வசந்ததீபன்
(1)
உதிர்ந்த இலை
உலர்ந்த கனவு
உடைந்து சிதைகின்றன
கல் தீபத்தை ஏற்ற முனைந்தேன்
துளிர்த்த ஒளி
சட்டென்று காணாமல்போகிறது
காற்றை தின்றிட துடிக்கிறேன்
பேருந்து புறப்பட்டு விடும்
நீர்ததும்பும்
விழிகளோடு நினறிருக்கிறாய்
நிரப்ப முடியாத இடைவெளிகள் பெருக்கெடுக்கிறது
ஆதியில் வார்த்தை இருந்தது
அப்புறம் காணாமல் போனது
மீண்டும் ஆடுகளின் பேச்சாய் மீண்டது
பாடல்களின் வரிகளில்
புதைந்து போன
கவிதையே…!
இசையின் அலைகளுக்களுக்குள் கரைந்து போனதேன்…?
பாம்பு நல்லதாம்
கொன்றவர்கள் கணக்கில்லை
அது இறந்ததற்கு வருத்தப்படணுமா ?
துப்பாக்கியும் குண்டாந்தடிகளும் உங்கள் கையில்..
அதிகாரமும் அராஜகமும் உங்கள் காலில்..
வீரச்சமருக்கான தின்மை எங்கள் இதயத்தில்…
போதும் மெளனம்
மனம் திடுக்கிடுகிறது
வாய் திறந்தால் யாவும் காணாமலாகிடுமா?
வலிகளை விழுங்கிக் கொள்கிறேன்
வேதனைகளைக் அருந்திக் கொள்கிறேன்
வாழும் வரை வருவதெல்லாம் வரட்டும்.
வீதி விளக்குகளை
அடித்து நொறுக்குகிறார்கள்
இருட்டுக்குள் பதுங்குகிறார்கள்
ரகசியமான காரியங்கள் இப்படித் தான் நடக்கின்றன
புத்தகங்கள் உரையாட அழைக்கின்றன
வயிற்றுப் பிழைப்பிற்காய் நான் அலைகிறேன்
தயவுசெய்து யாராவது அவைகளை சமாதானப்படுத்துங்கள்.

பறத்தலில் பறவை
பார்த்தலில் நான்
காலத்துள் நான் மற்றும் பறவை
நேயா உன் தொடுதல்கள் சொஸ்தப்படுத்தின
நரகக்கனல் தணிந்து போனது
பூவின் ஸ்பரிசத்தில் அமைதியுறுகிறேன்
மியாவ் சத்தம்
இரவு நடுங்குகிறது
எனக்கு ஏன் வேர்த்துக் கொட்டுகிறது ?
கனவுகளின் பெரு வெளி
காலத்தின் உடலெங்கும் படர்கிறது
கசிந்து உருகும் உயிரின் நிழலாக அசைந்தாடுகிறது
ஜன்னலை மூடி விட்டாய்
கண்கள் தவிக்கின்றன
பற்றி எரிவதற்குள் திறந்துவிடு
சப்பளிஞ்சு கிடக்கிறது வெளிநாட்டுக்கார்
உள்ளே இரத்தக் கறை
சாவு விட்டுச் சென்ற தடயம்.

கட்டிடங்கள் பயமுறுத்துகின்றன
அரக்கர்களின் விசுரூபமாய் எதிர்படுகின்றன
உலகம் கட்டிடங்களினால் உருண்டோடி விடுமோ?
செய்த கொலைகளை மறக்கடித்தது
அடித்த கொள்ளைகளை மறைத்தது
மரணம் செய்த பாவங்களை மூடும்
சினம் கொள்
சவமல்ல நீ
தீமை கொல் வெல்
நடைமுறை அடையாளம் காட்டிவிட்டது
அம்பலப் பட்டுப் போனீர்கள்
உங்கள் முகத்திரை கிழிந்தது
சுதந்திர நாடு
சோத்துக்கு கேடு
வெறுங்கைய நக்கிக்கிட்டு
சுதந்திரத்தப் பாடு
கோமாளி கூத்தாடுகிறான்
கனவுகள் தின்று பசியாறுகிறான்
ஆனந்த சுதந்திரம் அடைந்தோமென பள்ளு பாடுகிறான்
இருட்டு தேசம்
குருட்டு அதிகாரம்
கறுப்பு சுதந்திரம்
சுதந்திர பறவை நான்
பசியோடு திரிகிறேன்
உயிர் பயம் என்னைத் துரத்துகிறது
புலி முன்னால் நிற்கிறது
புலியைக் கொல்ல வேண்டும்
இல்லையேல் இரையாவேன்இரையாவேன்
புலி முன்னால் நிற்கிறது
புலியைக் கொல்ல வேண்டும்
இல்லையேல் இரையாவேன்.

வசந்ததீபன்