ஜெயானந்தன்
ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி,
ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின்,
காம சொருபத்தை காட்டும், ஒரு லேபிள்.
தி.ஜா.வும் இந்த லேபிளுக்குள் அடைப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுதான், இதை எழுதியிருக்க முடியும். ஒருவித, உடல் சார்ந்த எதிர்பார்ப்பு எப்பவும், தி.ஜா..எழுத்தில் வெளியே வர துடிக்கும் நப்பாசையின் உணர்ச்சிக்குரலகவே கேட்கின்றது .
ஆண் தேடும் பெண், கடைசியில் அடைவது பெண்ணைத்தானே.
இதில், காமம் ஒருவித இலக்கிய நயத்தோடு நடந்து, ஒரே பெண்ணை அடைவது என்பதுதான் தி.ஜா.,வின்
தார்மீக பொறுப்பாக முடிகின்றது.
அதே நேரத்தில், பல ஆண்கள், பல பெண்கள் என்ற polygamy ஆட்டத்தையும் ஆடுகின்றார், இந்த இலக்கிய தாயக்கட்டை மன்னன்.
வாழ்க்கையை கட்டங்களில் அடுக்கி முறையாக வாழ்ந்த நாட்களில் பிறந்து, வளர்ந்த தி.ஜா.,விற்கு, டெல்லி வாழ்க்கையின் கலாச்சார சீரழிவும், சுதந்திரத்திற்கு பின், இந்திய உயர்மட்ட வாழ்வின் பித்தலாட்ட நாகரீக மோஸ்தரும் இவரது எண்ண ஓட்டத்தை புரட்டிப்போட்டதாக தெரிகின்றது.
அலங்காரத்தம்மாள் ஒரு ஊறுகாய்.
ஒரு ஆண், ஒரு பெண்ணை அடைய, எடுத்துக்கொண்ட, வாழ்வின் பயணமாகவே மோகமுள்ளை நகர்த்தி செல்கின்றார்.
யமுனாவை, பெண் பார்க்க வருபவர்களை கேவலமாகவும், நையாண்டித்தனமாகவும், யமுனாவிடமே பேசி, பாபு தனது எண்ணத்தில் ஓடும் அவள் மீதான காதல் நதியின் அலையை, கர்நாடக சங்கீத மொழியில் சொல்வது, தி.ஜாவின் சிறப்பான பார்வை.
அன்றைய தஞ்சை மராட்டிய ஆட்சிக்காலத்தில், பிராமண மிராசுதார்கள், நலிந்துப்போன, அழகில் கலைகளிலும் மிளிர்ந்த மராட்டிய பெண்களை இரண்டாம் தாரமாக வைத்துக்கொண்டு, குடும்பம் நடத்தியுள்ளனர். இது உண்மையான நடப்பியல்தான். அதே நேரத்தில், அந்த குடும்பத்தையும் கடைசிவரை காப்பாற்றியும் உள்ளனர்.
இந்த சரித்திர நிகழ்வை, ஒரு நாவலுக்குள் கொண்டுவந்து, அதனை கொச்சைப்படுத்தாமல், நாவலின் அழகியலை, சிதைத்து விடாமல், நாவல் சிற்பி கையாண்டவிதம், தஞ்சை கோயில்களில் காணப்படும் சிற்பங்களாக தெரிகின்றது.
அதே நேரத்தில், அன்றைய கட்டுப்பெட்டியான, பிராமண கலாச்சாரத்தில் தேய்ந்த, பிராமண மனைவியானவள், தன் கணவனின்
ஆசை நாயகி வேற்றின குலப்பெண் என்று தெரிந்தும் அவளையும் தன் குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொள்கின்ற மானோ பாவம்,
திஜாவின், முற்போக்கு எண்ணத்தைக்காட்டுகின்றது.
இவரது எழுத்தில் பிராமண- மராட்டிய கலாச்சார வாடை வீசுவது, அவர் வாழ்ந்த நாட்களின் குறியீடு. இது ஒரு இலக்கிய சான்றாகவும், தமிழ் இலக்கிய த்தில், பதிவாகியுள்ளது.
– ஜெயானந்தன்