குரு அரவிந்தன்
இந்த உலகத்தில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன் முற்றாக அழிந்து போன டயர் வூல்வ் (Dire Wolf) என்று சொல்லப்படுகின்ற ஓநாய்களின் ஊளைச் சத்தம் சமீபத்தில் மீண்டும் பூமியில் நிஜமாகவே இயற்கையாகக் கேட்டது என்றால், எங்கிருந்து இந்த ஓநாய்கள் உயிருடன் வந்தன என்று ஆச்சரியப்படுவீர்கள். இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். முடியாது என்று நாங்கள் நினைத்திருந்த இந்த அதிசயத்தை கோலோசல் பயோசயன்ஸ் நிறுவனத்தின் (Colossal Biosciences) அறிவியல் நிபுணர்கள்தான் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஓநாயின் புதைவடிவங்களில் இருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களைப் பயன்படுத்தி மறுகட்டமைப்பின் மூலம் நவீன தொழில்நுட்ப குளோனிங் முறையின் உதவியுடன் அவர்களால் இதைச் சாதித்துக் காட்ட முடிந்திருக்கிறது. இந்த ஓநாய்கள் கனடாவின் வடக்கேயும், வெனிசுலாவின் தெற்கிலும் நீண்ட காலத்திற்கு முன் வாழ்ந்ததாக புதைபடிவ சான்றுகள் காட்டுகின்றன. முதலில் இந்த மரபணுக்களை சாம்பல் ஓநாய் செல்களாக மாற்றினார்கள். அதன்பின் ஓநாய்கள் போன்ற பெரிய உருவம் கொண்ட வேட்டை நாய்களை இரவல் தாய்களாகப் பயன்படுத்தினார்கள். அப்படி 1-10-2024 ஆம் ஆண்டு பிறந்த இரண்டு குட்டிகளுக்கு ரோமுலஸ், ரெமுஸ் என்றும் அதன்பின் பிறந்த பெண் குட்டிக்கு கலீசி என்றும் பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
பழங்கால உரோமானிய புராணங்களில் வரும் இரட்டைச் சகோதரர்களின் பெயரில் இருந்து ஆண் குட்களின் இந்தப் பெயர் எடுக்கப்பட்டது. ஓநாயிடம் பால் குடித்து அவர்கள் வளர்ந்ததாகப் புராணக்கதை கூறுகின்றது. கலீசி என்ற பெண் பெயர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டினின் ஏ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் தொடரின் பிரபஞ்சத்தில் டோத்ராக்கி போர்வீரரின் மனைவிக்கு வழங்கப்பட்ட பெயராகும்.
மரபணு திருத்தப்பட்ட இந்த ஓநாய் குட்டிகள் பரந்த தலைகள், அதிக சக்தி வாய்ந்த தாடைகள் மற்றும் தோள்களைக் கொண்டிருக்கின்றன. புதைபடிவ மரபணுவில் கண்டுபிடிக்கப்பட்ட நிறமி மரபணுக்களுடன் இணக்கமான வெள்ளைத் தோல் ஆகியவற்iயும்; கொண்டுள்ளன. வீட்டில் வளர்க்கும் நாய்கள் அல்லது சமூகமயமாக்கப்பட்ட சாம்பல் ஓநாய்கள் போலல்லாமல், இந்த ஓநாய் குட்டிகள் மனித பாசத்தில் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்று அதன் காப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
இதுபோன்று இப்படிக் காலத்தால் அழிந்துபோன விலங்குகளை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிக்கு இது ஒரு படிக்கல்லாக அமைந்திருக்கின்றது. இதேபோல மறைந்த உயிரினங்களான நீண்ட தந்தங்களைக் கொண்ட யானை போன்ற உருவம் கொண்ட கம்பளி மம்மத், டோடோ மற்றும் டாஸ்மேனியன் புலி போன்ற இனங்களுக்கும் பழைய மரபணுவைப் பயன்படுத்தி தொழில்நுட்ப வசதிகளோடு உயிரூட்ட கோலோசல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் கம்பளி மம்மத் குட்டியையும் எதிர்பார்க்கலாம். டைனசோக்களும் அறிமுகமாகலாம். வீட்டில் நாய்க்குட்டி, பூனைக்குட்டி வளர்ப்பது போல இவற்றையும் நீங்கள் விரும்பினால் வீட்டில் வளர்க்கலாம்.