ஆர் வத்ஸலா
தெரியும்
என்னை சந்திக்க
வர மாட்டாய் நீ
என்று
தெரியும்
பணியில் மூழ்கி இருக்கும்
உன்னை சந்திக்க நான் வருவதை
விரும்ப மாட்டாய் நீ
என்று
தெரியும்
என்னை கைபேசியில்
அழைக்க மாட்டாய் நீ
என்று
தெரியும்
பணியில் மூழ்கி இருக்கும்
உன்னை
நான் கைபேசியில் அழைப்பதை
விரும்ப மாட்டாய் நீ
என்று
தெரியும்
எனக்கு நீ குறுஞ்செய்தி
அனுப்ப மாட்டாய்
என்று
தெரியும்
பணியில் மூழ்கி இருக்கும்
உனக்கு
நான் குறுஞ்செய்தி அனுப்புவதை
விரும்ப மாட்டாய் நீ
என்று
ஒரு முறை
நீ சொன்னாய்
எனது அன்பை மட்டும்
என்றைக்கும்
சந்தேகிக்காதே
என்று
நான்
தலையசத்தேன்
அசட்டுத்தனமாக –
என் மனதை எங்கு புதைப்பது
என்று
உன்னை கேட்காமல்