுதும் நிறைந்தவை ஆயின், தங்களின் ஸமமே!
தங்கட்குக் கட்டுப்படாதன, தாங்களால்
நியமிக்க இயலாதனவாம்! மாறாக,
உம்மிடத்திலன்றோ பல்லுயிர் தோன்றி உய்ந்து ஒழிவது!
உமக்கே ஆட்பட்டு ஆட்செய்து ஆளான உயிர்களனைத்துள்
ஒன்றேயாய் ஸமமாய் ஓர்மை உணர்வாயொளிரும்
ஒப்பிலா அறிவே! அரிமணியே!
அனைத்தறிவறியாமையின் ஆதார அரியை
உள்ளது உள்ளவாறு யாரறிவாரே?
‘அறிவேன்’ என்போரால் அறியப்படாமலும்,
‘அறிகிலேன்’ என்போரால் அறியப்பட்டும்,
மும்மை அறிவின் அந்நியமின்றி அனைவரின்
அகத்தே அவிர்வது அவ்வரியே அன்றோ?
அனுதினமும் அரியடி பற்றி
அவன் பணி செய்து கிடப்பதே வாலறிவாமே!