சார், பேனா இருக்கா…?

This entry is part 6 of 6 in the series 6 ஏப்ரல் 2025

உஷாதீபன்

சின்ன உதவிதானே…செய்தா என்ன…குறைஞ்சா போயிடுவீங்க….-? தாங்க முடியாத சலிப்போடு தன்னை மீறிக் கத்தினாள் விசாலி. தன் கணவனின் குணம் இப்படியிருக்கிறதே என்று மனசுக்குள் மிகுந்த  வருத்தம் அவளுக்கு. எந்தெந்த விஷயங்களுக்கோ சொல்லிச் சொல்லி அவன் திருந்தினபாடில்லை. 

குறைஞ்சா போயிடுவீங்க-ன்னு எத்தனைவாட்டிதான் செய்றதாம்? போறபோதெல்லாம் இப்டியே இருந்தா? எரிச்சலா இருக்குல்ல…? என்று பதிலுக்கு அலுத்துக் கொண்டான் வைத்தி. 

என்னவோ பெரிய்ய்ய்ய நஷ்டம் ஏற்பட்டுட்டாப்லதான்….போனாப் போகுது….அஞ்சு ரூபாப் பேனா…! இதுக்குப் போய் மூக்கால அழாதீங்க…என்றாள் விசாலி. இன்னும் கடுமையாகச் சொல்ல அவள் நாக்கு துடித்தது. அடக்கிக் கொண்டாள். 

நேத்துத்தான் வாங்கினேன்….நானே சரியா எழுதிப் பார்க்கலே….ஒரேயொரு செலான் ஃபில் அப் பண்ணினேன். அத்தோட மூடி வச்சதுதான்….அப்டியே போயிடுச்சி….இந்த வயித்தெரிச்சல எங்க போய்க் கொட்டுறது?  

எங்கிட்ட சொல்லியாச்சில்ல…அத்தோட விடுங்க….இன்னொரு பேனா வாங்கிட்டாப் போச்சு…..! இதப் போயி வெளில புலம்பிட்டிருக்காதீங்க….கேவலமாயிருக்கும்…!

என்ன நீ…பொறுப்பில்லாமப் பேசற…? ஒரு பொருளுக்கான முழு உபயோகம்ங்கிறது இல்லையா? காசு கொடுத்து ஒன்றை வாங்கினோம்னா அதை பத்திரமா வச்சிருந்து உபயோகிக்கணும். அது அதோட முழு பயனை அடையணும்.  அதுவரை அதை அக்கறையா, சிரத்தையா பாதுகாக்க வேண்டியது, உபயோகப்படுத்த வேண்டியது நம்மளோட கடமையில்லையா?….

ஆமாமாம்…வீங்கின பொருளையெல்லாம் வீணாக்காம உபயோகிச்சாச்சு….இது ஒண்ணுதான் தவறிப் போச்சு…. அவள் பேச்சின் கேலி புரிந்தது வைத்திக்கு. 

எதுக்கு வெட்டிப் பேச்சு…நீங்களும் நானும் இப்டித் தேவையில்லாத விஷயங்களுக்கு விருதாவாச் சண்டை போடுறதே…அல்லது வாக்குவாதம் பண்றதே வழக்கமாப் போச்சு…இனிமே இந்த மாதிரி விஷயங்களை எங்கி்ட்டச் சொல்லாதீங்க…என்னவோ பண்ணிக்குங்க நீங்க…நான் கேட்கலை…அதுபோல என் சம்பந்தப்பட்ட விஷயங்களை நான் உங்ககிட்டே சொல்ல மாட்டேன்…சரியா…? 

நல்லாயிருக்குடி உன் பேச்சு….என் மண்டைக் காய்ச்சலை உங்கிட்ட புலம்பாமே தெருவுல போறவன்கிட்டயா போய்க் கொட்ட முடியும்? இதக் கேட்கக் கூட உனக்குப் பொறுமையில்லையா? அவ்வளவு சகிப்புத் தன்மையா அத்துப் போனே? அதென்னமோ எனக்குன்னு அப்டி அமையுதுன்னு  நொந்து போய்ச்  சொல்ல வந்தா…? ரொம்பக் கிராக்கி பண்றியே? 

என்ன அமையுது உங்களுக்குன்னு? உலக மகா நஷ்டமா ஆகிப்போச்சு….? இவ்வளவு அலுத்துக்கிறீங்க…?-வீட்டு வேலைகளுக்கு நடுவே நொய் நொய்னுட்டு…..! 

போதாக்குறைக்கு மாடியிலுள்ளவர்கள் காதில் விழுமோ இதெல்லாம் என்று வேறு சங்கடம் விசாலிக்கு.  ஆனால் வைத்தி அசருவதாயில்லை.

வெளில நாலு எடத்துக்குப் போயிட்டு வர்றவனுக்குத்தாண்டி சிரமம் தெரியும். வீட்டுக்குள்ளயே முடங்கிட்டு குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டுறவங்களுக்கு எதுவும் புரியாது. நாலு காரியமா வீட்டு வாசப்படி தாண்டுறபோது நாலு விதமா  இருக்குமாக்கும். நா சொல்றதுல என்ன தப்பு…? பாங்குக்குன்னு வர்றாங்க…போஸ்ட் ஆபீசுக்குன்னு வர்றாங்க…பேனா எடுத்திட்டு வரத் தெரியாதா? போஸ்ட் ஆபீஸ்ல கவர் ஒட்டன்னு பசை காய்ச்சி வச்சிருக்கான்…அவங்களுக்கென்ன தலைவிதியா வைக்கணும்னு? அதுபோல பேனாவையும் கட்டித் தொங்கவிடணும் போல்ருக்கு…? 

வர்றவங்களுக்கு உதவட்டும்னு ஒரு சலுகையாப் பண்ணினா,  அப்டியே  நாலு பேனாவையுமா வாங்கிப்  போட முடியும்? வீட்டுலேர்ந்து கிளம்பும்போதே என்னென்ன வேணும்னு எடுத்து வச்சிட்டுக் கிளம்பத் தெரியாது? அதென்ன அங்க வந்து ஒவ்வொருவாட்டியும் மத்தவங்ககிட்ட ஓசி கேட்குறது? வர்றவன்ல பாதிப் பேருக்கு இந்த வியாதி…இது அவனவன் மறதிலயா சேர்த்தி? ரொம்ப அநியாயம்…!!!

சார்…கொஞ்சம் பேனா கொடுங்க… பேனா இருக்கா சார்…ஒரு நிமிஷம்…?-ன்னு வர்ற ஆள்ட்டயெல்லாமா வாயிழக்கிறது? …அசிங்கமாயில்லே? எவனுக்கும் ஓசி கேட்குறதுல வெட்கமில்லையே? ஓட்டுப் போடப் பணம் வாங்குற மாதிரி? அட… பேனாவ வாங்கினோம்…சட்டுனு திருப்பிக் கொடுத்தோம்னாவது இருக்கா? . ஓசியும் கொடுத்துப்பிட்டு அதத் திருப்பி வாங்குறதுக்கு பழியாக் காத்துக் கெடக்கணுமா? என்னம்மா…கதை எழுதுறீங்களா?ன்னு ஒரு பொம்பளைட்டக் கேட்டேன்…அதுக்கு  அந்தம்மாவுக்கு அப்டிக் கோபம் வருது …!  பெரிய டெபாசிட் ஃபாரம்…அத முழுக்க சாவகாசமா இந்தம்மா ஃபில்லப் பண்ணிட்டிருக்கும்… நான் ஓசி கொடுத்த  பேனாவுக்குக் காத்துக் கிடக்கணுமா? எப்பத் திருப்பித் தருவாங்கன்னு? ஆள் மாத்தி ஆள் எவனாவது கேட்டுட்டே இருக்கானுங்க…! தப்பிச்சோம் பிழைச்சோம்னுல்ல ஓடி வர வேண்டியிருக்கு…? போனாப் போகுதுன்னு விட்டுட்டு வந்தாத்தான் ஆச்சு…!

எல்லாம் என்னோட துரதிருஷ்டம்…எனக்குன்னு எங்கேயிருந்துதான் ஆள் வருமோ தெரில….ரயில்ல பயணம் போனாலும் அங்கயும் இந்தப் பிரச்னைதான்….சார்…கொஞ்சம் உங்க லோயர் பெர்த்தைத் தர முடியுமா? எனக்கு மிடில் விழுந்திடுச்சி…இப்பத்தான் முதுகுல ஆபரேஷன் ஆகியிருக்கு…ஏற முடியாது…அதான்  உதவி கேட்கிறேன்…..

இப்டியான சங்கடங்கள்…ஏன்னா நான் ரொம்ப இளந்தாரி பாரு…? லோயர் பெர்த் போடுறவன்  அவனுக்குன்னு சில சிரமங்கள் இருக்குன்னுதானே கேட்டு, கவனமா ரிசர்வ் பண்ணுறான். அப்புறம் அவன்ட்ட வந்து எனக்குத் தர முடியுமான்னு கேட்டா? சரி போனாப் போகட்டும்னு பார்த்தா…நாலு காரேஜ் தள்ளி ஒரு சீட் நம்பரை அசால்ட்டாச்  சொல்றான்….பெட்டி படுக்கையைத் தூக்கிட்டு அநாதை மாதிரிக் கௌம்பி நாமளா அந்த எடத்துக்குப் போய்க்கணும்!அதுக்குள்ளேயும் நம்ம எடத்த ஆக்ரமிச்சி நீட்டி நிமிர்ந்திடுவானுங்க… என்ன தாராள மனசு? இதே மாதிரி அவுங்க…இன்னொருத்தருக்குச் செய்வாங்களான்னு என்ன நிச்சயம்? அது எப்டி நம்ம மூஞ்சியப் பார்த்து வர்றானுங்கன்னுதான் தெரில…? எழுதி ஒட்டியிருக்கும் போல…!  அப்பா அம்மாட்டயிருந்து வாங்கிட்டு வந்த வரம்…ஏமாளி இவந்தான்னு….! இந்த சோகத்தையெல்லாம் எங்க போய்க் கொட்டுறது? கலிகாலம்டா சாமி…!!!

பேசியது அத்தனையையும் விசாலி காதில் வாங்கிக் கொண்டிருக்கிறாளா அல்லது தூங்கி விட்டாளா? அவள் சமையல்கட்டை விட்டு வந்து வெகு நேரமாயிற்று போல…!  தலைக்கு ஒரு பலகையை வைத்துக் கொண்டு, கையை அண்டக் கொடுத்து உறங்க ஆரம்பித்திருந்தாள். லேசான குறட்டைச் சத்தம்…! 

ம்ம்…பாவம்….அவ பாடு அவளுக்கு…நம்ம பாடு நமக்கு…அவுங்கவுங்க பாடு அவுங்கவுங்களுக்கு…! ஒலகம் இப்படித்தானே இயங்கிட்டிருக்கு…! – புழுங்கிக் குமுறிக் கொண்டான் வைத்தி. 

கைப்பையின் வெளி ஜிப்பைத்  திறந்து அந்த மை தீர்ந்த  எழுதாத இரண்டு பேனாக்கள் பத்திரமாய் இருக்கின்றனவா என்று கவனமாய்ப் பார்த்துக் கொண்டான். ஓசி கொடுப்பதற்கென்று ஸ்பெஷலாய் ஒதுக்கி வைத்த பொக்கிஷங்கள் அவை. பல நாள் பட்ட கஷ்டத்தில் உதித்த ஐடியா…!

கூடவே முதல் நாள் வாங்கிய அந்த அஞ்சு ரூபாய்ப் புதிய பேனாவும் இவனைப் பார்த்து சிரித்தது. பலே ஆள்டா நீ…!  

ந்தப் பேனா எழுத மாட்டேங்குதே சார்…?-

மசி தீர்ந்து போன பேனா எப்படிய்யா எழுதும்? -நினைத்தவாறே எனக்கும்தான் சரியா எழுதல…-என்று அலுத்துக் கொண்டதை எண்ணி மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டான். முன்பு உண்மையில் ஏமாந்ததற்குத்தான் மனைவியிடம் கொட்டித் தீர்த்தாயிற்றே…! இனி எவன் பாச்சா எங்கிட்டப் பலிக்கும்?  அனுபவம் தந்த பாடம்…!

கஞ்சப் பிசினாறி…! – அந்த ஆள் முனகிக் கொண்டே படியிறங்கிப் போனதை எண்ணி இப்பொழுதும் அவன் மனது சிரித்துக் கொண்டது.

ஒரு  பேச்சு வழக்கு வார்த்தைக்குத்தான் எவ்வளவு ஆழமான அர்த்தங்கள்? கஞ்சன், கருமி, உலோபி…உலுத்தன்…..-கடகடவென்று தன்னை மறந்து வெடிப்பாகச் சிரித்தான் வைத்தி. உள்ளே வைத்திருந்த அந்தக் காலிப் பேனாக்களும் சிரித்ததுபோல் கலகலத்தன. 

———————————–

உஷாதீபன், (ushaadeepan@gmail.com) (செல்-94426 84188).

Series Navigationமத்தேயு  6 : 3
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *