ஆபிரிக்காவின் மாறா நதிக்கரையில்…

This entry is part 1 of 9 in the series 30 மார்ச் 2025

குரு அரவிந்தன்

இருண்ட கண்டம் என்று முன்பு அழைக்கப்பட்ட ஆபிரிக்காவின் கெனியா நாடு, சுமார் 224,081 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. சுமார் 245 மைல் நீளமான மாறா என்றதொரு நதி தெற்கு நோக்கிச் சென்று, விக்ரோறியா ஏரியில் சங்கமிக்கின்றது. இந்த ஆற்றை ‘மரண ஆறு’ என்று உள்ளுர் மக்கள் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த ஆற்றில் உயிர்ப்பலி எடுக்கும் முதலைகளும், நீர்யானைகளும் நிறைந்திருப்பதுதான்.

இந்த ஆற்றின் கரைகளில்தான் மாசிமாறா தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. இங்கே உள்ள ஆதிப்பழங்குடி மக்கள் ஆபிரிக்காவின் நீண்ட நதியான நைல்நதிக் கரையோரங்களில் இருந்து கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். மந்தை வளர்ப்பதே இவர்களின் தொழில் என்பதால் சவானா புல்வெளிகளில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இப்பொழுதும் நாடோடிகள் போல வாழ்கிறார்கள்.

பற்றைக்காடுகளையும், புல்வெளிகளையும் கொண்ட இந்த இடங்கள் சிங்கம், சிறுத்தை, லெப்பேட், கழுதைப்புலிகள், நரிகள் போன்ற கொடிய மிருகங்களின் வாழ்விடமாகவும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில்தான் காலாகாலமாய் பழங்குடி மக்களான மாசிமாறா குடிமக்கள் வாழ்கிறார்கள். மிருகங்கள் விரும்பி உண்ணும், இந்த மண்ணில் வளரும், ‘ரெட்ஓட்ஸ்’ என்ற புல்வகைகள் சுமார் நன்கைந்தடி உயரமாக வளரக்கூடியவை என்பதால், இரைதேடி வரும் மிருகங்கள் இங்கே வந்து ஒளித்திருப்பதற்கு வசதியாக இருக்கின்றன.

இயற்கைச் சூழலில் மிருகங்களை பார்ப்பதற்காக மாசிமாறா என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். இது தன்ஸானியா நாட்டின் எல்லையில் மாசிமாறா ஆற்றங்கரையில் 585 சதுரமைல் பரப்பளவில் இருக்கின்றது.

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காகப் பற்றைக் காடுகளுக்கு நடுவே ‘காம்ப்’ என்று சொல்லப்படுகின்ற முகாம்களை மாறா நதிக்கரையில் அமைத்திருக்கிறார்கள். குஜாராத் வம்சாவழியைச் சேர்ந்த இந்தியருக்குச் சொந்தமான முகாம் என்பதால் எங்களுக்கு ஏற்ற இந்திய உணவுகள் தினமும் கிடைத்தன. தினமும் பிக்கப் வண்டியில் சென்று மிருகங்களை இயற்கைச் சூழலில் பார்க்கக் கூடிய வசதிகள் இருந்ததால், தினமும் சென்று மிருகங்களின் அன்றாட வாழ்க்கையை அவதானிக்க முடிந்தது.

யூன் மாதம் தொடக்கம் ஒக்ரோபர் மாதம் வரை அருகே உள்ள தன்ஸானியா நாட்டின் எல்லையில் உள்ள மாறா ஆற்றைக் கடந்து இலட்சக் கணக்கான மிருகங்கள் கெனியாப் பகுதிக்கு வருகின்றன. இதற்குக் காரணம் இப்பகுதியில் உள்ள புற்கள் இக்காலத்தில் பசுமையாக இருப்பதேயாகும். ஓக்ரோபர் மாதம் இவை திரும்பிச் சென்று விடுகின்றன.

இடம்பெயரும் மிருகங்களில் முக்கியமாக எருமைகள், வரிக்குதிரைகள், பல வகையான மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், காண்டாமிருகங்கள், யானைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்படி இந்த மிருங்கள் இடம் பெயரும் போது, இன்னுமொரு அதிசயம் நடக்கிறது. அதாவது இந்த மிருகங்களை இரையாக்குவதற்காக இவற்றுக்குப் பின்னால், சிங்கங்கள், சிறுத்தைகள், லெப்பேட்கள்;, கழுதைப்புலிகள், காட்டுநாய்கள், நரிகள், கழுகுகள் போன்றவையும் தன்ஸானியா பகுதியில் இருந்து பின் தொடர்ந்து வருகின்றன. இந்த மிருகங்கள் எல்லாம் மாறா ஆற்றைக் கடந்துதான் இந்தப் பக்கம் வரவேண்டும், எனவே மாறா ஆற்றங்கரையில் இவற்றை வேட்டையாடவென்றே இந்தச் சந்தர்ப்பத்திற்காக முதலைகளும் பசியோடு அங்கே காத்திருக்கின்றன.

பிக்கப்வண்டிகள் தினமும் சுற்றுலாப் பயணிகளை இப்படிப் பற்றைக் காடுகளுக்குக் கொண்டு செல்கின்றன. அவ்வப்போது வனபாதுகாப்பிற்காகச் செயற்படும் ‘ரேஞ்சேஸ்’ என்று சொல்லப்படுகின்ற அதிகாரிகளைத் துப்பாக்கிகளோடு சந்திக்க வேண்டி வரும்.

ஒரு நாள் மாசிமாறா பழங்குடியினரின் கிராமத்திற்குச் சென்று அவர்களையும் சந்தித்து உரையாடினேன். போகும்போது பயமாகத்தான் இருந்தது, தனி ஒருவனாக ஆண் சிங்கத்தை எதிர்த்;து ஈட்டியால் கொல்லக்கூடியவர்கள், உயிரோடு உள்ள மாட்டின் கழுத்தில் இருந்து இரத்தத்தை அப்படியே உறுஞ்சிக் குடிப்பவர்கள். இந்தப் பழங்குடி ஆண்கள் ஏழு திருமணங்கள் வரை செய்யக்கூடிய சமூக அமைப்பைக் கொண்டவர்கள். அங்கே செல்வது பாதுகாப்பானது அல்ல என்று வண்டியோட்டி முதலில் மறுத்துவிட்டார். நான்தான் வழிதெரிந்த அவரை விடாப்பிடியாக அங்கு அழைத்துச் சென்றேன்.

புல்வெளிகளையும் பற்றைக்காடுகளையும் கடந்து, மாறா நதியையும் கடந்து மறு கரையில் இருந்த அவர்களின் கிராமத்தைச் சென்றடைந்தோம். சத்தம் போட்டாலும் உதவிக்கு வருவதற்கு யாருமில்லை. அவர்களின் கிராமத்து வாசலில், சற்றுத் தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு காத்திருந்தோம். வண்டியோட்டி வண்டியைவிட்டு இறங்கவோ, என்னுடன் வரவோ மறுத்து விட்டார். அவர்களின் கோட்டை போன்ற பாதுகாப்பு முள்ளு வேலிக்கு அப்பால் சிலர் நடமாடுவது தெரிந்தது. வாசலில் இருவர் ஈட்டியுடன் காவல் இருந்தார்கள். சற்று நேரத்தால் மூன்று ஆண்கள் வாசலைக் கடந்து வெளியே வந்தார்கள். அவர்களின் கையில் ஈட்டியும், இடையில் குறுவாளும் தொங்கிக் கொண்டிருந்தன. உடம்பைச் சுற்றிக் கடும் சிவப்பு நிறத்திலான லுங்கி போன்ற ஆடை, மற்றும் மணிமாலைகள் அணிந்திருந்தார்கள். சிங்கத்தைத் தனித்து நின்று கொல்லக்கூடியவர்கள் என்று வண்டியோட்டி சொன்னது, அவர்கள் கையில் இருந்த ஈட்டியைப் பார்த்ததும் நினைவில் வர, மனசில் ஒருவித பயம் பிடித்துக் கொண்டது. பாதுகாப்புக் காரணமாக இருவர் சற்றுத் தூரத்தில் ஈட்டியுடன் தயாராக நின்று கொள்ள, ஒருவர் மட்டும் என்னை நோக்கி வந்தார். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது, அசட்டுத் துணிவில் வந்துவிட்டோமோ என்று பதட்டமாக இருந்தது.

அவர் அருகே வந்தபோது, நானே முந்திக் கொள்ள நினைத்து, வந்தவரை நோக்கிக் கைகூப்பி ‘ஜம்போ, வணக்கம்’ என்று தமிழில் சொன்னேன். அவருக்குப் புரியாத மொழி என்று தெரியும், ஆனாலும் ஏதாவது தொடர்பாடலை உருவாக்க வேண்டும் என்பதால், நான் அந்தமாதிரி நடந்து கொண்டேன்.

பதிலுக்கு அவர் ‘சோபா’ என்று மாசாய் மொழியில் சொல்லிக் குனிந்து வணங்கித் தன்னைக் கிராமத் தலைவர் என்றும், பெயர் ‘எரிக்’ என்றும் அறிமுகம் செய்தார். கெனியாவில் யாரைச் சந்தித்தாலும் முதலில் ‘ஜம்போ’ என்றுதான் சொல்வார்கள், ‘ஹலோ’ என்று பொருள்படும். கிராமத் தலைவர் என்றால் பொதுவாக வயது முதிர்ந்தவராக இருப்பார் என எதிர்பார்த்தேன், ஆனால் இவர் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞர் போலத் தெரிந்தார்.

நான் கனடாவில் இருந்து வருவதாக என்னை அறிமுகம் செய்தேன். ‘கனடிய நண்பரை எங்கள் கிராமத்திற்கு வரவேற்கிறேன்’ என்று கைகுலுக்கினார். அவர் ஆங்கிலத்தில் உரையாடியதும் நான் அசந்துபோனேன். எப்படி ஆங்கிலம் தெரியும் என்று கேட்டேன். கனடாவின் உதவியுடன் அங்கே ஒரு ஆங்கில மிசன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாகவும், கிராமத் தலைவரான தனது தந்தை தன்னை அங்கு  அனுப்பி ஆங்கில மொழியைக் கற்க வைத்ததாகவும், அதனால் கனேடியர்களுக்கு நன்றி சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளே விடுவார்களோ இல்லையோ என்று தெரியாத நிலையில், அவர்களின் குடியிருப்பைப் பார்க்க முடியுமா என்று அவரிடம் கேட்டேன். ‘நீங்கள் எங்கள் விருந்தாளி, வாருங்கள்’ என்று வாசலில் நின்ற காவலர்களிடம் அவர் ஏதோ சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அந்தக் குடியிருப்பில் 47 குடிசைகளும், குழந்தைகள் உட்பட 269 பேரும் இருப்பதாகவும் சொன்னார். முள்ளுவேலியைக் கடந்து உள்ளே சென்றோம், அங்கே நீள்சதுர மண்குடிசைகள் சுற்றிவர இருந்தன. உள்ளே இருட்டாக இருந்தது, எனது செல்போன் வெளிச்சத்தில் உள்ளே சென்று பார்த்தேன். ஒரு மூலையில் அடுப்பு, மறுகரையில் பாய் விரித்திருந்தது, இருப்பதற்குச் சில பலகைக் கட்டைகள், இரண்டு மூன்று மண் பாத்திரங்கள் அவ்வளவுதான். இரவிலே சிங்கம், சிறுத்தை போன்றவை உள்ளே வராமல் தடுப்பதற்காக, சுவரில் சிறிய துவாரம் மட்டும் இருந்தது.

வெளியே வந்ததும் எரிக் தனது மொழியில் ஏதோ சொல்லச் சற்று நேரத்தால் சில பெண்கள் தங்கள் குடிசைகளில் இருந்து வெளியே வந்தார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் மொழியில் படிக்கொண்டே குழு நடனம் ஆடினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஆண்கள் நடனம் ஆடினார்கள். ஆண்கள் நடனம் ஆடும்போது, உயரத் துள்ளித் துள்ளி ஆடினார்கள். ஏன் என்று எரிக்கிடம் கேட்டபோது, எவ்வளவு உயரம் துள்ளுகிறார்களோ அந்தளவிற்குப் பெண்களால் அவர்கள் கவரப்படுவார்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் தந்தார்.

அதன்பின் காய்ந்த புல்லையும் சாணியையும் வைத்து, இரண்டு குச்சிளை உராசி நெருப்பு மூட்டிக் காட்டினார்கள். அதைப் பார்த்ததும் ஆதிகால மனிதரின் வாழ்க்கைமுறை ஞாபகம் வந்தது. ‘இங்கே உள்ள சிங்கங்களுக்கு உங்களைக் கண்டால் பயமாமே’ என்று கேட்டேன், அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, ‘ஆமாம், ஆனால் இப்போது அரசாங்கம் சிங்கங்களைக் கொல்ல எங்களை அனுமதிப்பதில்லை’ என்றார்.

இவர்களது சமூகத்தில் வயது வந்ததும் ஆண்களும் பெண்களும் சுண்ணத்துச் செய்து கொள்கிறார்கள். ஒரு பெண் திருமணம் செய்ய வேண்டுமானால், தனக்காக ஒரு குடிசையைத் தனித்து நின்று அவரே கட்ட வேண்டும் என்பது அவர்களின் வழக்கத்தில் ஒன்றாக இருக்கின்றது. யானைச் சாணகம், கறையான் புற்று மண், குச்சிகள், மற்றும் புற்களைக் கொண்டு குடிசை அமைக்கிறார்கள். கொடிய மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக, நடுவே உள்ள மைதானத்தில் மந்தைகளை இரவிலே பாதுகாப்பாக விடுகிறார்கள். அங்கே மிருகங்கள் வந்து மந்தைகளைத் தாக்கினால் அதற்கு அரசு நட்டஈடு கொடுக்கின்றது. பகலிலே மந்தைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போகிறார்கள், மேய்ச்சல்தரையில் தாக்கப்பட்டால் அதற்கு நட்டஈடு கிடையாது.

விசேட நிகழ்வுகளின் போது, அல்லது யாராவது நோய்வாய்ப் பட்டிருந்தால், மாட்டின் கழுத்தில் அம்பால் குறிவைத்து இரத்தத்தை எடுத்துப் பாலுடன் கலந்து பரிமாறுவதாக அவர் குறிப்பிட்டார். பால், இரத்தம், இறைச்சி, காய்கறிகள், சோளம் போன்றவைதான் அவர்களின் உணவாக இருக்கின்றது.

மாசிமாறா புல்வெளியில் சுதந்திரமாக புல்மேயும் மிருகங்களிடையே இன்னும் ஒரு விடயத்தைக் கவனித்தேன். மிருகங்களிடையே ஆண்கள் கூட்டம் தனியாகவும், பெண்கள் கூட்டம் தனியாகவும், இரண்டும் கலந்த கூட்டமாகவும் மிருகங்கள் இருப்பதை அவதானித்தேன். ஆண்களில் சண்டை போட்டு யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடன் இந்தப் பெண்கள் கூட்டம் சேர்ந்து கொள்கிறது. அதுவரை தனித்தனிக் கூட்டங்களாக அவை இருக்கின்றன. சில கூட்டங்களில் குறிப்பாகப் பத்துப் பதினைந்து பெண்மான்களுக்கு நடுவே ஒரு ஆண் மானைக் காணமுடிந்தது. அதுபோலத்தான் ஏழு எட்டுப் பெண் சிங்கங்களுக்கு நடுவே ஒரு ஆண் சிங்கத்தைக் காணமுடிந்தது. சிங்கம், சிறுத்தை, லெப்பேட், கழுதைப்புலிகள் போன்றவை இந்த மிருகங்களை எப்படி வேட்டையாடுகின்றன என்பதையும் மிக அருகே சென்று, பிக்கப் வண்டியில் இருந்தபடியே பார்க்க முடிந்தது. சில படங்களும் அப்போது எடுத்திருந்தேன்.

Series Navigationசாளரத்தின் சற்றையபொழுதில்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *