வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு

This entry is part 4 of 9 in the series 30 மார்ச் 2025

குரு அரவிந்தன்

ஐஸ்லாந்து என்ற ஒரு சிறிய தீவு அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இருக்கின்றது. 103,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட, ரெக்காவிக்கைத் தலைநகராகக் கொண்ட இந்த எரிமலைத் தீவுக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. படகில் சென்று வடதுருவத் திமிங்கிலங்களை அருகே பார்க்கக்கூடியதாக இருந்தது. இத்தீவில் சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். நான் பயணத்தை முடித்துக் கொண்டு வந்ததன் பின் ஒருநாள் 24 மணி நேரத்தில் சுமார் 2200 நிலவதிர்வுகள் இத்தீவில் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்று அங்குள்ள மக்கள் பயந்து போனார்களாம். இந்தச் சிறிய தீவில் சுமார் 30 மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பூமிக்கடியில் உள்ள தட்டுகள் அடிக்கடி முட்டிக் கொள்வதால், இந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இங்கே உள்ள எரிமலை ஒன்று 2010 ஆம் ஆண்டு வெடித்த போது விமானப் போக்குவரத்தே அப்பகுதியில் ஒருவாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த எரிமலை வெடிப்பால், புகையும், சாம்பலும் பல மைல் தூரங்களுக்குக் காற்றோடு பரவி சுற்றுவட்டத்தை மாசடைய வைத்திருந்தன.

ஐஸ்லாந்தின் பொருளாதார வசதிகளுக்காகச் சுற்றுலாப் பயணிகளையே அவர்கள் அதிகம் நம்பியிருக்கிறார்கள். பொருட்களை இறக்குமதி செய்வதால் பொருட்களின் விலை இங்கு சற்று அதிகமானது. ஆங்கிலமும் பேசும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள். வீடுகள் கூட்டமாக இல்லாமல், தனித்தனியாகவே அங்குமிங்குமாக இருக்கின்றன. மலைச்சரிவில் உள்ள சில வீடுகளின் கூரைகளைப் புற்கள் வளர்ந்து மூடியிருக்கின்றன. பபின் என்று சொல்லப்படுகின்ற அழகிய பறவைகளை இங்கு காணமுடிந்தது. செம்மறி ஆடுகளும், குதிரைகளும் நிறை இருக்கின்றன. சிக்காக்கோவில் ‘பான்பிட்ஸா’ பிரபலமாக இருப்பது போல, இங்கே கிடைக்கும் ‘ஐஸ்லாண்டிக் கொட்டோக்’ மிகவும் ருசியானதால் பிரபலமானது. வரிசையில் நின்றுதான் வாங்கவேண்டி வந்தது.

‘நோர்ஸ்’ இனத்தைச் சேர்ந்த வைக்கிங் காலப்பகுதியில்தான் இத்தீவில் குடியேற்றங்கள் எற்பட்டன. சுமார் 3 லட்சம் மக்கள்தான் இங்கு வசிக்கிறார்கள். அரச கட்டுப்பாடுகள் காரணமாக, பெற்றோர் விரும்பியவாறு பிள்ளைகளுக்கு இங்கே பெயர் வைக்க முடியாது. தொடர்வண்டிகளும் இங்கு இல்லை. இவர்களது முன்னோர்கள் ஒரு காலத்தில் பயங்கரமான கடற்கொள்ளையர்களாக இருந்தார்கள். கழுத்தைக் கோடாரியால் வெட்டுவது, மரத்திலே கட்டி உயிரோடு எரிப்பது போன்ற தண்டனைகளைக் கொடுத்தார்கள். இங்குள்ள காட்சியகத்தில் இது போன்ற தண்டனைக் காட்சிகளை நிஜமாக நடப்பது போலப் பார்க்க முடிந்தது. இன்னுமொரு காட்சிப் பொருளாக 2 ஆம் உலகயுத்தத்தில் ஜெர்மனியால் சுட்டு விழுத்தப்பட்ட ரஸ்ய விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் அமெரிக்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கவனித்த போது ஆச்சரியமாக இருந்தது. இதைப்பற்றித்  தேடுதல் செய்தபோது அமெரிக்காவிடம் இருந்து ரஸ்யா அந்த விமானங்களை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.

நிலத்திற்கு அடியில் இருந்து திடீர் திடீரென ஒரு பனைமர உயரத்திற்கு நீர் ஊற்றுக்கள் சீறிப்பாய்கின்றன. நிறைய நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. சுடுதண்ணிக் குளங்களும் இங்கு இருக்கின்றன. வீடுகளைச் சூடாக்க இந்த சூடான தண்ணீரையும், நிலவடிச் சூட்டுகாற்றையும் பயன்படுத்துகின்றார்கள். தீவைச் சுற்றி வருவதற்கு நல்ல நிலையில் ‘றிங்ரோட்’ என்ற நெடுஞ்சாலையை அமைத்திருக்கிறார்கள். வண்டியை வாடகைக்கு எடுத்து விரும்பிய இடங்களைச் சென்று பார்க்கக்கூடிய வசதிகள் உண்டு. பனிக்காலத்தில் சிறிய வீதிகளை மூடிவிடுகிறார்கள். இக்காலத்தில் ‘நொதேன் லைட்’ என்று சொல்லப்படுகின்ற வானத்தைப் பல வர்ணங்களில் பார்க்க முடியும். நோர்வே நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் இந்தத் தீவுகளுக்குப் பெயர்சூட்டும் போது தவறு செய்து விட்டார்கள். மாலுமிகள் தகவல் தெரிவித்தபோது ஒரு தீவு பனியாலும், அருகே உள்ள இன்னும் ஒரு தீவு பச்சைப் பசேலென்று தாவரங்கள் சூழ்ந்திருப்பதாகவும் அறிவித்தபோது, நேரடியாகச் சென்று பார்க்காததால் அருகே இருந்த பனியால் சூழப்பட்ட கிறீன்லாந்திற்கு அந்தப் பெயரையும், தாவரங்கள் வளர்ந்திருந்த இந்தத் தீவக்கு ஐஸ்லாந்து என்றும் வரலாற்றுத் தவறு காரணமாகப் பெயர் நிலைத்து விட்டது.

இங்குள்ள துறைமுகத்திற்கு அருகே சூடான நீரோட்டம் ஓடுவதால் துறைமுகத் தண்ணீர் உறைவதில்லை. குற்றங்களே நடக்காத நாடு என்பதால் வீதிகளில் பொலிசாரைக் காணமுடியாது. நான் அங்கு நின்ற நாட்களில் ஒரே ஒரு பொலிஸ்காரரைக் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாட முடிந்தது. பாதுகாப்பு வேலிகள் இல்லாததால், சில இடங்களில் தரை பிளந்து அதிலிருந்து புகை வெளிவருவதையும், சுடுநீர் கொதிப்பதையும் அருகே சென்று பார்க்கமுடிந்தது. சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த இடமாக இது இருக்கின்றது.

Series Navigationமருள் விளையாட்டுகடல்  
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *