நீ தான் என் ஜீனி

author
0 minutes, 6 seconds Read
This entry is part 4 of 5 in the series 16 மார்ச் 2025


ஆர் சீனிவாசன்

ஒப்புக்கொள்கிறேன். நான் தான் உரசலை ஆரம்பித்தேன். வேலை அழுத்தத்தின் பின் விளைவுகளை நாவு வரை செல்ல அனுமதித்திருக்க கூடாதுதான். வீட்டிற்கு வந்தவுடனே அலர் “ஏன் இவ்வளவு லேட்டு. இன்னைக்கு வெளியில சாப்பிடலாம்னு நினைச்சோமே” என்றதிற்கு முகம் சுளித்திருக்க கூடாததுதான். “ஏன் இப்படி…” என வாக்கியத்தை முடிக்காமல் ‘உம்’மென முகத்தை வைத்துக்கொண்டு போனவளை சமாளிக்க முடியாமல் அன்று மாலை முழுவதும் மூலைக்கு ஒருவராக கழித்தோம். படுக்கையில் சீண்டி கொஞ்சம் அத்து மீறலாமா என நினைத்தேன். ஆனால் நிஜமாகவே அன்று எனக்கு மனமும் இல்லை உடலும் ஒத்துழைக்கவில்லை. காலை எழுந்ததும் அழுத்தம் கொஞ்சம் குறைந்தாலும் முழுக்கவும் போகவில்லை. காலைக் கடன்களை முடித்து வெளியே வந்தபோது தான் அலர் வீட்டில் இல்லாதது தெரிந்தது. சில நாட்கள் நான் எழும் முன்னமே அவள் வேலைக்கு கிளம்பிவிடுவாள். இன்றும் அப்படிதான் என நினைத்தேன். ஆனால் மூளையின் ஒரு சிறிய பகுதியில் ‘இன்று அப்படியல்ல’ என்ற உறுத்தல் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அலுவலகத்திற்கு கிளம்பினேன்.

ஞால ஹைபெர்வே AS-42 டின் மித வேக பாதையில் விண்கலத்தை செலுத்தும்போது எனக்கு அந்த எண்ணம் திடீரென தோன்றியது. அலருக்கு மாலை ஏதாவது இன்ப பரிசை அளித்து சமரசம் பேசலாம் என்று. அலருக்கு என்ன பிடிக்கும் என்ற பட்டியலே வைத்திருந்தேன். இயற்கை ரசிகை அவள், அன்ரோமேடா நட்சத்திர கூட்டத்தின் R -23C நட்சத்திரத்தில் மட்டுமே கிடைக்கும் உணர்வுக்கேற்ப நிறம் மாறும் பளிங்கு கல், புவியின் செந்தாமரை, குருவின் நிலாக்களில் ஒன்றான ஐரோப்பாவின் பாதாள ஜொலிக்கும் நுண் கற் பூக்கள், முறைதவறாமல் சமைக்கப்பட்ட தேங்காய் அப்பம், தொட்டியில் வளரும் இயற்கை பூக்கள் இத்யாதி. AS – 42 டில் வரிசையாக நிற்கும் பிரம்மாண்ட மால்களில் இவை அனைத்தும் கிடைக்கும். மாலை வீடு திரும்பும் போது இவற்றில் ஒன்றை வாங்கிக்கொண்டு அத்துடன் கை நிறைய ரோஜா கொத்துக்களோடு நாய்க்குட்டி கண் பாவனை செய்து வாலை சுருட்டிக் கொண்டு அவளை சுத்தி சுத்தி வந்தால் சினம் நிச்சயம் தணியும்.

அலுவலகத்திற்குள் நுழைந்த உடனேயே வேலை ஆரம்பமானது. அன்று முழுவதும் வேறு எதைப்பற்றியும் யோசிக்க முடியவில்லை. கடைசியில் அலுவலகத்திலிருந்து புறப்படும்போது தாமதமானது மட்டுமின்றி உடலும் மனமும் சோர்ந்துவிட்டது. விண்கலத்தை ஹைபெர்வே P – 32 டின் தானியங்கி பாதையில் ஏற்றியவுடன் என் இல்லத்தின் ஆயங்களை கணினியிடம் கொடுத்து விண்கலத்தின் கட்டுப்பாட்டை ஞால போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்து கொஞ்ச நேரம் கண்மூடினேன். களைப்பு, மனதின் அழுத்தம் மறந்து முக்கால் மணிநேரம் உறங்கியிருக்க கூடும். அரை தூக்கத்தில் வேண்டாவிருப்பாய் விழித்தபோது திரையில் விண்வெளியின் இருள்சூழ்ந்த வெறுமையோடு பக்கத்தில் மிதக்கும் விண்கலங்களின் விவரங்கள், என் விண்கலத்தின் வேகம், திசை போன்ற தரவுகள் ஒளித்துக் கொண்டிருந்தது. இல்லத்தை அடைய இன்னும் அரைமணிநேரம் மீதமிருந்தபோது தான் பரிசை பற்றிய ஞாபகம் வந்தது. ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் அலர் நிச்சயமாக தூங்கியிருப்பாள் என்பது உறுதி. நாள் முழுதும் ஒரு முறை கூட அவளிடம் பேச வாய்ப்பில்லை. நாளை காலை ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் அல்லது விடியற்காலை கொஞ்சிக் கொள்ளலாம் என எண்ணி பரிசு திட்டத்தை கைவிட்டேன்.

ஹைபெர்வேக்களில் பயணிக்கும் போது பல்வேறு ஒலி அலைகளில் ஒளிபரப்பாகும் தேவையில்லா விளம்பரங்களை விண்கலத்தின் கணினி குப்பை பெட்டிக்குள் சேர்ந்து கொண்டிருந்தது. அலர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் அனுப்பிய செய்திகளை மட்டும் படித்துக்காட்ட கணினிக்கு அனுமதி கொடுத்திருந்தேன். வெறிச்சோடி விண்கல ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டிருக்கும் போது மூலையில் சிறிய சின்னம் தோன்றி மறைந்தது,

“மாய ஜீனி பரிசு…”

அப்போது அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. விண்கலம் இன்னும் தானியங்கி கட்டுப்பாட்டில்தான் இயங்கிக்கொண்டிருந்தது. சிஃநஸ் நட்சத்திர கூட்டத்தின் வடக்கே விண்கல் சருகில் விண்மீன் கூட்டத்தை பார்த்தபோது அதனை கொஞ்சம் பக்கத்தில் போய் பார்க்க வேண்டும்போல தோன்றியது. விசையை கையில் எடுத்தவுடனேயே தானியங்கி கட்டுப்பாட்டிலிருந்து விலகி விண்கலம் என் கை கட்டுப்பாட்டிற்கு வந்தது. விண்மீன் கூட்டம் கண்ணாடியிலிருந்து பார்க்கையில் மெல்லிய வண்ணத்தை கருப்பு திரைச் சீலையின் மேல் தீட்டியதுபோல தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை, அந்த “மாய ஜீனி பரிசு…” செய்தியை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மனதில் சட்டென எழுந்தது. ஸ்க்ரீனின் ஒரு மூலையில் இருந்த செய்திகள் சின்னத்தை பார்த்தேன். டெலிபதி நுட்பம் மூலம் என் எண்ணங்களை படித்த கணினி,
“செய்திகளை படிக்கவேண்டுமா?” என்று கனிவான பெண் குரலில் கேட்டது.
“ஆமாம்” என்றேன்
“முக்கியமான செய்திகள் எதுவும் இல்லை” என்றாள்
“மாய ஜீனி …” என்றேன்
“இந்த செய்தி வர்த்தக விளம்பரம். மோசடியாகவும் இருக்கலாம். படிக்கவேண்டுமா?” என்றாள் கணினி.
“படி” என்றேன்.
இருள் நிறைந்த விண்வெளி ஸ்க்ரீன் திடீரென மறைந்து அயல் நாட்டு வாசி (அவள் பெண் என நினைக்கிறன்) மனித வடிவ தானியங்கி பக்கத்தில் நின்று,

“உங்களுக்கு உதவியாக ஒருவர் வேண்டுமா? வேலைகளை சொன்னபடி எந்தவித எதிர்ப்பேச்சின்றி செவ்வென செய்து முடிக்க ஒருவர் தேவையா? கவலையை விடுங்கள். விளக்கு ஜீனி உங்கள் தோழன். ஞால தானியங்கி குழுமத்தின் உன்ன…..” அயல் நாட்டு வாசி நரிக் கண்ணால் என்னை பார்த்து கண் சிமிட்டினாள். அதற்க்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை.
“நிறுத்து” என்றேன். கணினி நேரலை விளம்பரத்தை நிறுத்தி ஸ்க்ரீனை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்தது.

தானியங்கிகளுக்கும் எனக்கும் ஏனோ ஒத்துப்போவதில்லை. அளவுக்கு அதிகமான பணிவு, செயற்கை சிரிப்பு, அமானுஷ்ய சக்தி, ஆன்மா இல்லாத ஜடம் என அடுக்கிக்கொண்டே போகலாம். சிறு வயதில் நாய் வளர்த்தேன். நிஜ நாய். உயிரிணங்களுக்கே உரிய விருப்பு வெறுப்புகள் நிறைந்த ஜீவன். சொன்னபடி கேட்காத தாந்தோணி. ஆனால் அதன் மேல் அன்பாக இருந்தேன். ஒரு நாள் என்னை கடித்துவிட்டது. மருத்துவர் அது ஆபத்தானது என தீர்மானித்தார். ‘நாய் கடிக்கத்தானே செய்யும்?’ என்றேன். ‘மன்னிக்கவும். விதிகளின்படி எப்போது நாய் எஜமானருக்கு அடிபணியாமல் நடக்கிறதோ அதை தனிமைப் படுத்த வேண்டும். கடிக்க ஆரம்பித்தால் அதை கொ…களைய வேண்டும் என்பது உத்தரவு’ என்றார். செல்ல நாயை இழுத்து செல்லும்போது அதன் கண்களில் பார்த்த பரிதாபம் இன்றுவரை என்னை துயருற செய்கிறது. “நீங்க வேணும்னா இதேமாதிரி தானியங்கி நாயை வெச்சுக்கலாம். நீக்கம் முடிந்தவுடன் உங்க நாயோட ரோமத்தையே தானியங்கிக்கு பொருத்தி தர்றோம். அதே கண்கள் அதே ரோமம் ஆனா கடிக்காது’ என்றார் மருத்துவர். ஒரு ஜீவனின் சுபாவத்தை ஏற்காத இந்த ஞாலம் ஒரு ஜடத்தின் செயற்கையை ஏற்கிறதே என்ற கோபம் வந்தது. அந்த வெறுப்பு இன்னும் என்னிடமிருந்து போகவில்லை.

“சக்திவடிவேல், உங்கள் இலக்கை அடைந்து விட்டீர்கள்” என்றது விண்கல கணினி. அப்போதுதான் விண்கலம் என் எண்ணங்களை படித்து விண்கலத்தை தானே செலுத்திக்கொண்டு என் இல்லத்திற்கு கூட்டி சென்றத்தை உணர்ந்தேன். விண்கலத்தை உரிய இடத்தில் நிறுத்தி கைப்பையை எடுத்துக்கொண்டு கதவை திறக்கலாம் என போன போது அலரே வந்து கதவை திறந்தாள். முகத்தில் புன்னகை. “வாங்க. ரொம்ப களைச்சு போய்ட்டீங்களா?” என்றாள். அவள் முகத்தின் பூரிப்பு நிச்சயமாக செயற்கை. அவள் கோபம் இன்னும் தணியவில்லை. இன்று முழுவதும் என்னை இப்படியே பொய் நடிப்பு செய்து கடிக்கப்போகிறாள். அதை இப்போதே தடுக்க வேண்டும்,

“அலர். இங்கே பாரு. நேத்தி கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். வேலை அழுத்தம். சரி தப்புதான்” என்றேன்
“பரவாயில்லை. காபி குடிக்கறீங்களா?” என்றாள். அப்போதுதான் விஷயம் யோசித்ததை விட பெரியதாய் இருக்குமோ என தோன்றியது. அலர் என்னிடம் அப்படி கேட்டதே இல்லை.
“வேண்டாம். பாரு அலர் இந்த நடிப்பெல்லாம் வேண்டாம். அத்தான் நான் மன்னிப்பு கேட்….” என் பேச்சை முடிப்பதற்குள் அலரிடம் திடீர் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. மிக வேகமாக நேராக நின்றாள். கண் விழி கருப்பிலிருந்து சிகப்பாக மாறியது. இரண்டு செவிகளும் தலையிலிருந்து சிறு புகை வெளியீட்டுடன் வெளியே வந்தன. நடப்பது என்னவென்று எனக்கு புரிவதற்குள்,
“சக்திவடிவேல், என் எஜமான், உங்கள் மனைவி, அலர் மேல் மங்கை நீங்கள் ‘மன்னிப்பு’, ‘சாரி’ என்ற இரண்டு வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை உரையாடலின் போக்கில் உபயோகித்தால் ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல ஆணையிட்டுள்ளார். அதை கேட்கவிரும்புகிறீர்களா?” என்றது அலர் தானியங்கி. அடிப் பாவி!!
“சொல்லித்தொலை” என்றேன்.
“உங்கள் உணர்ச்சிகளில் கோபம் மேலோங்கியுள்ளது. கனிவுடன் கேட்டால் மட்டுமே சொல்லச் சொல்லி உத்தரவு” என்றது. தலைக்கு மேல் ஒரே அடி அடித்து இந்த துன்புறுத்தலை முடித்துவிடலாமா என யோசித்தேன். ஆனால் எதிர் நிற்பது அலரின் பிம்பம், அவள் உடமை. இன்னொன்று அது என்னைவிட பலசாலி. ‘முகம் சுளித்தால் இதை செய்’ என்று எதை ப்ரோக்ராம் செய்தாலோ தெரியவில்லை. பூச்சியைப்போல அதன் முன் சில வினாடிகள் கழித்தபின் கொஞ்சம் சினத்தை தனித்துக்கொண்டு கனிவுடன் பொம்மையை பார்த்து,

“சொல் அன்பே” என்றேன்.

“சக்தி, என் ஸ்நேகிதியுடன் தி கிரேட் பேர் நட்சத்திர கூட்டத்தில் உனக்கு தெரியாத இடத்திற்கு சந்தோஷமாக இருக்க போகிறேன். நான் வரும்வரை உனக்கு உதவியாக இவள். மூன்று நாட்களுக்கு பின் நானே பேசுவேன். அது வரை பை” என்றாள் அலர்.


Series Navigation3 கவிதைகள்ஶ்ருதி கீதை – 4
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *