ஆர் வத்ஸலா
கவிதைப் பட்டறையில் கலந்து கொள்ள
தலையை, மன்னிக்கவும், பெயர் கொடுத்து விட்டேன்,
பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததாலும்
அதில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் எனத் தோன்றியதாலும்
அச்சத்துடன்
போலி வீரப் புன்னகையுடன்
மெய்நிகர் கூட்டத்தில் நுழைந்தேன்
பிரபல கவிஞர்களின் கவிதைகளை வாசித்தார்
பட்டறை நடத்துபவர்
அவர் முகம் ஒரு கோணத்தில்
சதா பிரம்புடன் நிற்கும்
(அதை அவர் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும்)
எனது இரண்டாம் வகுப்பாசிரியர் கிட்டு வாத்தியாரை நினைவூட்ட
என் காதும் மனதும்
ஒருங்கே மந்தமாகின
சன்னல் வெளியே தூறத் தொடங்கியது
கை நடுக்கத்தை சமாளிக்க திறன்பேசியில்
மழையைப் பற்றி ஒரு கவிதை தட்டச்சு செய்து முடிக்கையில்
பட்டறைத் தலைவர் எல்லோரையும்
“மழை” எனும் தலைப்பில் கவிதை எழுதி வாசிக்கச் சொன்னார்
எனது முறை வந்ததும் கிட்டு வாத்தியார் சாயல்
அவர் முகத்தில் அதிகரிக்க
நான் அவசரமாக என் கவிதையை வாசித்து விட்டு
உடனுக்குடன்
மெய்நிகர் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டேன்