மீனாட்சி சுந்தரமூர்த்தி.
நகரின் மையப்பகுதியில் வானளாவ வளர்ந்திருந்த அந்த மருத்துவமனை வாயிலில் சிவப்பு சைரன் ஒலிக்க வந்து நின்றது ஆம்புலன்ஸ். காத்திருந்த அந்த வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் . வண்டியிலிருந்தப் பெண்மணியை ஸ்ட்ரெச்சரில் மாற்றிப் படுக்கவைத்து வேகமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றனர்.அங்கிருந்த மருத்துவர் ஓடி வந்து பார்த்தார், அந்தப் பெண்ணின் மகளும், மருமகனும் கவலை தேக்கிய முகங்களுடன் நின்றனர். மருத்துவர் ,
‘ என்ன ஆச்சு சொல்லுங்க’
‘டாக்டர் அம்மாவுக்கு ஒரு வாரமா தலைவலி,மூக்கடைப்பு இருந்தது ‘
‘அதுக்கு என்ன செஞ்சீங்க?’
‘வழக்கமா பார்க்கிற டாக்டரிடம் காட்டி மருந்து மாத்திரை வாங்கினோம்?’
‘எங்கே?’
‘சார் கோவையில் இவங்க மகன் அழைச்சிட்டுப்போனார்’
‘ நேத்துதான் அம்மா இங்கே வந்தாங்க’
‘ பரவாயில்லைன்னாங்க, சோர்வா இருந்தாங்க’
‘ ராத்திரி என்ன சாப்பிட்டாங்க?’
‘ இட்டிலி,தேங்காய் சட்டினி’
‘தூங்கப் போனாங்க, திடீர்னு நெஞ்சு வலினு துடிச்சி விழுந்திட்டாங்க’
என்றாள் மகள் வேதா.
‘ சரியான நேரத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்கீங்க, பார்க்கிறோம்’
‘நர்ஸ் இவங்களை லாபியில் உட்கார வையுங்க’
‘சார் வாங்க, மேடம் அம்மா சரியாகிடுவாங்க’
என்று சொல்லி வெளியே அழைத்துக்கொண்டு சென்றாள்.
‘ மேடம் இங்க உட்காருங்க, ‘
‘ நளினா இவங்களுக்கு குடிக்கத் தண்ணி கொடு’ என்று இன்னொரு செவிலியிடம் சொல்லிச் சென்றாள்.
அந்த வராண்டாவிலும் அறைகளிலும் போர்க்கால மேகம் சூழ்ந்தது போல் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவசரமாக கார்டியாலஜிஸ்ட் வரவழைக்கப்பட்டார். ஆபரேஷன் தியேட்டர் தயாரானது. ஆக்சிஸன் பொருத்தப்பட்டு மீண்டும் ஸ்ட்ரெச்சரில் கோதை இரண்டாவது மாடிக்குப் பணியாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டாள்.
வேதாவின் கையைப் பிடித்து அருண் ,
‘அத்தைக்கு ஒன்றும் ஆகாது , தைரியமாயிரு’
‘ அண்ணனுக்குச் சொல்லிடுங்க ‘
என்று கண்களைத் துடைத்துக் கொண்டு கணவனின் தோளில் சாய்ந்தாள் வேதா.
அதற்குள் அறையிலிருந்து வெளியில் வந்தார் மருத்துவர்.
இருவரும் எழுந்து அவரிடம் சென்றனர்.
‘ அருண் இது முதல் அட்டாக் வந்துள்ளது’
இப்போது கண்விழித்து விட்டார்கள்.’
‘ இப்போ ஒண்ணும் பயமில்லை, ஆனால் சில டெஸ்ட்டெல்லாம் எடுக்கணும்’
‘சரிங்க சார்’
‘அட்மிஷன் போட்டுடறோம்’ என்று நகர்ந்தார் கார்டியாலஜிஸ்ட்.
அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டாள் கோதை .உள்ளே சென்று பார்த்தார்கள், ஆக்சிஜன் பொருத்தப்பட்டிருந்தது.
வேதாவைக் கண்டதும் கோதை,
‘ எனக்கு ஒண்ணும் இல்ல, நீ அழாதே’
அன்னையின் கரங்களைப் பற்றிக் கொண்ட வேதாவின் கன்னங்களில் வழிந்தோடியது கண்ணீர்.
‘அத்தே ஒண்ணும் இல்லே, பலவீனமா இருக்கீங்க, அட்மிஷன் போட்டுருவோம்’
என்றான் அருண். அண்ணன் மகனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள்.
உள்ளே வந்த நர்ஸ்,’அவங்க ஓய்வெடுக்கட்டும், நீங்க போங்க’ என்றாள்
கோதையிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தனர் இருவரும்.
‘என்னங்க நான் இங்கே இருக்கேன், நீங்க வீட்டுக்குப்போங்க’
‘ இல்லமா, ஏதாவது வாங்கணும்னா கூப்பிடுவாங்க, நானிருக்கேன்’
‘ , பசங்க தனியா இருப்பாங்க நீ போ , காலையில வா’
என்று சொல்லிவிட்டு டிரைவரை அழைத்தான் அருண்.
இருபது நிமிடத்தில் வீட்டிற்கு வந்தாள் வேதா, மகனும் மகளும் ஓடிவந்து கட்டிக்கொண்டு பரபரத்தார்கள்,
‘ஆச்சிக்கு என்ன ஆச்சு மா?’
‘இலேசான நெஞ்சு வலி இப்ப நல்லா இருக்காங்க, நாளைக்குப் போய் பாக்கலாம்’ என்று சொல்லி படுக்க வைத்தாள்.அவளுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.
அம்மா ஊரிலிருந்து வந்தபோதே இயல்பாக இல்லை, கண்ணெல்லாம் வீங்கிச் சிவந்திருந்தது. தலைவலி, மூக்கடைப்பு இப்போது பரவாயில்லை என்றாள்.எதையோ பறிகொடுத்தவள் போலிருந்தாள் .அண்ணன் அரசுக் கல்லூரி ஒன்றில் கணிதப் பேராசிரியராக இருக்கிறான். அண்ணி தேசிய வங்கி ஒன்றில் பணிபுரிகிறாள். ஒரே பெண் அவள் பொறியியல் மூன்றாமாண்டு படிக்கிறாள்.
அரசுப் பள்ளியில்தான் இருவரையும் படிக்க வைத்தார் அப்பா. கல்லூரியில் கோல்டு மெடல் வாங்கிய சந்திரனுக்கு( வேதாவின் அண்ணன்) அரசுக்கல்லூரியில் வேலை கிடைத்தது. தன்னோடு கல்லூரியில் படித்த கலாவை விரும்பினான், மகனின் விருப்பத்தை நிறைவேற்றினார் தந்தை.
வேதா வேதியியல் இளங்கலையோடு நிறுத்திக் கொண்டாள் பெரிதாகச் சாதிக்க ஆர்வம் ஏதுமில்லை, அண்ணன் மகன் அருணோடு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளாகிறது.
போஸ்ட் மாஸ்ட்டராக இருந்த அப்பா ஓய்வு பெற்று ஏழு வருடங்களாகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியையாக இருந்த அம்மா ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகளாகிறது. இருவரும். அண்ணன் வற்புறுத்தியும் ஊரில் தனியாகவே இருந்தார்கள் அவ்வப்போது மகன், மகள் இல்லங்களுக்குச் சென்று வருவார்கள். அப்பா விவசாயக் குடும்பம் என்பதால் தென்னந்தோப்பும், இருபத்தைந்து ஏக்கர் நஞ்சை நிலமும், மாந்தோப்பு ஒன்றும் இருந்தது எல்லாவற்றையும் குத்தகைக்கு விட்டிருந்தார்.
வேதாவிற்கும் சந்திரனுக்கும் நல்ல வசதிகளோடு கூடிய வீடுகளை வாங்கித் தந்துவிட்டார்.அவ்வப்போது பேரக் குழந்தைகளுக்கு வேண்டியதைச் செய்கிறார்கள். எந்தக் குறையும் வைப்பதில்லை.
கொரோனா வருவதற்கு முன் அப்பாவிற்கு எந்த நோயும் இல்லை, ஆனால் வந்து போன பின் ஆஸ்த்துமா நிரந்தரமானது. அவ்வப்போது மருத்துவமனை சென்று வந்தார்.இதுவே அவர் உயிரையும் பறித்து விட்டது. ஆறுமாதம்தான் ஆகிறது அப்பா இறந்து.
அம்மாவிற்கு ஒரு நோயும் இல்லை, மனவலிமை அதிகம்,.யாருடனும் வந்து இருக்க மறுத்துவிட்டாள்,ஊரில் தனியாக இருக்கிறாள். (அம்மாவின் தம்பி ) மாமா அடிக்கடி சென்று பார்த்துக் கொள்கிறார். திடீரென ஏனிப்படி ஆனது? என்ன நடந்தது? என்று யோசித்தவள் அலுப்பில் உறங்கிப்போனாள்.
அவளுக்கு எப்படித் தெரியும்?
சதாசிவம் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் கோதையிடம் கலந்தாலோசித்து முறைப்படி உயில் ஒன்று எழுதினார்
‘ ஏனுங்க இதுக்கு என்ன அவசரம் இப்ப?’
‘ யார் எப்படி மாறுவாங்கன்னு சொல்லமுடியாது’
‘நம்ம பிள்ளைங்கள ஊரே மெச்சுதுங்க’.
‘ உனக்கு எதுவும் தெரியாது,எப்பவும் யாரையும் நம்பாதே நீ’
அவர் இறந்து ஒரு மாதத்திற்குப் பின் இது சந்திரனுக்குத் தெரிந்தது.முகம் வாடிப்போனது,
இருக்கின்ற சொத்துகளைச் சரிபாதியாகப் பிரித்திருந்தார் மகனுக்கும், மகளுக்கும்.
வங்கியிலிருந்த இருபது இலட்சத்தில் தனது தங்கைகள் இருவருக்கும் ஆளுக்கு ஐம்பதாயிரம் எனச்சொல்லி மீதியை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டிருந்தார்.
தனது வீட்டை மனைவியின் காலத்திற்குப் பிறகு இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருந்தார். சந்திரன் இது சரியில்லை, தங்கைக்கு இரண்டு ஏக்கர் நிலம் மட்டும் தரலாம், மீதி எதுவும் தரவேண்டியதில்லை என்றான். இது புகைந்துகொண்டே இருந்தது.
ஒரு பத்து நாட்களுக்கு முன் தரகர் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தான் வீட்டை விற்பதற்கு,
கோதை அதிர்ந்து போனாள், விற்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
மகன் இப்படி மாறிப்போவான் என்று எதிர்பார்க்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்திரனின் அழைப்பு ,
‘ அம்மா நாளைக்கு காலையில கார் வரும் உடனே புறப்பட்டு வா’ என்றான். கோதை மகனுக்குச் சொல்லி புரியவைப்போம் என்று வந்தாள். அன்று காலையில் பத்து மணிக்குத் துவங்கியது பேச்சு,
‘ அம்மா வீட்ட வித்துடு, எங்களோட வந்து இரு’
‘ அது முடியாது தம்பி, அப்பாவோட நெனைவு நெரம்பியிருக்கு அங்க’
‘ உனக்கு வயசாயிட்டுது, புரிஞ்சிக்க மாட்டேங்கற’
‘ ஏங்க உங்க மேல பாசம் கெடையாதுங்க, உங்கம்மாவுக்கு’
‘உனக்கு என்மேல பாசமிருந்தா, நான் சொல்றபடி ஏற்பாடு செய்மா’
‘ அப்பா பேச்சை நான் மீறமாட்டேன் தம்பி’
‘சரி தொலையுது, நீ இருக்கறவரைக்கும் வீட்ட விக்கலை,
மற்றதை எனக்கு எழுது , ரெண்டு ஏக்கர வேதாவுக்கு எழுதிடு’
‘ ஏண்டா உனக்கு அறிவு மழுங்கிடுச்சா?, உனக்கு என்ன கொறைச்சல்?
‘ நல்லா தெளிவாதான் இருக்கேன், அதோடு உனக்கு எதுக்குமா ரெண்டு பென்ஷன்?ஒண்ணை எங்கிட்டத் தந்துடு’
ஓய்வூதியத்தைக் கேட்டதும் தாங்க முடியாமல்,
‘ ஏம்பா இது என் கணவரோடது , என்னோட உரிமை, இதை யாருக்கும் தரமுடியாது’ என்றாள்
மணி இரண்டானது
மந்திரித்து விடப்பட்டவன் போல் பேசிக்கொண்டிருந்தான் சந்திரன்.
கோதை காலையிலிருந்து எதுவம் சாப்பிடாமல் இருந்தாள், விடுவிடுவென கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்,
‘ஏம்பா வண்டிய எடு , திண்டுக்கல் போகணும்’ என்று சொல்லி காரில் ஏறினாள். மாலை நான்கு மணிக்கு வந்து இறங்கிய அம்மாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் வேதா. இதுதான் நடந்தது.
மறுநாள் அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள் கோதை.
‘ஏங்க அண்ணனுக்குச் சொன்னீங்களா?’
‘ சொல்லிட்டேன், ஆனா ஏதோ வருத்தம்னு தெரியுது, பெரிசா அலட்டிக்கல’
கோதை அருணை அழைத்தாள்,
‘ வக்கீலையும், சந்திரனையும் நாளைக்கு வரச் சொல்லுப்பா’
‘ ஏன் அத்தே, என்னாச்சு, என்ன பண்ணப் போறீங்க?’
‘எதுக்குமா ஒடம்ப கெடுத்துக்கறே, அமைதியாயிரு’
‘முதல்ல உடம்பு நல்லாகட்டும் அத்தை, எல்லாத்தையும் சந்திரன் பாத்துக்குவான் ‘
‘ அருண் நாளைக்கு இந்த ஏற்பாட்டைப் பண்ணுப்பா’
‘அம்மா என்ற மகளிடம் டாக்டருங்க ஆயிரம் சொல்லுவாங்க நம்பாதே நீ’ என்றாள்.