புரட்சி

This entry is part 1 of 6 in the series 6 ஏப்ரல் 2025

முகுந்தன் பெங்களூரிலுள்ள அந்தக் கல்லூரியில், அந்தப் பிரிவில் சேர்ந்ததற்குக் காரணம் இருந்தது. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால் நியூயார்க்கில் வேலை செய்யலாம். அந்தச் சுதந்திரச் சிலையைப் பார்த்தபடி ஒவ்வொரு பொழுதும் விடியலாம். அந்தக் கல்லூரியில் படித்த பலர் அங்கு வேலை செய்கிறார்கள். அவர்களே வேலை வாங்கித் தந்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல. தன் நெருங்கிய நண்பன் இப்போது நியூயார்க்கில்தான் இருக்கிறான். சொந்தச் செலவில் நியூயார்க் சென்றுவிட்டால் போதும்.

*

எல்லாம் சுமுகமாகவே நடந்தது. நியூஜெர்சியில் மூன்று நண்பர்களோடு இப்போது முகுந்தன் அமெரிக்காவில். அவன் ஏங்கியதுபோலவே சுதந்திரச் சிலையைப் பார்த்தபடி அவனுக்குப் பொழுது விடிகிறது. அவனுக்கும் அந்தச் சுதந்திரச் சிலைக்கு மிடையே கடல் ஆழமில்லாமல் ஓர் ஏரிபோல் விரிந்து கிடக்கிறது. முகுந்தனுக்கு வயது 30. திருமணம்? ஆண்டுக்கு ஆறேழு பெண்கள் பார்க்கப்படுவதும் ஒதுக்கப்படுவதுமாக நாட்கள் நகர்கின்றன. அவன் கேட்பது ஒன்றுதான். அத்தனையும் உதறிவிட்டு  அமெரிக்காவில் 10 டிகிரி குளிரில் தன்னோடு வாழத் தயாராக இருக்கவேண்டும். ஏதாவது ஒன்று எங்கேயோ முளைத்து எல்லாவற்றையுமே முறித்துவிடுகிறது. 

*

ஒரு வேலைத்திட்டமாக முகுந்தன் ஒருவாரப் பயணமாக சிங்கப்பூர் வந்தான். ஆர்ச்சர்ட சாலையில் ஒரு சொகுசு விடுதியில் தங்கினான். கிளமெண்டியில் அவன் தாய்மாமன் இருக்கிறார். ரொம்ப காலமாகவே இரண்டு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை இல்லை. முகுந்தன் அடுத்த தலைமுறை. அவனும் அப்படியே இருக்க அவனுக்குக் காரணங்கள் இல்லை. மாமா வீட்டுக்குச் சென்றான். மாமா மகள் நித்யா தேசியத் தொடக்கக் கல்லூரியில் படிக்கிறாள். அன்று மாலை அவள் தன் தோழி மரியத்துடன் வீட்டுக்கு வந்தாள். மரியம் தமிழ் பேசும் முஸ்லிம் பெண். அவளுக்கு நித்யா முகுந்தனை அறிமுகம் செய்துவைத்தாள். 

‘ஆ! அமெரிக்காவா? நியூயார்க்கா? சுதந்திரச் சிலையை தினமும் பார்க்கலாமே,’

‘ஆம் . சுதந்திரச்சிலைக்குப் பக்கத்தில்தான் நான் இருக்குமிடம். காலையில் சுதந்திரச் சிலையைப் பார்த்தபடிதான் எனக்குப் பொழுதே விடியும்.’

‘அடேங்கப்பா 30டன் காப்பர் கலந்த வித்தியாசமான உலோகமாம். 200 படிக்கட்டுகள் உள்ளேயாம். உள்ளேயே மேலே ஏறி,  அதன் கண்கள் வழியே நியூரார்க் நகரையே பார்க்கலாமாம். நம்பவே முடியவில்லை. அந்த சுதந்திரச் சிலையைப் பார்ப்பது என் பத்தாண்டுக் கனவு.’

‘நீங்கள் வருகிறேன் என்று சொல்லுங்கள். எல்லா ஏற்பாடும் நானே செய்கிறேன்.’

முகுந்தனுக்கும் மரியத்துக்கு மிடையே நீண்டகால நண்பர்கள் போன்ற உரையாடல் தொடர்ந்ததில் நித்யா ஆச்சரியப்படவில்லை. நியூயார்க் என்று சொன்னாலே மரியம் தன்னை மறந்து பேச ஆரம்பித்துவிடுவாள்

*

சிங்கப்பூர் கிழக்குக் கடற்கரையில் ஒரு மாலை.  முகுந்தன், நித்யா, மரியம். நித்யா ஏதோ வாங்கப் போய்விட்டாள். முகுந்தனும் மரியமும் தனியே இருக்கவேண்டிய சூழ்நிலை. மீண்டும் உரையாடல். 

‘நியூயார்க்தான் உங்கள் கனவென்றால் நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?’

சட்டென அவன் கேட்டதில் மரியம் கலவரப்படவில்லை. கத்தரிப்பூவாய்ச் சிரித்தாள். அவளுக்கு எதையுமே கலவரமாக எடுத்துக்கொள்ளத் தெரியாது

‘திருமணமா? மீண்டும் கத்தரி பூத்தது. இப்போதுதான் தொடக்கக் கல்லூரி. அதற்குப் பிறகு பல்கலைக் கழகம். அதற்குள் உங்கள் முடிவில் மாற்றமில்லை யென்றால், என் வீட்டிலும் வேறோரு மாப்பிள்ளையை ஏற்பாடு செய்யாதிருந்தால் யோசிப்போம்.’

கடைசி வார்த்தை ஒரு புன்னகையில் மிதந்து வெளியானது. 

*

தேசியக்கல்லூரியில் மதிய இடைவேளை. நித்யாவும் மரியமும் சாப்பாட்டு மேசையில். முகுந்தன் சொன்னதை நித்யாவிடம் சொல்லி அவள் சிரித்ததில்  சில மாணவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். நித்யா சொன்னாள்,

‘பத்துவயதிலேயே சுதந்திரச்சிலை, நியூயார்க் என்று அவன் புலம்பிக் கொண்டே இருப்பான். அவனைப் பைத்தியம் என்று நினைத்தேன். அதுதான் அவனுடைய பலம். பிடித்தால் உடும்பு தோற்கும். அவனை நான் விரும்பினேன். அவனிடமே சொன்னேன். என் அப்பா குடிப்பார். குடி சரியாக வராது என்றான். உன்னை விரும்புகிறா னென்றால்…. வேண்டுமானால் பார். முடியாதென்று சொல்லிப்பார். உன்னை வற்புறுத்தவும் மாட்டான். அவனும் வேறு பெண்ணை நினைக்கவும் மாட்டான்’

*

முகுந்தன் அமெரிக்கா சென்றுவிட்டான். சில மாதங்கள் நகர்ந்தன. மரியத்தின் பேசியில் முகுந்தனின் எண் துள்ளியது. எடுத்தாள்.

‘முடிவு செய்துவிட்டீர்களா? ஒன்றும் அவசரமில்லை. தொடக்கக் கல்லூரி முடியட்டும். உங்கள் பல்கலைக் கழகப் படிப்பு நியூயார்க்கில் தொடர நான் பொறுப்பு. நியூயார்க் பிடித்துவிட்டால், வேலை, வாழ்க்கை சாதாரணம். இன்னும் அவகாசம் இருக்கிறது. யோசியுங்கள். எப்போதாவது சரிதான் என்று நினைத்தால், தொடர்வோம். தப்பாச்சே என்று நினைத்தால் மறப்போம்.’

பேச்சு முடிந்தது. மரியம் யோசித்தாள்

யார் இவன்? ஏன் என் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். ஏன் இவ்வளவு ஆழமாக என்னை பாதிக்கிறான். ஆழமாகப் பேசுகிறான். ஆறும்வரைப் பொறுக்கிறான். நிதானம் மீறவில்லை. நான் சொல்வதுதான் சரி என்று தன்னை நியாயப்படுத்தவில்லை. தான் எடுக்கும் முடிவை அவன் மாற்ற நினைக்கவில்லை. நியூயார்க்கில் இருந்துகொண்டு குடி கூடாது என்கிறான். யாரையாவது திருமணம் செய்துதான் ஆகவேண்டும். அது ஏன் இவனாக இருக்கக்கூடாது. ஒரு பழம் கனிந்து அவளில் கைகளில் விழுந்ததுபோல் இருந்தது. தீவிரமாக யோசித்தாள். ஒரு நாள் நித்யாவிடம் பேசும்போது முடிவெடுக்க முடியவில்லை என்றாள். வெகுநேரம் பேசினாள். நித்யா சொன்னாள்

‘உனக்குச் சரியென்று பட்டால் பேசுவோம். தப்பென்று பட்டால் பேசிப் பயனில்லை. ‘

‘சரியென்று படுவதால்தான் பேசுகிறேன். முடிவெடுக்க முடியாததற்கு என் முடிவின் தடுமாற்றம் காரணம் அல்ல. சந்திக்கவேண்டிய பிரச்சினைகளின் கனம்தான் காரணம்’

பிறகுதான் நித்யா சொன்னாள்.

‘ஈசூனில் பிரம்மகுருவென்று ஒருவர் இருக்கிறார். ஆட்சி அனைத்தும் இறைவனுடையது என்பது அவர் கொள்கை. பரம்பரை கௌரவம், பணம், மதம் என்று சிந்திக்காதே. அந்த ஆணவத் திமிரை ஆணிவேரோடு பிடுங்கு. மனிதனாக யோசி என்பதே அந்தப் பாடம். அந்தப் பாடத்திற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் நானும் அம்மாவும் செல்வொம். உன் அப்பா இப்னு அப்போது குரு கூடவே இருப்பார். உன் முடிவை உன் அப்பாவிடம் சொல். ஏற்பார் என்று சொல்லமுடியாது. ஆனால் எதிர்க்கமாட்டார். அடுத்ததைப் பற்றி அதன்பிறகு யோசிப்போம்’

*

வீட்டில் அப்பாவோடு தனிமையில் இருக்கும்போது ஆறுமாத அனுபவத்தை இடிமின்னல் இல்லாமல் மழையெனப் பொழிந்தாள். அவரோடு நீங்கள் பேசுங்கள். உங்களுக்கும் அவரைப் பிடிக்கும் என்றாள். தான் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை மரியம் விரும்புவது இப்னுவுக்குப் பிடித்திருந்தது.  தொடர்ந்து சொன்னாள். ‘நீங்கள் பேசவேண்டாம். நானே அவரிடம் சொல்லி உங்களை அழைக்கச் சொல்கிறேன்’ என்றாள்.

*

ஒரு வாரம் கடந்த்து. இப்னுவுக்கு முகுந்தனின் அழைப்பு. முகுந்தன் பேச்சைத் தொடங்கினான். இப்னு மௌனித்தார்.

‘மரியம் சொல்லியிருப்பார். என் வீட்டில் சொல்லிவிட்டேன். அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சொல்லவில்லை. அவர்களுக்குச் சொல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகச் சொன்னேன். தாறுமாறாக அழுதார்கள். என் முடிவை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அவர்களுக்குத் தெரியும். என் வாழ்க்கையை நான்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். என் முடிவை எப்போதாவது ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. எவ்வளவு உயரத்தில் விமானம் பறந்தாலும் இறங்கித்தான் ஆகவேண்டும். ஒருநாள் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அதுவரை நான் ஒதுங்கியே இருப்பேன். பிறகு சேர்ந்துகொள்வேன். இப்போதைக்கு அவர்கள் இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். சரியென்று பட்டால் சொல்லுங்கள். உடனே சிங்கப்பூர் வருகிறேன். திருமணப் பதிவை முடித்துக்கொண்டு மரியத்துடன் அமெரிக்கா திரும்புகிறேன். உங்கள் மகளுக்கு என்னென்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும். அத்தனையும் நான் செய்கிறேன்.’

உரையாடல் முடிந்தது. ஆட்சி அனைத்தும் இறைவனுடையது என்பது பிரம்மகுருவின் பாடம். அந்தப் பாடத்தைத்தான் இவனும் பேசுகிறான்  என்று மட்டும் இப்னுவுக்குப் புரிந்தது.

*

ஒருநாள் இரவு. இப்னு தன் மனைவியிடம் பேசுவது வெளியே மரியத்துக்கு கேட்டது.  பதிலுக்கு அவள் அம்மா பேசியதின் அறைக்கதவு அதிர்ந்தது. ‘காசுபணம் செலவில்லாமெ கூட்டிக்குடுக்கப் பாக்குறியே நீ மனுஷனா’ எதையோ தூக்கி எறிகிறார். அது சுழலும் மின்விசிறியில் பட்டு  சிறகையே முறித்துக்கொண்டு கீழே விழும் சப்தம். எதையோ அறைவதுபோல் சப்தம் கேட்கிறது. அப்பாவை அடிக்கிறாரா, தன் முகத்திலேயே அறைந்துகொள்கிறாரா, அங்கிருக்கும் கட்டில் அலமாரிகளை அடிக்கிறாரா… அப்பாவின் குரல் கேட்கவில்லை. மரியத்தின் உயிர் வெளியே போய்விட்டு இப்னுவின் குரல் கேட்டதும் மீண்டும் மரியத்திடம் வந்து ஒட்டிக்கொண்டது. இப்னு சொன்னார். ‘மதம் முக்கியம். உறவுகள் முக்கியம். நட்புகள் முக்கியம். எல்லாவற்றையும் விட மரியம் முக்கியம். நாம் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவள் பறந்துவிடுவாள். அவளுக்குத் தெரியும். இல்லாவிட்டால், இந்த பத்தாம் மாடியிலிருந்து குதித்துவிடுவாள். அதுவும் அவளுக்குத் தெரியும். மகள் வேண்டுமா? மற்றதெல்லால் வேண்டுமா?

*

அடுத்த நாள். அம்மா மரியத்திடம் பேசினார். நேரடியாகவே தொடங்கினார். 

‘அப்பா சொல்வது உண்மையா?’

‘பொய்யையா அப்பா பேசுவார்’

‘நான் முடியாதென்றால் என்ன செய்வாய்?’

‘எனக்குத் திருமணம் செய்வீர்கள்தானே அது ஏன் என் விருப்பத்துக்கு இருக்கக்கூடாது?’

‘நான் மறுத்துவிட்டால்?’

‘மறுத்துப்பாருங்கள். மற்றதை அடுத்துப் பார்ப்போம்.’

மரியமா இப்படிப் பேசுகிறாள். இப்படிப் பேச மரியத்துக்குத் தெரியவே தெரியாது. தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் அப்பாவை நா கூசும் அளவுக்கு அம்மா பேசியதை மரியத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் விளைவுதான் இந்த வெடிப்பு. அம்மா திமிறினால் என்ன செய்யவேண்டும் என்ன பேசவேண்டும் என்று ஏற்கனவே யோசித்தே அவள் பேசுகிறாள். அம்மா பேசவில்லை. அவள் அந்த இரவு அப்பாவைப் பேசியது மரியத்தின் இதயத்தை ஆணியால் கிழித்தது. அம்மாவுக்குப் புரிந்தது. இனி பேச ஒன்றுமில்லை

*

ஒருவழியாக அம்மா சம்மதித்தார். இப்னு முகுந்தனிடன் பேசினார். முகுந்தன் சிங்கப்பூருக்குப் பறந்தான். அடுத்த நாள் திருமணப் பதிவறையில் மரியம், முகுந்தன், இப்னு, அம்மா ஆகியோருடன் பிரம்மகுரு அவரின் மனைவி சாட்சிக்காக. பதிவுத்திருமணம் முடிந்தது. 

அன்று இரவு பிரம்மகுரு விட்டில் திருமண நிகழ்வு முறைப்படி நடக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 100 பேர் கூடிவிட்டனர். வீட்டு வாசலில் லிங்கமும் பிறையும் கோலங்களில் சிரித்தன. பிரம்மகுருவுக்கு பகவத்கீதையும் தெரியும் குர்ஆனும் தெரியும். முகுந்தனுக்கு அவர்களின் கலாச்சாரப்படி மந்திரம் ஓதி, மாலை மாற்றி பிறகு மரியாவின் கழுத்தில் முகுந்தன் தாலியைக் கட்டினான். பிறகு இஸ்லாமிய முறைப்படி முகுந்தனுக்கு கலிமா சொல்லிக்கொடுத்து இப்னுவின் அலுவலக நண்பரின் மனைவி மரியத்துக்கு கருவமணியைக் கட்டினார். இரண்டு ஆல்பங்கள். ஒன்று இந்து முறை. என்றாவது முகுந்தனின் பெற்றோர் தன் மகனின் திருமணத்தைப் பார்க்கவில்லையே என்று கவலைப்படாமலிருக்க. இன்னொன்று முறைப்படிதான் செய்யப்பட்டது என்று இப்னுவின் உறவினர்களுக்குச் சொல்ல. அந்த இரவு விருந்தில் கேசரி கொஞ்சம் அதிகப்படியாகவே இனித்தது. 

*

இதோ முகுந்தன் மரியத்துடன் நியூயார்க்குக்குப் பறந்துகொண்டிருக்கிறான். முகுந்தன் செய்தது சரிதான் என்று ஒருநாள் அவனின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள். இந்த அளவுக்கு அவன் பிரியத்துக்கு அவர்கள் குறுக்கே நின்றாலும் இன்றுவரை வீட்டுச்செலவு மொத்தமும் முகுந்தன்தானே செய்கிறான். விமானம் தரையிறங்கும். காலதாமதமானாலும் தரையிறங்கும். முகுந்தனின் நம்பிக்கை வீண்போகவில்லை. இதோ நியூயார்க்கில்  முகுந்தனின் அப்பாவும் இப்னுவும்  பாகப்பிரிவின பார்துக்கொண்டிருக்கிறர்கள். எல்லாம் சுபம்.  நாளை மரியத்தின் மகனோ, பேரனோ அமெரிக்காவே அன்னாந்து பார்க்கும் உயரத்துக்கு உயரலாம்.  புரட்சிதான் புரட்சியை விதைக்கிறது. 

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation நம்பாதே நீ
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *