வெங்கடேசன் நாராயணசாமி
[ஶ்ரீம.பா.10.87.41]
அனந்தா! விண்ணகத் தேவரும் விண்டிலர் நின் உண்மை உருவின்
வீச்சையும் விரிவையும்! வியப்பென் எனில்,
அங்கிங்கெனாதபடி நீக்கமற நீள் விசும்பெலாம் நீயே நிறைந்தும் நீயே முழுதும் நின்னை இயம்ப இயலா
எல்லையில்லா விஶ்வரூபம் நின் ஸுஸ்வரூபம்!
ககன வெளியில் பவனமுந்த பாய்ந்தோடும் தூசித்துகள் போல்
காலச்சகடமுந்த கோடி கோடி அண்ட பிரம்மாண்டம்
கூடி நின்று நின் திருவுந்தியுள் சுற்றிச் சுழன்று செல்லுதே!
நின் பேராளுமையின் எல்லைதான் ஏது பேரருளாளா?
உன் ஸ்வாஸமேயான மறைகளாம் யாமும் உம்மை உள்ளவாறு சொல்லில் வடித்து ஏத்த வல்லீரல்லோம்!
உண்டென்று ஏற்றிப் பணிந்து சாற்றி உரைத்தற்கு
அதிட்டான ஓர் ஆதியாய்,
இல்லையென்று மாற்றி மொழிதற்கு முடிவிலா ஓர் அந்தமாய்,
உம்மைத் தவிர ஏனைய பிற ‘இல்லை’ ‘இல்லை’ என கழித்தொதுக்க எல்லையாய் எஞ்சினாய் எம்பிரானே!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து அழற்றி உன் அடி பணியுமாப் போலே
போற்றி யாம் வந்தோம்! புகலடி எம் முடிசூடிப் புகழ்வோம்!
[ஶ்ரீம.பா.10.87.42]
பகவான் ஶ்ரீ நாராயண மஹரிஷி கூறுகிறார்:
நாரதரே! இங்ஙனம் மறைகள் போற்றிப் பணிந்த
பரப்பிரம்ம தத்துவ மொழிகளைப் பருகியுணர்ந்த
பிரம்ம புதல்வர்கள் அடையத் தக்கதை
அறிந்தடைந்த ஆனந்தத்தில் ஸநந்தனரைப்
போற்றிப் புகழ்ந்தனரே!
[ஶ்ரீம.பா.10.87.43]
படைப்பின் துவக்கத்தில் அனைவர்க்கும் முன்னே தோன்றி
மேலுலகமெலாம் ஸஞ்சரிக்கும் சான்றோர்களாம் ஸனகாதியர்
இங்ஙனம் ஸூத்திர புராண உபநிடத ஸாரமதைப்
பிழிந்தெடுத்துப் பரமாத்ம தத்துவ சாரமே
அனைத்து ஶாஸ்திரங்களின் அறிவென அருளிச் செய்தனரே!
[ஶ்ரீம.பா.10.87.44]
ஸனகாதியர் போல் தாங்களும் பிரம்மதேவரின்
மானஸ மைந்தர்தாமே! தங்களுக்கும் பங்குண்டு
இப்பரமான்ம வித்தையில்!
ஆத்மாநுபூதி தரித்து பரமானந்தமாய்
மூவுலகும் நும் விருப்பம் போல் வலம் வந்து
மானிடரின் வாஸனா ஆசைகள் அறுத்தொழிப்பீர்!
வாஸனா விதைகள் திரும்ப முளைக்காவண்ணம் வறுத்தொழிக்கும் வன்தழல் வாலறிவாமே இவ்வான்ம வித்தை!
[ஶ்ரீம.பா.10.87.45]
ஶ்ரீ ஶுகப் பிரும்மம் கூறுகிறார்:
அரசே! நைஷ்டிகப் பிரம்மசாரியாம் ஶ்ரீ நாரத மஹரிஷி
பகவான் ஶ்ரீ நாராயண மஹரிஷி உபதேசித்த ஆத்ம தத்துவந்தனை மிகச் சிரத்தையுடன் கேட்டு மனதில் நிலைநிறுத்தி
ஆன்மாவை தியானத்து ஆன்மாவாய் ஆனந்தமயமாய் ஆனவர்
பின்வருமாறு கூறலானார்.
[ஶ்ரீம.பா.10.87.46]
ஶ்ரீ நாரத மஹரிஷி கூறுகிறார்:
பகவானே! ஸச்சிதானந்த ஆத்மனே!
அலையாழி அரவணைமேல் அறிதுயில் மாமாயோனே!
மணிவண்ணா! மங்காப் புகழுடை மங்கள மூர்த்தயே!
உலகின் அனைத்து உயிர்களும் உய்யவே
உள்ளங்கவர் திருவவதாரங்கள் பல புரிவீர்!
உத்தமரே ஶ்ரீ கிருஷ்ணா!
தங்கள் செம்மலர்த் தாள் போற்றி! போற்றி!
[ஶ்ரீம.பா.10.87.47]
ஆதி ரிஷியாம் ஶ்ரீமந் நாராயணரையும்
அவரது சீடர்களாம் மஹாத்மாக்களையும் ஶ்ரீ நாரதர்
வணங்கி விடைபெற்று பின் எமது தந்தையாம்
பகவான் ஶ்ரீ வேத வியாஸரின் ஆசிரமம் வந்தடைந்தார்.
[ஶ்ரீம.பா.10.87.48]
பகவான் ஶ்ரீ வேத வியாஸரால் உபசரிக்கப் பெற்று
அவர் அளித்த ஆசனமதில் அமர்ந்த ஶ்ரீ நாரதர்,
ஶ்ரீ நாராயண மஹரிஷியின் திருவாக்கிலிருந்து
தாம் கேட்டதனைத்தையும் ஶ்ரீ வியாஸ பகவானிடம்
விளக்கிக் கூறினார்.
[ஶ்ரீம.பா.10.87.49]
அரசே! மன வாக்கு ஏகா குணங்களற்ற பரப்பிரம்மமதை
மறைச் சொற்கள் எவ்வாறு வர்ணிக்க
இயலுமென்ற தங்கள் வினாவிற்கு
விடையாய் ஶ்ரீ ஸநந்தனர் அருளிய திருவாய்மொழியே
இச்சுருதி கீதை எனும் மறைகளின் துதி!
[ஶ்ரீம.பா.10.87.50]
அலையாழி அரவணைமேல் மஹாயோக அறிதுயில் பள்ளியான்
ஆதிகேஶவன் என்னினல்லான் ஒப்புடையனல்லன் ஓருருவனல்லன் ஓரருவனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓருவமனில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே!
பரீக்ஷித் மன்னா! அண்ட சராசரம் படைத்தும் காத்தும் கரந்தும் அழித்தும் அளித்தும் விளையாடி
ஆதியோடு அந்தமாய் அனைத்துமாகி நின்று
அனைத்தையும் காண்பானாய் காணும் கண்ணாய்க் காட்சியாய் காட்சிப் பொருள்களாய் அருவமாய் உருவமாய் அருவுருவமாய் அனாதியாய் ஞான அஞ்ஞானமுமாய் ஆத்மாவாய் ஆரொளியாய் இருளாய் மருளாய் மாயையாய் முனிவராய் தேவராய் மனிதராய் வல்லஸுரராய் பேயாய் பூதங்களாய் புள்ளாய் பாம்பாய் விலங்காய் புழுவாய்ப் புல்லாய் பூண்டாய் தாவர ஜங்கமமாய் யாவற்றினுள்ளும் நுழைந்து அங்கிங்கெனாதபடி கணுக்கணுவிலெல்லாம்
நீக்கமற நிறைந்து அணுவினுள் அணுவாய்ப் பெரிதினும் பெரிதாய்
அறிவினுள் அறிவாய் அரிதினும் அரிதாய்
ஐம்பூத உடலாய் அவ்வுடலைப் பேணும் உயிராய்
உயிர்களின் உணர்வாய் உணர்வின் ஓங்கார உண்மையாய்
அன்பின் அமுத இன்ப ஊற்றாய் அரியெனும் அம்மானாய் எரியெனும் இயமனாய் எல்லாவற்றின்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாரே!
ஒவ்வோர் உயிரும் அரியின் ஒரு திவலையே!
ஒவ்வோர் திவலையும் ஒரு தவசியே!
இவ்வுண்மைத் தத்துவம் உணர்ந்த ஜீவன் மேல்
இறையருள் சொறிந்து அதனாலவன் இறையடி சரண் புகுந்து
மாயை அறுத்து தன் உண்மை
இயல்பாம் ஈஶனடி இணைவானே!
ஆழ்துயிலில் ஐம்பூத ஆக்கமாம் உடலுமில்லை உலகமுமில்லை
மாய மனமுமில்லை மகேஶனுமில்லை!
அதுபோல் அனவரதம் அண்ணலாம் அரியைச் சிந்தித்திருப்போன்
அறியான் அகிலமும் அதிலுள்ள பொருட்களும்!
அரியே முத்தித் திருமேனியனாம்!
அரியே முத்தி நல்குமெளிய பத்தி வழியாம்!
அரியே முத்தி விழை உயர் பத்தராம்!
அரியே அழிப்பான் பிறப்பிறப்பெனும் சுழற்சி!
அரியே அவித்தை அறுப்பான் அபயமளிப்பான்!
அரியே இடைவிடாத் தியானமும்!
அரியே தியானிப்போனும்!
அரியே தியானப் பொருளும்!
அரியே அனைத்தும்!
அரி அரி அரி அரி அரி என்றே அனுதினமும் தொழுதெழுவோமே!