சசிகலா விஸ்வநாதன்
நட்சத்திர உணவு விடுதியில்,
குதிக்கும் மெழுகுவர்த்தியின் மங்கின ஒளியில்,
இருள் கவிந்த குளிரூட்டப்பட்ட உணவு கூடத்தில்,
மெத்தென்ற நுரையிருக்கையில் நான் அமர;
பனி வெள்ளை கையுறையுடன்,
வெண் சீருடையில்
பணிவுடன் பணியாள் ஒருவன்;
பிழிந்து வைத்த பழைய சோறு;
அலங்கார பளிங்கு வட்டிலில்
வகுந்து வைத்த பச்சை மிளகாய்;
சிறு குத்து குச்சிகளுடன்;
திருத்தின பச்சை வெங்காய சிதறல்
சிறு தாமரையென அலங்காரமாய்,
பங்குனி வெயிலில், பசித்த வயிற்றில்
இறங்கும் நேரம்
நினைவில் வரும்
தாயம்மா கிழவியின்
எலும்புக் கரங்கள்…
அள்ளி வைத்த
ஊற வைத்த சோறும், ஊசிமிளகாயும்.
உப்பு ஏறிக் கரிக்கும்
நீச்சத் தண்ணி
புளிச்ச வாடையுடன்
தொண்டைக் குழியில்
குளிர்வாய் இறங்கி, வயிற்றின்
வெறுமையையும்,
வெம்மையையும்,
ஒரு சேர அணைக்கும் ஆனந்தம்!
சசிகலா விஸ்வநாதன்