4 கவிதைகள்

author
1 minute, 3 seconds Read
This entry is part 4 of 6 in the series 23 மார்ச் 2025

வசந்ததீபன்

(1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்
____________________________________________

வழிபாடுகள் இடர்பாடுகள்
தொடருது  துயர்  பாடுகள்
ஆறு  கடந்து  போகிறது
காற்று  கடந்து  போகிறது
காலமும்  கடந்து  போகிறது
வாடிய  மலர்கள்  இயற்கைக்கு  சொந்தம்
வாடாத  மலர்கள்  மனிதனுக்கு  சொந்தம்
வாடியும்  வாடாமலும்    பூத்தபடி  மலர்கள்
பாதைகள்  நிறைய  போகின்றன
ஊருக்குள்  போகும்   பாதையை  கண்டுபிடிக்க  முடியவில்லை
பாதைகளுக்கு  முன்னால்  நின்றிருக்கிறேன்
நெருப்பை  தொட்டுப்  பார்த்தான்
நெருப்பாயிருந்தது
நெருப்பு  நெருப்பாய்  இல்லாமல்  வேறு  எதுவாக  இருக்கும்இருக்கும்
பெருங்கதையாடல்
பெருந்திணைப்பாடல்
பெருஞ்சூறையாய்  வீசுகிறது
இழப்பதற்கு  எதுவுமில்லை
பெறுவதற்கு  ஏராளம்  உள்ளது
அடிமைச்  சங்கிலிகளை  அறுத்தெறிவோம்.
மழை  பொழியட்டும்
மனங்களெங்கும்
மானுடம்  செழிக்கட்டும்
விண்மீன்களை  பார்க்கிறேன்
தேவதைகள்  கண்கள்  சிமிட்டுகிறார்கள்
சாமரம்  வீசுகிறது காற்று
மவுனங்களுக்கும்
வார்த்தைகளுக்கும்
இடையே  தீராத  உரையாடல்கள்.

🦀

(2) இணக்கமற்ற பயணம்

___________________________________

எய்தவன்  மனதில்  இச்சை

அம்பின்  நோக்கம்  எதுவுமில்லை

அடிபடுபவையின்  உயிரில்  மரணவலி

கனவென்று  எதுவும்  கிடையாது

கனலும்  நினைவுகள்  உண்டு

பேரிரைச்சல்  எழுப்பும்  

காற்றாய்  திரிய  ஆசை

திருடனைப்  போல  வரும்

சூறைக்  காற்றாய்  அள்ளிப்போகும்

மரணத்தின்  கால்களை  அறிந்தவரில்லை

சிலையின்  அருகில்  போனேன்

சிலிர்ப்பாயிருந்தது

சிலைக்கும்  இருந்திருக்குமாவெனத்  தெரியவில்லை

உன்  மிடறுக்குள்  நான்

என்  மிடறுக்குள்  நீ

திகட்டாது  காதல்

புழுவாய்  நெளியாதே

பாம்பாய்  சீறு

வெயில்  உன்னை  வருத்தாது.

நீ  பூ  நான்  வாசம்

நான்  பூ  நீ  வாசம்

நேசம்  நீ  நான்  உன் வசம்

கண்கள்  பேசுகின்றன

இதயம்  மெளனிக்கிறது

என்னுள்  காதலெனும் பெருங்கடல்

கனவுகள்  என்னைத்  தின்கின்றன

நான்  மெளனமாயிருக்கிறேன்

என்  மெளனம்  அமைதியில்லை

படகை  செலுத்துகிறேன்

மனது  உடன்  வர  மறுக்கிறது

கூடு  பிரிந்த  பறவையாய்  

நதியோடு  போகிறேன்

நட்சத்திரங்கள்  அழைக்கின்றன

நானும்  ஒரு  நட்சத்திரமாக  ஆசை

பால்  வெளியில்  எங்கோ  எவரறியாமல்  ஜொலிக்கணும்

இருளுக்குள்  ஒளியிருக்கும்

ஒளிக்குள்  இருளிருக்கும்

இரண்டுக்கும்  நடுவே  

மனித  வாழ்விருக்கும்

இலைகள்  உதிர்கின்றன

தனிமை  இசைக்கிறது

காற்று  நாற்காலியில்  

ஓய்வு  கொள்கிறது

வசந்தம்  வருகிறது

பூக்கள்  பாடுகின்றன

கூண்டுக்குள்  பறவை  அழுகிறது

ஜனனம்  போகிறது

மரணம்  வருகிறது

திகைப்பாய்  உலகம்

நினைத்துப்  பார்க்கிறேன்

துக்கம்  ஓடி  வருகிறது

மனசை  படாரென்று  மூடுகிறேன்.

🦀

(3) தீராத புத்தகப் பிரதி

_______________________________

உன் கனவுகள்  உன்  வாழ்வு

இணையாத  தண்டவாளங்கள்

சரக்கு  ரயிலாக  நீ

நீ  என்ன  நினைக்கிறாய்  ?

நீ  என்ன  சொல்ல  விரும்புகிறாய்  ?

உனது  மொழியில்  உனது  வார்த்தையில்  எழுது

ஒரு  வார்த்தைக்கு  வன்மம்

தீயாய்  சுட எத்தனிக்கிறாய்

எம்  வாழ்வினை  இத்தனைக்காலம்  சிதைக்கும்  உன்னை  விட்டு  விடமாட்டோம்

இதயங்களை  கனவுகளால்  நிரப்புவோம்

இன்மையின்  ரணங்களை 

கவிதைகளால்  மருந்திடுவோம்

கனிகள்  கிட்டும்  காலம்  வரும்

கலங்கிய  குளத்தில்  மீன்

கரையேற  வழியில்லை

உயிர்  வாழ  வகையில்லை

கடவுளைத்  தேடுங்கள்

தடுக்கவில்லை

கடவுளாய்  நடிக்காதீர்கள்

ரோசக்காரர்கள்  போராடுகிறார்கள்

கருங்காலிகள்  கால்  வாருகிறார்கள்

போராட்டங்கள்  பிசுபிசுத்து  விடுகின்றன

எந்த  மனிதனும்  துன்பத்தை  விரும்புவதில்லை

எந்த  மனிதனும்  துன்பத்தை  நேசிப்பதில்லை

தஸ்தாவெஸ்கி  போன்ற  மனிதர்கள்  வாழ்வை  நேசிப்பதில்லை…நேசிப்பதில்லை… 

என்  எழுத்துக்கள்  என்னைச்  சொல்லும்

என்  வார்த்தைகள்  என்னை  வரைந்து  காட்டும்

நான்  சொல்ல  

இன்னும்  நிறைய  இருக்கின்றன. 

🦀

4. காடு

____________________

தலை சிலுப்பி உடல் அசைக்கும் கருங்குருவி

மரக்கிளைகள் நீர் சொட்டின

நதியோட்டம் வீரியம் நிறைந்திருந்தது

காட்டுப் புஷ்பங்கள் சிரிக்கின்றன

பிச்சைப் பாத்திரம் ஏந்திய புத்தன்

குதிரை ஓடிய பாதைகளில் குருதி வாசனை

வறுமை ஆயுதம் தரித்திருக்கிறது

தரித்திரம் மரணத்தை ஏந்தியிருக்கிறது

மடியிலே நெருப்பை வைத்திருக்கிறது உயிர்

உணவு பாத்திரத்தில் மலர்கள் பூத்திருந்தன

நிசப்தம் கிளையோடின

ஈரக் காற்றில் கொக்குகள் நடுங்கின

படகோட்டி துடுப்பை அசைக்கிறான்

கடந்த காலம் பெருஞ்சீற்றமாக கடக்கிறது

நதியின் வேட்கை ததும்புகிறது

இலைகளற்ற மரம்

பசியோடு திரியும் மீன்கொத்தி

வெயில் ரெளத்திரம் கொண்டுள்ளது

வெள்ளைச் சேலை மலையில் தொங்குகிறது

அந்திச் சூரியன் பல் வண்ணங்களை நெய்கிறது

ஓவியமாகிறது நீர் வீழ்ச்சி

காட்டுத் தீ பெருக்கெடுத்துப் பாய்கிறது

காற்று பரபரக்கிறது

காடை முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன

கண்ணீரில் கரையும் உடல்கள் காற்றில் மறைகிறது கற்பூரம் கானல் நீரோ காதல்

இதயம் பூக்கிறது

மேனியெங்கும் வண்ண பூக்கள்

அன்பு சகல பாவங்களை மூடும்

இருளுக்குள் பயணம்

நெஞ்சுக்குள் ஊறும் பயம்

கால்களிலிருந்து வேர்கள் கிளம்புகின்றன

மதுக் கோப்பைகள் நிரம்பி வழிகின்றன

காலம் மண்டையோடுகள் பூண்டு தாண்டவமாடுகிறது

மரண உற்சவம்

செத்துக் கொண்டிருக்கிறது மரம்

பசியோடு குஞ்சுகள்

மெளனமாய் உருகும் மரங்கொத்தி

சாலையில் யாவும் கடந்தசெல்கின்றன

காற்றாய் போயின உறவுகள்_நட்புகள்

நானும் ஒரு நாள்.

Series Navigationவீடும் வெளியும்I Am  an Atheist
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *