சுலோச்சனா அருண்

கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் வாசுகி நகுலராசா, காப்பாளர் நவா கருணரட்ணராசா, உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், ஒன்ராரியோ மாகாண அரசின் மாகாணமன்ற உறுப்பினரும் இணையமைச்சருமான வியேஜ் தணிகாசலம் மற்றும் ஒன்ராரியோ அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டின் போது, முதலில் முனைவர் பார்வதி கந்தசாமியின் வாழ்த்துரையும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனர் கமலவதனா சுந்தாவின் நூல்அறிமுக உரையும் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து தொகுப்பாசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் வெளியீட்டுரை இடம் பெற்றது. முனைவர் வாசுகி நகுலராசாவின் ஆய்வுரையைத் தொடர்ந்து கமலவதனா சுந்தா அவர்கள் சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு வைத்தார்.
தொகுப்பாசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில், நேரடியாகவும் மெய்நிகர் வழியாகவும் நடந்த தனது சிறுகதை பயிலரங்கில் பங்கு பற்றிய அனேகமான ஆரம்ப எழுத்தாளர்களின் கதைகளும் இதில் இடம் பெற்றிருப்பதாகவும் இளைய தலைமுறையினர் இப்பயிலரங்கில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் 26 கனடிய தமிழ்ப் பெண்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்ப்பெண்கள் ஏற்படுத்திய ஒரு சாதனையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இச்சிறுகதைத் தொகுப்பில், பூமிகா அன்புதாசன், மாலினி அரவிந்தன், சன்ரா யூட் பாலேஸ்வரன், குலமணி பிரான்சிஸ், சசிகலா ஜீவானந்தன், மணிமேகலை கைலவாசன், பத்மா கரு, சுந்ரீஸ்வரி காசிப்பிள்ளை, கேதா கிருபராஜன், நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு, விஜயராணி மதியழகன், அர்ச்சனா மோகனகுமார், நவகீதா முருகண்டி, யோகநாயகி மூர்த்தி, கௌசல்யா பார்த்தீபன், கலைமகள் புஸ்பநாதன், விமலாதேவி புசுப்பநாதன், கஜலக்ஸி புவனேஸ்வரன், நஸ்வியா சற்குணராசா, சுமதி செல்வா, இளவரசி செந்தில்குமார், வாணிசிறி சிவபாதசுந்தரம், செல்வி சோதி, கமலவதனா சுந்தா, தருணி தியாகராசா, கவிநயா விஜயதர்சன் ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் எழுதிய இளைய தலைமுறையினர் கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் தொகுத்து வெளியிட்ட இச்சிறுகதைத் தொகுப்பின் அச்சாக்கத்தை ஜே.ஜே பிரின்ரேசும், அட்டைப்படத்தை செல்வி நவீனி இராசையாவும், கணினி அச்சு உதவியை பிரவீனி இராசையாவும் பொறுப்பேற்றுச் செய்திருந்தனர். இந்த சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டின் போது, எழுத்தாளர்களுக்கான பாராட்டு நிகழ்வுகளும், சில கலைநிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன.
இதே போன்ற, எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைப் பயிலரங்கில் 2017 ஆம் ஆண்டு பங்குபற்றிய 16 கனடிய தமிழ் பெண்களின் சிறுகதைகள் அடங்கிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் கனடா மிஸசாகாவில் உள்ள சொப்கா பீல் குடும்ப மன்றத்தினர் வெளியிட்டிருந்தனர். கனடாவில் இதுவரை சுமார் 40 மேற்பட்ட தமிழ் பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களையே சாரும் என்பதையிட்டு குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகின்றோம்.
- சந்தி
- மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்
- ”வினை விளை காலம்”
- மீண்டும் ஓநாய்களின் ஊளைச்சத்தம்
- ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
- சொல்வனம் 340 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை